திருநெல்வேலி மாவட்டத்தின் கரும்புள்ளியாக போலீஸாரால் கருதப்பட்ட துவரங்காடு கிராமம், அதிசயிக்கத்தக்க வகையில் மாதிரி கிராமமாக மாறியிருக்கிறது. கள்ளச்சாராயம் பாய்ந்தோடிய இந்த பூமி, இப்போது முற்றிலுமாக மதுவை விரட்டியிருக்கிறது.
திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், கீழவெள்ளக்கால் ஊராட்சிக்கு உள்பட்ட கிராமம் துவரங்காடு. இங்கு ஆண்கள் 435, பெண்கள் 489, குழந்தைகள் 287 என மொத்த மக்கள் தொகை 1,211.
முந்தைய நிலை
அமைதிப் பூங்காவாக காட்சியளிக்கும் துவரங்காடு, சில ஆண்டுகளுக்கு முன் இத்தகைய அமைதியை அனுபவிக்கவில்லை. கள்ளச்சாராய உற்பத்தி கேந்திரமாகவும், அடிதடி, வெட்டு, குத்து, கொலை, வழிப்பறிக்கு பெயர்போன இடமாகவும் அப்போது இருந்தது. செல்வாக்குமிக்க இரு தரப்பினர் ஊரை இரண்டாக்கி குளிர்காய்ந்தனர். இக் கிராமத்தினரை கட்டுப்படுத்த முடியாமல் வீரகேரளம்புதூர் போலீஸார் திணறினர்.
இங்கேயே புறக்காவல் நிலையம் அமைக்கும் அளவுக்கு நிலைமை முற்றியது. ஊரில் உள்ள ஆண்களில் 20 சதவீதம் பேர் நீதிமன்றங்களின் படிக்கட்டுகளில் ஏறி, இறங்கிக் கொண்டிருந்தனர்.
மன மாற்றம்
ஒரு கட்டத்தில் செல்வாக்குள்ள ஒரு தரப்பை சேர்ந்தவர் திடீரென இறந்ததுதான் திருப்பமாக அமைந்தது. கிராமத்து இளைஞர்களிடம் மனமாற்றம் உருவானது. வீடுகளில் பதுக்கி வைக்கிருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை ஒட்டுமொத்தமாக ஒருநாள் அதிகாலையில் அங்குள்ள ஆற்றில் வீசியெறிந்தனர்.
மத்திய அரசின் விருது
இந்த மாற்றத்தை தெரிந்துகொண்ட அதிகாரிகள், இந்த ஊரை மறு உருவாக்கம் செய்ய களத்தில் இறங்கினர். பெரும்பாலான வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டித்தரப்பட்டன. சிறந்த கிராம ஊராட்சிக்காக மத்திய அரசு வழங்கும், `நிர்மல் கிராம் புரஸ்கார்' விருது பெறும் அளவுக்கு, துவரங்காட்டில் முன்னேற்றங்கள் முளைத்தன.
கிராமத்தில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தினாலும், மக்கள் மனங்களில் மாற்றங்களை உருவாக்குவது பெரும் சவாலாகவே இருந்தது. சாராயம் குடித்து பழகியவர்கள், சண்டை சச்சரவுகளுக்கு அடிமையாகி இருந்தவர்களை ஒரேயடியாக அதிலிருந்து மீட்பது என்பது சிரமமான காரியம்தானே.
உலக சமுதாய சேவா சங்கம்
இந்நேரத்தில்தான் உலக சமுதாய சேவா சங்கம் இந்த கிராமத்தை தத்தெடுத்தது. மக்களின் மனதுக்கும், உடலுக்கும் புத்துயிரூட்ட முயற்சி மேற்கொண்டது. மக்களின் ஒழுக்கமான பழக்க வழக்கங்களால் கிராமங்கள் தன்னிறைவுடன் கூடிய ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு, இங்கு கிராமிய சேவைத் திட்டம் தொடங்கப்பட்டது. கிராமப்புற மக்கள் அனைவருக்கும் இலவசமாக மனவளக்கலை யோகா கற்றுக் கொடுப்பதே இத் திட்டம்.
இங்கு குடி மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்கள் 122 பேர் இருந்தனர். அவர்களை புதுவாழ்வுக்கு கொண்டுவரும் வகையில், 2012-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி துவரங்காடு கருப்பசாமி கோயில் அருகே, உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம். மயிலானந்தன் இத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
யோகா பயிற்சி
துவரங்காட்டில் அமைக்கப்பட்ட அறிவுத்திருக்கோயிலில் 3 கட்டங்களாக மனவளக்கலை யோகா பயிற்சி நடத்தப்பட்டது. முதியோர், நோயாளிகளுக்கு அவரவர் இல்லங்களிலேயே பயிற்சி அளிக்கப்பட்டது. உடற்பயிற்சி, எளியமுறை தியானம், காயகல்பம், அகத்தாய்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இவற்றுடன், போதையில் இருந்து விடுபடுவது குறித்த பயிற்சி, சினம் தவிர்த்தல் பயிற்சி ஆகியவை ஆண்களுக்கு அளிக்கப்பட்டது.
இக்கிராமத்திலிருந்து 60 பேர், பொள்ளாச்சி அருகே ஆழியாறில் உள்ள தலைமை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு யோகா ஆசிரியர் பயிற்சி கற்றுத்தரப்பட்டது. தற்போது அவர்கள் தொடர் பயிற்சி அளிக்கின்றனர்.
உருமாறிய கிராமம்
இக்கிராமத்துக்கு 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நல்லமுறையில் பராமரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வீடுகளில் வீட்டுத்தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கீழவெள்ளக்கால் ஊராட்சித் தலைவர் மு.ராமாத்தாள் முத்தையாசாமி முயற்சியால், அனைத்து தெருக்களிலும் குப்பைத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு மாலைநேர சிறப்பு பயிற்சி நடத்தப்பட்டது.
இதனால் துவரங்காடு கிராமப் பள்ளியில் இடைநிற்றல் தற்போது அறவே இல்லை. குடிநோயால் உடல்நலம் குன்றியோருக்கு இலவச மருத்துவ முகாம்கள் மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட்டிருக்கிறது. தற்போது துவரங்காடு கிராமத்தில் மதுக்கடைகளோ, போதைப்பழக்கமோ அறவே இல்லை. துவரங்காட்டிலிருந்து ரத்தக் கறையும், மது வாடையும், யோகா பயிற்சியால் துடைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
கிராமிய சேவைத் திட்டம்
மயிலானந்தம்
உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் ஈரோடு எஸ்.கே.எம்.மயிலானந்தன் கூறியதாவது:
மக்களின் ஒழுக்கமான பழக்க வழக்கங்களால் கிராமங்கள், தன்னிறைவுடன் கூடிய ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மனமும், உடலும் ஆரோக்கியம் பெறும்போது, மனிதர்களில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை இத்திட்டத்தின் மூலம் நிரூபிக்கிறோம்.
ஒவ்வொரு கிராமத்திலும் மது பழக்கத்தில் இருந்து 50 சதவீதம் பேராவது முற்றிலுமாக விடுபடுகிறார்கள். குடிப்பழக்கத்தால் தங்கள் வருவாயை மட்டுமின்றி, ஒட்டுமொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தொலைத்தவர்கள் ஏராளம். இத்தகையவர்களை இனம் கண்டு, மனவளக்கலை பயிற்சியால் நல்லதொரு மனமாற்றத்தை உருவாக்கி இருக்கிறோம்.
தமிழகத்தில் துவரங்காடு உள்ளிட்ட 26 கிராமங்களில் இத் திட்டத்தை செயல்படுத்தி முடித்திருக்கிறோம். 11 கிராமங்களில் இத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. வரும் டிசம்பருக்குள் மேலும் 6 கிராமங்களில் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இத்திட்டத்தை தமிழகத்தின் மேலும் பல கிராமங்களுக்கு விரிவாக்கம் செய்ய நினைத்திருக்கிறோம். இதற்கான செலவினங்களுக்கு நன்கொடையாளர்களை நாடுகிறோம் என்றார் அவர்.
பயிற்சியளித்த ஆசிரியை
பி.ரத்னா
துவரங்காடு கிராமத்திலேயே தங்கி, மனவளக்கலை யோகா பயிற்சி அளித்த பி.ரத்னா கூறியதாவது:
மதுவுக்கு அடிமையானவர்கள் மனவளக்கலை பயிற்சி மூலம் மனமாற்றம் அடைந்திருக்கிறார்கள். பயிற்சி தொடங்கிய 6 மாதங்களிலேயே குடும்பங்களில் படிப்படியான முன்னேற்றமும், அமைதியும் ஏற்பட்டது. தற்போதும் நீடிக்கிறது. மக்களின் துன்பங்களுக்கு காரணி எது என்பதை மனவளக்கலை அகத்தாய்வு பயிற்சி தெளிவாக கூறுவதால், சண்டை சச்சரவுகள், வழக்குகள் எதுவும் இல்லை. இங்கு 5 சுயஉதவிக்குழுக்கள் உள்ளன. குடும்பங்களில் சேமிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது என்றார் அவர்.
குடியில் இருந்து மீண்டவர்
முருகேசன்
துவரங்காடு முப்பிடாதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்பையா மகன் முருகேசன் லாரி ஓட்டுநராக உள்ளார். குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அதிலிருந்து மீண்டுள்ளார். அவர் கூறியதாவது:
உடற்பயிற்சி செய்வதால் மூட்டுவலி, கால்வீக்கம் ஏதுமில்லை. தியானம் செய்வதன் மூலம் கோபம் குறைந்துள்ளது. குடிப்பழக்கத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ளேன். சர்க்கரை நோய், ரத்த அழுத்தநோய் குறைந்துள்ளது. ஞாபக சக்தி அதிகரித்திருக்கிறது. தியானம், உடற்பயிற்சியால் உடல் எடை குறைகிறது. என் குடும்பத்தில் புதிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.
இப்போது சொர்க்கம்
அண்ணாமலையார்
உலக சமுதாய சேவா சங்கத்தின் நெல்லை மண்டல செயலர் ஆ.அண்ணாமலையார் கூறியதாவது:
இக்கிராமத்து மக்கள் இயல்பாகவே கடும் உழைப்பாளிகள். சூதுவாது அற்ற விவசாயிகள். எளிமையான வாழ்வு வாழ்பவர்கள். அவர்களை பகடைக் காய்களாக பயன்படுத்தி கள்ளச்சாராய சந்தைக்கு ஊறுகாயாக்கி இருந்தனர். முன்பெல்லாம் மாலை 6 மணிக்கு மேல் இந்த கிராமத்துக்குள் யாரும் செல்ல முடியாது. பணம் பறிப்பும், இரு தரப்பினர் மோதிக்கொள்வதும் வாடிக்கையாக இருந்தது. நீதிமன்றங்களுக்கு நாள்தோறும் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
அப்போதுதான் இந்த கிராமத்தை தத்தெடுத்து யோகா, தியானப் பயிற்சியை அளித்தோம். ஓராண்டுக்குள் பல்வேறு மாற்றங்களை இந்த கிராமம் சந்தித்திருக்கிறது. எந்த சண்டை சச்சரவுகளும் இப்போது கிடையாது. எனக்கு தெரிந்தவரை இப்போது குடிப்பவர்களே இந்த கிராமத்தில் இல்லை. விவசாயம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ஒரு காலத்தில் கள்ளும், சாராயமும் மலிந்திருந்த துவரங்காடு, இப்போது சொர்க்க பூமியாகியிருக்கிறது, என்றார்.
புகையை விரட்டியவர்
சரவண கார்த்திகேயன்
துவரங்காடு தெற்குத்தெரு ப.சரவண கார்த்திகேயன் கூறும்போது, `எனது மகள் சுபதர்ஷினி யோகா பயின்றாள். என்னையும் கற்றுக்கொள்ள வலியுறுத்தினாள். புகை பழக்கமும், முன் கோபமும் மாயமாகிவிட்டன. சரியான நேரத்தில் சாப்பாடு, தூக்கம், நல்ல மனநிலையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். யோகா ஒரு அற்புத கலை' என்று தெரிவித்தார்.
சோர்வின்றி வேலை
முப்பிடாதி
துவரங்காடு வடக்குத் தெருவைச் சேர்ந்த ச.முப்பிடாதி, `யோகா பயிற்சி மூலம் புத்துணர்வு பெற்றிருக்கிறேன். சோர்வின்றி வேலை செய்ய முடிகிறது' என்றார். அதே தெருவைச் சேர்ந்த வி.ரா மையா, `சுறுசுறுப்பாக இருக்கிறது. எனது குடும்பத்தில் அனைவரும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம்' என்றார்.
உங்கள் கிராமத்தை தத்தெடுக்க வேண்டுமா
உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்டத்தில் உங்கள் கிராமமும் பயன்பெற என்ன செய்ய வேண்டும்? தமிழகத்தில் உலக சமுதாய சேவா சங்கத்தின் 14 மண்டல அலுவலகங்கள் உள்ளன. இந்த மண்டல அலுவலகங்களில் உள்ள பொறுப்பாளர்களை, விருப்பப்படும் கிராம ஊராட்சி தலைவர்கள் அணுகினால், அவர்கள் உரிய வழிமுறைகளை தெரிவிப்பர்.
மக்களுக்கு மனவளக்கலை யோகா பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படும். இதற்காக பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் அந்தந்த கிராமங்களிலேயே தங்கியிருந்து பயிற்சி அளிக்கிறார்கள். இது தொடர்பான விவரங்களுக்கு, உலக சமுதாய சேவா சங்க விரிவாக்க இயக்குநர் பி.முருகானந்தத்தை 94865 38630 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் | ... திருநெல்வேலி மாவட்டத்தின் கரும்புள்ளியாக போலீஸாரால் கருதப்பட்ட துவரங்காடு கிராமம், அதிசயிக்கத்தக்க வ... |
|
No comments:
Post a Comment