ஒரு ஆசிரியர் நினைச்சா ஊரையே மாத்தலாம்!
மாற்றம் செய்த நேரம்:10/16/2014 2:42:28 PMகுரு வணக்கம் - தேன்மொழி டீச்சர்
ஓர் ஆசிரியை நினைத்தால் ஒரு மாணவனை மாற்றலாம். அதிகபட்சம் ஒரு பள்ளியை மாற்றலாம். ஆனால், ஓர் ஆசிரியை தன்னலமற்று பணியாற்றினால் ஒரு கிராமத்தையே மாற்றலாம் என்பதை நிரூபித்திருக்கிறார் தேன்மொழி. திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை. செங்கற்சூளைகளில் வெந்து தணிந்த பெற்றோருக்கு விழிப்புணர்வூட்டி, குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டு வந்து, கல்வியால் அவர்களின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறார். பள்ளியையும் கல்வியையும் கண்டு மிரண்ட பிள்ளைகளை பள்ளிக்குக் கொண்டு வருவதற்காக அவர் கையாண்ட கற்பித்தல் முறைகள், கல்வித்துறையில் சிறந்த முன்மாதிரியாகக் கருதப்படுகின்றன. தனியார் பள்ளிகள் பெரும் பணம் பறித்து தயாரித்த ஸ்மார்ட் கிளாஸ் சிஸ்டத்தை வெறும் சுவர்களைக் கொண்டே செயல்படுத்தி சாதித்திருக்கிறார் தேன்மொழி!
தேன்மொழிக்கு சொந்த ஊர் செய்யாறு அருகில் உள்ள பாராசுரம். அப்பா ராதாகிருஷ்ணன் தொடக்கக் கல்வி அலுவலராக பணியாற்றியவர். அம்மா கற்பகம் குடும்ப நிர்வாகி. சகோதரர் பிரவீன்குமார் பொறியாளர். "அப்பாதான் எனக்கு ரோல் மாடல். அவருக்கு சமூகத்தில கிடைச்ச மரியாதையும், அதுக்காக அவர் எடுத்துக்கிட்ட முனைப்பும்தான் ஆசிரியர் பணி மேல ஆர்வத்தை உண்டாக்குச்சு. எங்க மேல என்ன கவனம் செலுத்துவாரோ, அதே கவனத்தை எல்லாப் பிள்ளைகள் மேலயும் காட்டுவார். ஸ்ரீபெரும்புதூர் வட்டாரத்துக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலரா பணியாற்றிய போது, ஒவ்வொரு பள்ளிக்கும் ஸ்டார் வேல்யூ கொடுத்து கல்வி, சுகாதாரம்னு பல விஷயங்களை மேம்படுத்தினார். ஒரு ஆசிரியர் நினைச்சா பள்ளியை மட்டுமில்லாம ஊரையை மாற்ற முடியும்கிற நம்பிக்கையை விதைச்சதும் அவர்தான். சிறந்த தொடக்கக்கல்வி அலுவலருக்கான அரசு விருதும் பெற்றிருக்கார்.
அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியிலயும் செய்யாறு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலயும் படிச்சேன். தெள்ளார்-ல ஆசிரியர் பயிற்சி முடிச்சேன். தண்டராம்பட்டு பக்கத்துல இருக்கிற மோத்தக்கல்னு ஒரு மலை கிராமத்துல வேலை. தேன் எடுக்கவோ, வனப்பொருள் சேகரிக்கவோ போற பெரியவங்களோட பிள்ளைகளும் போயிடுவாங்க. 'படிப்பு வாழ்க்கைக்கு அவசி யமில்லை'ன்னு நம்பின பெற்றோர்... தொடக்கமே சவாலாத்தான் இருந்துச்சு. அந்தப் பள்ளியில ஒருமாதம் மட்டும்தான் வேலை செஞ்சேன்.அதுக்குள்ள நிறைய படிப்பினைகள்... சமூகம், பொருளாதாரம், மக்களோட வாழ்க்கை நிலைன்னு ஒரு ஆசிரியர் நிறைய விஷயங்கள்ல புரிதலோட இருக்கணும்... அப்போதான் மக்களுக்கு நெருக்கமா நின்னு நம்பிக்கை ஊட்ட முடியும். மோத்தக்கல் கிராமம் எனக்கு மிகச்சிறந்த அனுபவங்களை உருவாக்குச்சு.
அங்கிருந்து வந்தவாசிக்கு அருகே உள்ள எச்சூர் கிராம தொடக்கப் பள்ளிக்கு வந்தேன்.எச்சூரும் கல்வி ரீதியா மிகவும் பின்தங்கிய கிராமம்தான். விவசாயம் இல்லாத நேரத்துல செங்கற்சூளைக்குப் போவாங்க. பெரியவங்களுக்கு இணையா குழந்தைகளும் பொருளீட்ட வேண்டிய நிர்ப்பந்தம். இடைநின்ற குழந்தைகளும் ஏராளம். அவங்களை பள்ளிக்கு கொண்டு வர்ற பணி சவாலானதா இருந்துச்சு. குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினா குடும்ப வருமானத்தில கணிசமான பகுதி குறைஞ்சு போகும். அதனால பெரும்பாலான பெற்றோர்கள் எங்க கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கலே. இருந்தும் தொடர்ச்சியா முயற்சி செஞ்சோம். வீடு, வேலை செய்ற இடம்னு அவங்க பின்னாடியே சுத்தினோம். இந்த அவதி உங்களோடவே போகட்டும்... உங்க குழந்தைகளோட எதிர்காலமாவது மாறட்டும்னு சொல்லிச் சொல்லி போராடி குழந்தைகளை பள்ளிக்குக் கொண்டு வந்தோம்.
3ம் வகுப்போட இடை நின்ற ராஜேந்திரன்னு ஒரு பையன்... அப்பா இறந்துட்டார். அம்மா கூட வேலைக்குப் போய்க்கிட்டிருந்தான். அவனை திரும்பவும் பள்ளிக்கூடத்துக்கு கொண்டு வந்தோம். இப்போ அவன் தீயணைப்புத் துறையில வேலை செய்றான். அந்த மாதிரி நிறைய குழந்தைகள் வாழ்க்கையை கல்வி மாத்தியிருக்கு... - பெருமிதமாகச் சொல்கிறார் தேன்மொழி. எச்சூரில் இருந்து, தான் படித்த அனக்காவூர் தொடக்கப் பள்ளிக்கே வந்தார் தேன்மொழி. அவருக்கு ஆசிரியைகளாக இருந்த கலைச்செல்வி, புனிதவதியோடு இணைந்து பணியாற்றினார். "என் ஆசிரியைகளோடு பணியாற்றினதுஉண்மையிலேயே அற்புதமான அனுபவம். அவங்க மகள் மாதிரி என்னை நடத்தினாங்க. அங்கேதான் கற்றல்ல சில பரீட்சார்த்த முயற்சிகளை செஞ்சு பாத்தோம். அனக்காவூர்லயும் நிறைய இடைநிற்றல். 75 சதவிகித மக்கள் விவசாயக் கூலிகள்.
ஏரிப்பாசனத்தை நம்பிய விவசாயம். மழை பெஞ்சா விவசாயம் நடக்கும். இல்லைன்னா செங்கற்சூளைக்கு போயிடுவாங்க. பிள்ளைகளும் அவங்க கூடவே போயிடுவாங்க. தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப்பள்ளிகள்ல மாணவர்களை ஈர்க்க ஏகப்பட்ட ஏற்பாடுகள் உண்டு. நிறைய நவீன உபகரணங்கள், ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள், கையேடுகள், உளவியல் பயிற்சிகள்... பயிற்சிகள்ல சொல்லப்படுற விஷயங்களை நடைமுறைப்படுத்தினாலே பள்ளியோட முகத்தை மாத்திட முடியும். நாங்க அப்படியான முயற்சிகள்ல இறங்கினோம். அறிவியல், கணிதம் மாதிரி குழந்தைகளுக்கு கசக்கிற விஷயங்களை பாடல்கள் மூலமாக கத்துக் கொடுக்க ஆரம்பிச்சோம். உதாரணத்துக்கு 5ம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில எலும்பு மண்டலம்னு ஒரு பாடம்... அதுல மூட்டுகள் பற்றி செய்திகள் வரும். அதையே எளிமையான பாடலா மாத்தினேன்.
'எலும்புகள் இரண்டும் இணையுமிடம்
மூட்டுகள் என்றே பெயர் பெறுமாம்
மூட்டுகள் இரண்டு வகைப்படுமாம்
அசையா மூட்டு கபாலமாம்
அசையும் மூட்டு நான்காகும்
தோள்பட்டை எலும்பும்
மேல்கை எலும்பும்
இணையுமிடம்
பந்துக்கிண்ண மூட்டாகும்
கபால எலும்பும்
முதுகெலும்பும்
இணையுமிடம்
முளை மூட்டாகும்...'
இப்படிப் போகும் அந்தப் பாடல். இதை எளிதா குழந்தைகள் புரிஞ்சுக்கிட்டு மனப்பாடம் செஞ்சிடுவாங்க. விடுகதைகள், கதைகள், விளையாட்டுகள் மூலமாவும் பாடம் நடத்த ஆரம்பிச்சோம். அத்தனை ஆசிரியர்களும் தோளோடு தோள் சேர்ந்து நின்னு ஒத்துழைச்சது உண்மையிலேயே வரம்தான். அனக்காவூர் பள்ளியை மாதிரிப் பள்ளி அளவுக்கு மாத்திக் கொண்டு வந்தோம். அங்கிருந்து, செய்யாறு பக்கத்தில இருக்கிற இருங்கல் மேட்டுக்காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு தலைமை ஆசிரியையா வந்தேன். பழங்குடி மக்கள் வசிக்கிற ஊர். பல பேருக்குத் தொழில் மரம் வெட்டுறது. மாசத்துல பாதி நாள் வேறு ஊருக்குப் போயிடுவாங்க.
போகும் போது குழந்தைகளையும் கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க. வயதானவங்க மட்டும்தான் ஊரில் இருப்பாங்க. அதனால நிறைய குழந்தைகள் பள்ளியில இருந்து இடை நின்னு தொழிலாளர்களா மாறிடுவாங்க. அவங்களைப் பள்ளிக்குக் கொண்டு வர்ற முயற்சியில இறங்கினோம். அது அவ்வளவு எளிதான வேலையா இல்லை. புள்ளைகள வீட்டுல விட்டுட்டுப் போனா சாப்பாடு யாரு போடுவான்னு கேட்டாங்க. மிக நியாயமான கேள்வி. மதியம் சத்துணவு கிடைக்கும். காலையிலயும் ராத்திரியும் யாரு உணவு கொடுப்பாங்க..? இரண்டு வேளையும் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செஞ்சா குழந்தைகளை அனுப்புவீங்களான்னு கேட்டேன்.
சாப்பாடு போட்டீங்கன்னா, வீட்டில இருக்கிற தாத்தா, பாட்டிகள்கிட்ட பிள்ளைகளை விட்டுட்டுப் போறோம்னு சொன்னாங்க. எங்க சி.இ.ஓ. கருணாகரன் சார், தாராளமா செய்ங்கன்னு அனுமதி கொடுத்தார். ஊர்ல உள்ள பெரிய மனிதர்களைக் கூப்பிட்டுப் பேசினோம். நாங்க மாசாமாசம் வீட்டுக்கு 1 கிலோ அரிசி தர்றோம். அதை வச்சு சாப்பாடு போடுங்கன்னு பெரிய மனதோட முன் வந்தாங்க. சத்துணவு சமைக்கிறவங்களை வச்சு மூணு வேளையும் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செஞ்சோம். எல்லாப் பெற்றோரும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பினாங்க. பிள்ளைகள் பள்ளிக்கூடம் வந்தாச்சு. அவங்களை தக்க வைக்கிற பணி ஆசிரியர்களுடையது. ஆசிரியர்கள் ஒத்துழைப்போட கற்பிக்கும் முறையை மாத்தினோம்.
உடற்கல்வி, பாட்டு, நடனம், கதை, நாடகம்னு வகுப்பறையை மாணவர்களுக்கு பிடித்த மாதிரி உருவாக்கினோம். மாணவர்களை பேசவிட்டு ஆசிரியர்களான நாங்க கேட்டோம்... தொடக்கக்கல்வி அடித்தளம் மாதிரி. அதை வலுவா போடலைன்னா உயர்கல்வி ஆட்டம் கண்டுடும். அதனால தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு. வெறும் மனப்பாடமா இல்லாம புரிஞ்சு, உள்வாங்கி கத்துக்கிற விதமா பயிற்றுவிப்பு முறையை வடிவமைச்சோம். சார்ட் பேப்பர்ல நிறைய எழுத்துகளை உருவாக்கினோம். தமிழுக்கு மஞ்சள், ஆங்கிலத்துக்கு ரோஸ், கணக்குக்கு வெள்ளை, அறிவியலுக்கு நீலம், சமூக அறிவியலுக்கு பச்சைன்னு மாணவர்களே அடையாளம் கண்டுபிடிக்கிற மாதிரி அட்டைகளை வேறுபடுத்தி தேடலைத் தூண்டினோம். 95-96கள்ல நாங்க செயற்படுத்தின விஷயம்தான் 2004ல 'செயல்வழிக்கற்றல்'கிற பேர்ல எல்லாப் பள்ளிகள்லயும் செயல்பாட்டுக்கு வந்துச்சு.
ஒவ்வொரு குழந்தைக்கும் இருந்த தனித்திறமையை கண்டுபிடிச்சு அது தொடர்பா சிறப்பு பயிற்சிகள் கொடுத்தோம். செஸ், ஓவியப் பயிற்சிகளும் கொடுக்க ஆரம்பிச்சோம். பிள்ளைகள் முழுமையான ஈடுபாட்டோட பள்ளிக்கு வர ஆரம்பிச்சாங்க. 5ம் வகுப்பு முடிக்கிறதோட விட்டுடாம குழந்தைகளை தொடர்ச்சியா கண்காணிச்சோம். யார் யார் 6ம் வகுப்புக்குப் போறாங்க, யாரெல்லாம் உயர்கல்வி படிக்கப் போறாங்கன்னு பதிவேடு தயாரிச்சு பராமரிச்சோம். படிக்கிற மாணவர்களுக்கு தேவையான உதவிகள் செஞ்சோம். மத்தவங்ககிட்ட உதவிகள் வாங்கிக் கொடுத்தோம். மேற்கல்விக்கு பிள்ளை களை அனுப்பாத பெற்றோரிடம் பேசி அனுப்ப வச்சோம்.
2004ல அனக்காவூர் காலனி தொடக்கப்பள்ளிக்கு வந்தேன். எனக்கு முன்னால வேந்தன்னு ஒரு ஆசிரியர் அந்தப் பள்ளியில தலைமை ஆசிரியரா இருந்தார். பி.ஹெச்டி. முடிச்சவர். அவர்கிட்ட இருந்துதான் கூடுதலான அர்ப்பணிப்பைக் கத்துக்கிட்டேன். பள்ளியை மாணவர்களுக்கு நெருக்கமா கொண்டு போனவர். அவரையே முன்மாதிரியா வச்சு செயல்பட்டேன். அனக்காவூர் காலனியில மொத்தம் 120 குடும்பங்கள். அடித்தட்டு மக்கள்தான். குறிப்பிட்ட கால வரம்பு நிர்ணயிச்சு அதுக்குள்ள குழந்தைகள் எல்லாரையும் பள்ளிக்கூடத்துக்கு கொண்டு வந்தோம். அடுத்து, பள்ளிச் சூழலை மாற்றும் வேலையில இறங்கினோம். சுத்திலும் இருந்த இடத்தைச் செப்பனிட்டு தோட்டம் போட்டோம். கழிவுநீர் தோட்டத்துக்கு போய் விழுற மாதிரி லைன் அமைச்சோம். கட்டிடங்களை சரி செஞ்சோம். பள்ளிச்சூழல் குழந்தைகளை ஈர்க்கிற மாதிரி மாறிடுச்சு.
அதுக்குப்பிறகு கற்பித்தல்ல கவனம் செலுத்தினோம். அட்டைகள், காகிதங்கள், சார்ட் பேப்பர்கள்னு எதைப் பயன்படுத்தினாலும் குறைந்த காலத்துக்குள்ள அது கிழிஞ்சோ, அழிஞ்சோ போயிடுது. அதுக்கு மாற்றா என்ன செய்யலாம்னு யோசிச்சேன். அப்போதான், 'இந்தச் சுவர்கள் எல்லாம் சும்மாதானே இருக்கு'ன்னு தோணுச்சு. சுவரெல்லாம் கல்வின்னு ஒரு திட்டத்தை ஆரம்பிச்சோம். பாடத்திட்டங்கள்ல இருக்கிற முக்கியமான அம்சங்களை சுவர்கள்ல எழுத்தும் சித்திரமுமா வரைஞ்சிட்டோம். பள்ளிக்கே ஒரு அழகு வந்ததோட, பிள்ளைகள் முன்னைவிட ஈடுபாட்டோட விஷயங்களை உள்வாங்கிக்கிட்டாங்க. இப்போ நாங்க செஞ்ச இந்த வேலையை இந்தப் பகுதியில இருக்கிற 25க்கும் மேற்பட்ட பள்ளிகள்ல செஞ்சிருக்காங்க... என்கிறார் தேன்மொழி.
வித்தியாசமான கற்பித்தல் முறை மற்றும் நிர்வாகத்துக்காக இந்தப் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருதை தமிழக அரசு வழங்கியுள்ளது. பள்ளிச் சுவர்களே பாடப் புத்தகங்களாக மாறியிருக்கிறது. உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள், ஆங்கில எழுத்துகள், அறிவியல் அறிஞர்களின் பெயர்கள், கண்டுபிடிப்புகள், உடல் உறுப்புகள், தாவரங்களின் பெயர்கள், பயன்பாடுகள், நோய், தடுப்பு மருந்துகள், வரைபடங்கள், மாதங்களின் பெயர்கள், வினைச்சொற்கள், எதிர்சொற்கள், மாநிலங்களின் பெயர், கொடி, சின்னம் என அத்தனை விஷயங்களும் அழகு வண்ணத்தில் சுவர்களில் ஜொலிக்கின்றன.
குழந்தைகள் புத்தகங்களை சுமக்க வேண்டிய அவசியமே இல்லை. யோகா, ஓவியம், இசை, நடனம், மூச்சுப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி என குழந்தைகள் அசத்துகிறார்கள். அனக்காவூர் காலனியில் பல மாணவர்கள் முதல் தலைமுறையாக கல்லூரியில் கால் வைத்திருக்கிறார்கள். சிலர் அரசுப் பணிக்குச் சென்றிருக்கிறார்கள். சிலர் மாநில அளவில் விளையாட்டு வீரர்களாக உருமாறியிருக்கிறார்கள். சிலர் ஆசிரியைகளாக மாறியிருக்கிறார்கள். அத்தனை பேரும் தங்கள் முன்மாதிரியாக ஆசிரியை தேன்மொழியைத்தான் சுட்டுகிறார்கள்!
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment