கிராம வளர்ச்சிதான் நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு அடையாளமாகும். அந்த வகையில், கிராம பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை விவசாயம் என்றாலும், அதில் முக்கியபங்கு வகிப்பது மாடு வளர்ப்புதான். சிறு குழந்தை முதல் குடு குடு முதியோர்வரை அனைவருக்கும் பால் என்பது மிகவும் முக்கியமான ஒரு உணவு பொருளாகும். பால் என்பது அதோடு முடிந்து விடுவதில்லை. பாலைத் தொடர்ந்து தயிர், மோர், வெண்ணெய், நெய் என்று பல பொருட்கள் அதன்பின் தொடர்ந்து கிடைக்கும்.
கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் மூலம் மாவட்டங்களில் இருந்து, பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களால் மாடு வளர்ப்போரிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து, ஆவின் என்ற பெயரில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வளவு செலவுகள் இருப்பதால்தான், கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆவின் விற்பனை சென்னை உள்பட பெரிய நகரங்களில்தான் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஆவின் மட்டுமல்லாமல், பல தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் கிராமப்புறங்களில் தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் பால் விற்பனை நடக்கிறது. மாநிலம் முழுவதும் தினமும் ஏறத்தாழ ஒரு கோடியே 50 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஆவின் மூலம் 21 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் சென்னை நகரில் மட்டும் மிக அதிகமாக 11 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனை ஆகிறது. தற்போது விவசாயிகளிடம் இருந்து பசும்பால் லிட்டருக்கு 23 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த விலை தங்களுக்கு கட்டுப்படியாகவில்லை, உயர்த்தித்தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையில், தனியார் பால் நிறுவனங்கள் இதைவிட அதிகமாக அதாவது ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை கூடுதலாக கொடுத்து வாங்க முற்பட்டதால், ஆவின் நிறுவனமும் பசும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், எருமைப்பால் கொள்முதல் விலையை 4 ரூபாயும் உயர்த்த அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இதுவரையில் சரிதான். ஆனால், பொதுமக்களுக்கான விற்பனை விலையை இதுவரையில் இல்லாத அளவுக்கு லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தியிருப்பதுதான், பொதுமக்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனி பொதுமக்கள் பதப்படுத்திய பாலை லிட்டருக்கு 34 ரூபாய் கொடுத்து வாங்கவேண்டியது இருக்கும். தனியார் பால் விலை 38 ரூபாய் என்றாலும், தரம் சரியாக இல்லையென்றால் பொதுமக்கள் அந்தப்பக்கம் சாய வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.6.25 உயர்த்தப்பட்ட நிலையில், இப்போது ஒரேநேரத்தில் 10 ரூபாய் உயர்த்தியதற்கு பதிலாக, ஆண்டுக்கு 3 ரூபாயாக உயர்த்தியிருக்கலாமே என்ற கருத்து மக்களிடம் நிலவுகிறது. மேலும் இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் பெருகும் இந்த நேரத்தில், இயற்கை விவசாயத்துக்கு அடிப்படை இயற்கை உரம்தான். அதற்கு தேவை மாட்டு சாணம்தான். எனவே, கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் மாடுகள் மேய மேய்ச்சல் நிலங்கள் இல்லாததாலும், கால்நடை தீவனங்கள் விலை அதிகமாக உயர்ந்துவிட்டதாலும் விவசாயிகள் மாடு வளர்ப்பை மறந்துவிட்டனர். மாட்டு தீவனங்களுக்கான மானியம் இப்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் வழங்கி மாடு வளர்ப்பை ஊக்குவித்தால், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பால் குறைந்த விலைக்கு பொதுமக்கள் வாங்கமுடியும். அந்தந்த இடங்களில் மாடுவளர்க்கும் விவசாயிகள் பாலைக்கறந்து அங்கேயோ, அருகில் உள்ள ஊர்களிலோ விற்பதன்மூலம் அதிக செலவோ, லாபமோ இல்லாமல் விற்கமுடியும். பல ஆண்டுகளுக்கு முன்பு சென்னை நகரில்கூட வீட்டு வாசலுக்கே மாட்டை கொண்டு வந்து கண்ணெதிரிலேயே பால் கறந்து தந்தார்கள். விவசாயிகளும், பொதுமக்களும் ஒரேநேரத்தில் பலன்பெற மாடு வளர்ப்பை அரசு ஊக்குவிக்க வேண்டும். | Timeline Photosமாடு வளர்ப்பில் தீவிரம் காட்டுவோம் http://www.dailythanthi.com/Thalayangam?day=29/10/2014 |
|
|
No comments:
Post a Comment