தீ அல்லது பட்டாசு விபத்தினல் காயம் பட்ட குழந்தையின் முதல் தேவை என்ன தெரியுமா? ஒரு சுத்தமான துணியை தீக்காயம் பட்ட இடத்தில் சுற்றி உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
எதிர்பாராதவிதமாக பட்டாசால் நெருப்புக் காயம் பட்டுவிட்டால் உடனடியாக காயம் பட்ட இடத்தை தண்ணீரில் நனைக்க வேண்டும். தீக்காயம் பட்ட இடம் எரிச்சல் அடங்கிக் குளிரும். வலி குறையும். தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றிலும் உள்ள திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறையவும் வாய்ப்பு உண்டு. பின்னர், ஒரு சுத்தமான துணியினால் தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றி உடனடியாக காயம் பட்டவரை அருகில் உள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.
வெடி விபத்தினால் முகத்தில் காயம் ஏற்பட்டு கண்ணிலும் காயம் ஏற்பட்டுவிட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டு கழுவவே கூடாது. சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
தீக்காயம் ஏதேனும் கண்ணில் பட்டுவிட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனா மை, ஜெர்ஷியன் வைலட், பக்கத்துவீட்டார் சொல்லும் ஆயின்ட்மென்ட் போன்றவற்றை போடக்கூடாது. தீப்பிடித்தால் ஓடாமல் தரையில் உருண்டு தீயை அணைக்க முற்பட வேண்டும். எந்த வெடியையும் கையில் வைத்துக் கொளுத்தக்கூடாது.
பாட்டில் மூலமாக ஏவப்பட்ட ஒரு ராக்கெட் வெடித்து ஒரு குழந்தையின் அல்லது ஒருவரது கண்ணை கண்ணாடித் துகளோ அல்லது இரும்புத் துகளோ தாக்கிவிட்டது. ஆனால் கண்களிலிருந்து ரத்தம் ஏதும் வரவில்லை. வலியும் இல்லை. நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? உடனடியாக ஒரு மருத்துவமனைக்கு சம்பந்தப்பட்டவரை அழைத்துச்செல்வதே சிறந்த காரியம். ஏனெனில் பல நேரங்களில் கண் சார்ந்த விபத்துக்களின் விளைவுகள் உடனடியாகத் தெரிவதில்லை. உடனடியாகக் கண் மருத்துவரின் கவனிப்பு வழங்காவிட்டால் முழுமையான பார்வையிழப்பு உட்பட மோசமான விளைவுகள் ஏற்படலாம்.
கண்விபத்துக்குள்ளான குழந்தை அதிக வலியின் காரணமாக கண்ணை அழுத்திப் பிடித்துக் கொள்ளவோ அல்லது கசக்கவோ விரும்புகிறது. இருப்பினும் நாம் செய்யவேண்டியது என்ன தெரியுமா? குழந்தையின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு உடனடியாக கண் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். கண்களைக் கசக்குவதனால் ரத்தம் அதிகமாக வெளியேறலாம் அல்லது காயத்தின் வீரியம் அதிகறிக்கலாம்.
நெருப்புக்காயத்தினால் காயம் பட்ட குழந்தைய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு வலி நிவாரணியாக எந்த மருந்தையும் கொடுக்கக் கூடாது. ஆஸ்ப்பிரின் அல்லது இபுப்ரோபேன் போன்ற மருந்துகளை வலியைத் தாங்கிக் கொள்வதற்காகக் கொடுப்பது தவறு. குழந்தைகளைப் பொறுத்தமட்டில் ஆஸ்ப்பிரின் கண்டிப்பாகக் கொடுக்ககூடாது.இபுப்ரோபேன் ரத்தக் குழாய்களை மென்மையானதாக்கி விடும். எனவே ரத்தம் மிக அதிகமாக வெளியேற வாய்ப்பு உள்ளது. எனவே, ஒருகணம் கூட தாமதிக்காமல் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே நல்லது.இதை கருத்தில் கொண்டு பாதுகாப்பான நடவடிக்கைகளோடு தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடுவோம்! |
No comments:
Post a Comment