ஸ்ரீநிவாசப் பெருமான் சங்கு - சக்கரம் இரண்டையும் பெற்ற சுவையான வரலாறு திருப்பதியில் அருள் புரிந்து வரும் ஸ்ரீநிவாச பெருமானுக்கு ஆதி காலத்தில் சங்கு - சக்கரம் முதலிய சின்னங்கள் இருந்தது இல்லை. ஆதலால் ஒரு சாரார் இம்மூர்த்தியை கங்கை - பிறைச் சந்திரன் - நாகம் முதலியவற்றை திருமுடியில் சூடிய சிவபெருமான் எனக் கருதி பக்தியுடன் உபாசித்து வந்தனர்.
'குன்று இருக்கும் இடமெலாம் குமரக் கடவுள் இருப்பிடம்' என்னும் கருத்தும் நிலவியதால் மற்றொரு சாரார் இம்மூர்த்தியை முருகப் பெருமானாக எண்ணித் துதித்து வந்தனர். பாற்கடல் வாசனான ஸ்ரீமன் நாராயண மூர்த்தியாகவும் ஒரு பிரிவினர் எண்ணி வழிபட்டு வந்தனர்.
பரம்பொருளுக்கு இயல்பில் உருவம் இல்லை. ஆன்மாக்கள் உய்வு பெரும் பொருட்டு இறைவன் பரம கருணையுடன் சிவபெருமான் - அம்பிகை - பரந்தாமன் - ஸ்ரீகணபதி - முருகப் பெருமான் என்று பல்வேறு முக்கிய வடிவங்கள் எடுத்துக் கொள்கிறான் என்பது இந்து மதத்தின் சாரம். இருப்பினும் ஷன்மதம் என்று அழைக்கப் பெறும் இந்து தர்மத்தின் ஆறு மார்கங்களுக்கும் (சைவம்; வைணவம்; சாக்தம்; காணபத்தியம்; கௌமாரம்; சௌரம்) ஆகமம் - பூஜை முறைகள் - மந்திரங்கள் - அலங்காரங்கள் - விழாக்கள் - உத்சவங்கள் முதலியன வேறுபடும். இதனால் இறை வடிவத்தை அறிவது திருக்கோயிலுக்கு மிகவும் அவசியம் ஆகிறது. திருமலைக்கு வருகை புரிந்த ஸ்ரீ ராமானுஜர் இறைவனின் சங்கல்பத்தை அறியும் எண்ணம் கொண்டார். அர்த்த ஜாம பூஜை நிறைவுற்றதும் சங்கு - சக்கரம் - திரிசூலம் - ஞான வேல் முதலிய தெய்வச் சின்னங்களை பெருமானின் முன் வைத்து 'உமக்கு இத்தலத்தில் எந்த வடிவத்தில் எழுந்தருள திருவுள்ளமோ அந்த சின்னத்தை ஏற்று அருளும்' என்று விண்ணப்பித்துக் கருவறையைத் தாளிட்டார்மறு நாள் காலையில் கருவறையைத் திறந்ததும், இறைவன் சங்கு - சக்கரங்களை திருக்கரங்களில் ஏந்தி, திருமலையில் தாம் ஸ்ரீநிவாசப் பெருமானாக உறைவதை உணர்த்தி அருளினான். அனைவரும் பெரு மகிழ்வு கொண்டு ஸ்ரீநிவாசப் பெருமானையும், ராமானுஜரையும் போற்றித் துதித்தனர்.
வைணவ மரபில் 'சங்கு - சக்கரங்களை' இரு தோள்களிலும் பொறித்துக் கொள்ளும் தீட்சை முறைக்கு 'பஞ்ச சமஸ்காரம்' என்று பெயர். அடையாளங்களை பொறிப்பவர் 'ஆச்சாரியன் (குரு)' என்கிற ஸ்தானம் பெறுகிறார். இம்முறையின் படி ஸ்ரீநிவாசப் பெருமானுக்கு 'ஸ்ரீ ராமானுஜர்' ஆச்சாரியன் ஆகிறார். ஸ்ரீமதே ராமானுஜாய நமக!!! |
No comments:
Post a Comment