சளி விலக... தூதுவேளை துவையல், பூண்டுபால்! 'அடடா மழடா... அட மழடா!' என்று பாட வைக்கும் மழைக்காலம் இது! ஆனால் எல்லோருக்கும் இந்த பாடலை பாட கொடுத்துவைப்பதில்லை. சீதோஷ்ண நிலை மாற்றம், பலரையும் இந்த காலத்தில் கர்ச்சீப்பும் கையுமாக இருக்க வைத்துவிடுகிறது.
சளி, காய்ச்சல் நம்மை பாடாய்ப்படுத்தக் காத்திருக்கும் இந்த நாட்களில், அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் 'அஞ்சறைப் பெட்டி' வைத்தியம் இதோ..!
* தினமும் காலை தேநீரில் கொஞ்சம் இஞ்சித்துண்டு, துளசி இலை சேர்த்துக்கொள்ளலாம்.
* காலையில் இட்லிக்கு சட்னியாக தூதுவேளை துவையல், இஞ்சி துவையல் செய்யலாம். மதிய சாப்பாட்டில் துளசி ரசம், தூதுவேளை ரசம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். சாயங்கால வேளையில் சுக்கு காபி குடிக்கலாம்.
* சுக்கு காபி என்றதும், சுக்கை பொடியாக்கி பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்துக் குடிப்பது என பலரும் நம்புகின்றனர். அதில் பலனில்லை. சுக்கு காபி தயாரிக்க என வழிமுறை இருக்கிறது. மிளகு ஒரு பங்கு, இரண்டு பங்கு சுக்கு, நான்கு மடங்கு கொத்தமல்லி (தனியா), கொஞ்சம் ஏலக்காய் என... இவற்றை எல்லாம் சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். தூதுவேளை, துளசி, கற்பூரவல்லி, ஆடாதொடை இவை ஏதேனும் கிடைத்தால், அந்தப் பொடியுடன் இதையும் சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, பனைவெல்லம் சேர்த்துக் குடியுங்கள்.
* சளி அதிகமாகி நெஞ்சை அடைத்தால், இரவு உறங்கப்போவதற்கு முன் பூண்டுப்பால் குடிக்கலாம்.
10, 12 பூண்டுப்பல்லை 50 மில்லி பாலுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வையுங்கள். அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன் மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். இறக்கிய பாலில் பூண்டு கரைய நன்றாகக் கடைந்து, அதனுடன் பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து அருந்துங்கள்.
* காலையில எழுந்ததும் சிலருக்கு தும்மல் வரும். அந்த மாதிரி நேரங்களில் தேங்காய் நாரை தீயில் எரித்து வரும் புகையை சுவாசிக்க, தும்மல் உடனே நிற்கும். ஆனால் இதை அடிக்கடி செய்யக்கூடாது.
* தலைக்கு குளித்ததும் தும்மல், மூக்கடைப்பு, தலைவலி வந்தால் கொஞ்சம் மிளகை பொடி செய்து, மெலிதான துணியில் கட்டி, உச்சந்தலையில் தேய்த்தால், தீர்வு கிடைக்கும்.
* மூக்கடைப்புக்கு ஜாதிக்காயை தண்ணீர் விட்டு கொழகொழப்பாக இழைத்து, அதைக் கரண்டியில் எடுத்து அடுப்பில் சூடேற்றவும். அது குழம்பாக ஆனதும், பொறுக்கும் சூட்டில் மூக்கின் மேல் பத்து போட... அடைப்பு விலகும்.
* நெஞ்சுச்சளி அதிகமாக இருந்தால், பூண்டு குழம்பும், சமைக்காத சின்ன வெங்காயமும் சாப்பிடலாம். அதேபோல, தேங்காய் எண்ணெயில் சில சூடக்கட்டிகளை இட்டு சூடேற்றி, கரைந்ததும் அதை சூடு பொறுக்க நெஞ்சு, விலா, முதுகு, மூக்கு பகுதிகளில் தடவலாம்.
* தலை பாரமாக இருந்தால் நொச்சி இலையை தலையணையில வைத்துப் படுக்க, நிம்மதியான தூக்கம் கிடைக்கும்!
- எம்.மரிய பெல்சின் |
No comments:
Post a Comment