பூராடம் என்று கழிக்கலாமா?
(நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜூவில் விழுந்தாலும், ஆரோகணம், அவரோகணமாக மாறி வந்தால் ஏக ரஜ்ஜூவாக இருந்தாலும் ரஜ்ஜூ தட்டாது பொருத்தம் உண்டு என்று கொள்ள வேண்டும்.) நன்றி-தினமணி வெப்-கேசிஎஸ். ஐயர்
அடடே.. உத்திரட்டாதியா? பொண்ணு பூராடமாச்சே! ரஜ்ஜு தட்டுமே…. – இப்படி ஒரு கதை ஒரு அம்மணியிடமிருந்து! இன்றெல்லாம் நட்சத்திரங்களைப் பார்த்து உடனே சிலர் முடிவு கட்டி விடுகிறார்கள்… இதான் என்று! ஒரு நண்பர்… அவசர கதியில் கேட்டார். என் தங்கச்சிக்கு பையன் பிறந்திருக்கான். அவன் பிறந்தது ரோஹிணி நட்சத்திரமாம். அதனால் மாமாவுக்கு ஆகாதாம்… என் மனைவி வீட்டில் பயமுறுத்தறாங்க என்று!
இப்படித்தான்… ஆயில்யம், மூலம், கேட்டை, பூராடம்… என்று ஒரு பட்டியலே வைத்திருக்கிறார்கள். திருமணப் பொருத்தம் என்றால்.. கேட்கவே வேண்டாம்! திருமணத்தை நடத்தவிடாமல் தள்ளிப் போடுவதற்கு என்னவெல்லாம் சாக்கு உண்டோ அதில் முக்கியமான முதன்மை இடத்தை நட்சத்திரங்கள் பிடித்துக் கொண்டு விடுகின்றன.
நட்சத்திரக் கழிப்பில், முதன்மைக் கழிப்பு… ரஜ்ஜு தட்டுகிறது என்பது. இந்த ரஜ்ஜுப் பட்டியலைப் பார்த்தால் பூராடமும் உத்திரட்டாதியும் தொடை ரஜ்ஜு. ஏக ரஜ்ஜு.. அடடா ரஜ்ஜு தட்டுகிறதே… பொருத்தம் இல்லையே! என்று ஒதுக்கி விடுகிறார்கள்.
குறிப்பாக இதைச் சொல்லக் காரணம்… என் தாயார் உத்திரட்டாதி. தந்தையார் பூராடம். ஏக ரஜ்ஜுதான்! என்ன ஆயிற்று! ஒன்றும் ஆகவில்லை… 40 வருடங்களுக்கும் மேல் நல்லபடியாக குடும்பத்தை ஓட்டியிருக்கிறார்கள். அவ்வப்போது சிறு சிறு சண்டை சச்சரவுகள் எல்லாக் குடும்பங்களிலும் இருப்பது போல் இருந்தாலும், எந்தப் பெரிய பாதிப்பும் இருந்ததில்லை! இப்போது, இந்தக் கட்டுரையைப் படியுங்கள்… ரஜ்ஜுவிலும் ஆரோஹணம், அவரோஹணம் என்று இரண்டு உள்ளதாம்! தினமணி வெள்ளிமணியில் காலம் உங்கள் கையில் பகுதியை எழுதும் கேசிஎஸ். ஐயர் இந்தக் குறிப்பை எழுதியுள்ளார். …
ஏக ரஜ்ஜுவாக இருந்தால் திருமணம் செய்யலாமா? ஏக நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, மகம், உத்திரட்டாதி, விசாகம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் உத்தமமாகப் பொருந்தும் என்றும் தசா சந்திப்பு தோஷம் உண்டாக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுஷம், பூராடம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்கள் மத்திம பலன் என்றும், மற்ற நட்சத்திரங்கள் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய ஏக நட்சத்திரப் பொருத்தம் பார்க்கும் பட்சத்தில் ரஜ்ஜூ தட்டும் நட்சத்திரங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும். ரஜ்ஜூப் பொருத்தம் பார்ப்பதில் சிரசு ரஜ்ஜூ எனும் தலைக் கயிறுக்கு மட்டுமே ஒரே ஒரு பிரிவு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி கழுத்து, வயிறு, தொடை, பாதம் ஆகிய ரஜ்ஜூக்களில் ஆரோகண கதி(ஏறுமுகம்) அவரோகண கதி (இறங்குமுகம்) என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. ஆரோகண கழுத்து ரஜ்ஜூ - அவரோகண கழுத்து ரஜ்ஜூ ரோகிணி – திருவாதிரை அஸ்தம் - சுவாதி திருவோணம் – சதயம்
ஆரோகண வயிறு ரஜ்ஜூ – அவரோகண வயிறு ரஜ்ஜூ கார்த்திகை – புனர்பூசம் உத்திரம் - விசாகம் உத்திராடம் - பூரட்டாதி ஆரோகண தொடை ரஜ்ஜூ - அவரோகண தொடை ரஜ்ஜூ பரணி – பூசம் பூரம் – அனுசம் பூராடம் – உத்திரட்டாதி
ஆரோகண பாத ரஜ்ஜூ – அவரோகண பாத ரஜ்ஜூ அசுவினி – ஆயில்யம் மகம் – கேட்டை மூலம் – ரேவதி
இதில் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜூவில் விழுந்தாலும், ஆரோகணம், அவரோகணமாக மாறி வந்தால் ஏக ரஜ்ஜூவாக இருந்தாலும் ரஜ்ஜூ தட்டாது பொருத்தம் உண்டு என்று கொள்ள வேண்டும். அந்தக் காலத்திலேயே பல திருமணங்கள் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாமல் நடந்து வெற்றியடைந்துள்ளன. அதனால் திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது அனைவரும் மிகவும் பொறுப்புடன் பல விஷயங்களை ஆராய்ந்து செய்தால் அநேக நல்ல இணைவுகள் தடுக்கப்படாமல் இருக்கும் |
No comments:
Post a Comment