மந்திர சக்தி நிறைந்த மரம்.
அவள் விகடன் கட்டுரை.
பயம்... கிட்டத்தட்ட எல்லோரையுமே பிடித்து ஆட்டுவது! உயிர் பயம், உறவு பயம், திருடர் பயம்... என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பயம். சிலருக்கு எதற்கு எடுத்தாலும் பயம் இருக்கும். ஆனால், எல்லோருக்கும் இருக்கும் பயம் என்ன தெரியுமா? பண பயம்தான்! கட்டுக்கட்டாக கரும்புகளை சாப்பிடும் யானைக்கும் பசி... சிறு சர்க்கரைத் துண்டுக்கு அல்லாடும் எறும்புக்கும் பசிதான்! அதுபோல், பணக்கஷ்டம் யாருக்குத்தான் இல்லை..?! லட்சாதிபதிகளுக்கும் பணக் கஷ்டம் வருகிறது. பிச்சாதிபதிகளுக்கும் பணக்கஷ்டம் வருகிறது. பணம் இல்லாதவர்களுக்கு 'பணம் இல்லையே!' என்ற கஷ்டம்! பணம் இருப்பவர்களுக்கு, 'ஐயோ பணம் செலவாகிறதே!' என்ற கஷ்டம்!
நண்பர் ஒருவர்... பணக் கஷ்டத்தாலே நொந்து போயிருந்தார். அவருக்கு தேவைப்பட்டது என்னவோ வெறும் பத்தாயிரம் ரூபாய்தான்! அவரது கஷ்டத்தைப் பார்த்து பெரிய மனசு படைத்த முதலாளி, அதை நண்பருக்குக் கொடுத்தார். சரி... மனிதர் இனிமேல் நிம்மதியாக இருப்பார் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார். ஆனால், ஒரே வாரத்தில் முதலாளியின் எதிரில் நின்றார் நண்பர்.
விசாரித்ததில்... ''எங்கிட்ட பணம் இல்லாதப்போ, என் பொண்ணுங்களோ பசங்களோ அவங்க பிரச்னைகளை என்னிடம் சொன்னதில்லை. ஆனா பணம் வந்ததுன்னு தெரிஞ்சதும், ஆளாளுக்கு பிரச்னைகளை கொட்ட ஆரம்பிச்சிட்டாங்க. இப்ப பத்து லட்ச ரூபாய் கிடைச்சாதான் என்னால் எல்லாப் பிரச்னையையும் சமாளிக்க முடியும் போல இருக்கே...'' என்று தலையை சொறிந்தார்
. பணம் இல்லையே என்று பயந்தவ ருக்கு, பணம் வந்தவுடனே பயம் போகணும் இல்லையா? ஆனால், அதிகரித்துவிட்டதே! இப்படி, பண பயம்தான்னு இல்லை... வயதானால் முதுமை பயமும் வந்துவிடும் சிலருக்கு!
ஒரு பெரியவர்... முதுமையை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று பயந்தார். காது வேறு மந்தமாகி வந்தது. 'கேட்கும் திறன் கூர்மையானால் எவ்வளவு நன்றாக இருக்கும்..?' - ஏங்கியபடி, ஒரு மரத்தின் கீழ் படுத்துத் தூங்கினார். அது மந்திர சக்தி நிறைந்த மரம். கண்விழித்த போது, வெகு தொலைவில் டீக்கடையில் இருவர் பேசுவதுகூட தெளிவாகக் கேட்டது. சந்தோஷத்துடன் வீட்டுக்கு ஓடினார்.
வீட்டு வாசலில் செருப்பைக் கழட்டும்போதே, ''ஓட்டல்ல இருந்து வாங்கி நாம சாப்பிடுறத அந்த கிழடு பார்த்தா வயிறெரியும். எல்லாத்தயும் எடுத்து உள்ளே வை!'' மருமகள் சொன்னது காதில் விழுந் தது. உடனே நண்பரின் வீட்டுக்கு ஓடினார். ''வேலை வெட்டி இல்லாத கிழடுகிட்ட என்ன சகவாசம் வேண்டிக் கிடக்கு?'' - நண்பரின் மனைவி பேசியது காதில் விழுந்தது... அதிர்ச்சியடைந்தவர், 'அடக் கடவுளே... இந்த அவஸ்தை இனி வேண்டாம்...' என்று கதறியபடி மந்திர சக்தி கொண்ட மரத்தை நோக்கி ஓடினார்.
எல்லாவற்றுக்கும் பயந்து கொண்டே வாழ்வது, உலகில் இருந்துகொண்டே இறப்ப தற்குச் சமம். சரிதான்... ஆனால், நம்மாளு எதற்கு பயப்படுகிறார் பாருங்கள்...
''ஐயய்யோ பயமாயிருக்கு...'' அலறியபடி ஆபரேஷன் தியேட்டரை விட்டு ஓடிவந்தார் நோயாளி.
''என்ன ஆச்சு?''- உறவினர் கேட்டார்.
''பயப்படாதீங்க. இது சின்ன ஆபரேஷன் தான்னு நர்ஸ் சமாதானம் சொன்னா பயமா யிருக்காதா?''
''அட முட்டாளே. இதுக்கு ஏன் பயப்படற?''
''நர்ஸ் ஆறுதல் சொன்னது எனக்கு இல்லே... ஆபரேஷன் செய்ய வந்த டாக்டருக்கு! |
No comments:
Post a Comment