Friday 26 September 2014

"‘அவனுக்கு ஒன்றும் ஆபத்து வராது. அவனுக்கு இது புனர் ஜன்மம்!’















"'அவனுக்கு ஒன்றும் ஆபத்து வராது. அவனுக்கு இது புனர் ஜன்மம்!' 

(வலையில் படித்த ஓர் அற்புத நிகழ்வு.)

மஹாபெரியவா மூலம் நன்மை பெற்றவர்கள் பட்டியல் மிக நீண்டது. அவர் கருணை எல்லோர் மீதும் மழை போல் பொழிந்தது.

அந்தக் கருணை மழையில் நனைந்தவர்கள் மஹா பெரியவரிடம் மாறாத மரியாதையும் அன்பும் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு சம்பவம்தான் இது.

1980-ல் கேரள ஆளுநராக இருந்தவர் திருமதி ஜோதி வெங்கடாசலம். அப்போது அவரிடம் செயலராகப் பணியாற்றி வந்தவர் டி.வி.சுவாமிநாதன். 

ஒரு டிசம்பர் மாதக் கடைசியில், அவரின் உடல்நிலை பாதித்து, தினமும் காய்ச்சல் வர ஆரம்பித்தது. கூடவே, எடையும் குறைந்துகொண்டு வந்தது. ரத்தப் பரிசோதனை செய்தார்கள்; எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார்கள்.

பின்பு, சுவாமிநாதனைத் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி நிபுணர்களிடம் கொண்டுபோய்க் காண்பிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். அங்கே, நுரையீரல் துறை நிபுணர்கள் அவரைப் பரிசோதித்தனர்.
'

நுரையீரலின் மேற்பகுதியில், புற்று நோய் ஆரம்பக் கட்டத்தில் இருக்கிறது!' என்றார் முதன்மை மருத்துவர்.

விஷயம் உடனே ஆளுநர் திருமதி ஜோதி வெங்கடாசலம் அவர்களுக்குத் தெரிவிக்கப் பட்டது. மனிதாபிமானம் மிக்க அவர் பதறிப் போய், 'சென்னையில் நல்ல மருத்துவ சிகிச்சை கிடைக்கும் என்றால், அங்கே சுவாமிநாதனைக் கூட்டிக்கொண்டு போங்கள். அதற்கான நடவடிக்கையை உடனே எடுங்கள்!' என்றார். 

அதன்பின், சென்னை - அரசு பொதுமருத்துவமனையில் சுவாமிநாதனைச் சேர்த்தனர்.

அவரை, புகழ்பெற்ற மருத்துவரான டாக்டர் கே.வி.கிருஷ்ணசுவாமி, தீவிரமாகப் பரிசோதனை செய்தார்.

'இதில் புற்று நோய் அறிகுறி எதுவும் தெரிய வில்லை. ஆனால், நுரையீரலின் மேல் பகுதியில் ஓர் அழுத்தம் தென்படுகிறது. அதை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்!' என்றார்.

இதற்கிடையே, டாக்டர் செரியனையும் சென்று பார்த்தார் சுவாமிநாதன். 

அவரது எக்ஸ்ரே படங்களை எல்லாம் பல கோணங்களில் வைத்துப் பார்த்த டாக்டர் செரியனின் முகத்தில் சற்றுத் துயரம் தெரிந்தது. 

'இடது நுரையீரலின் மேலே புற்று நோய் பாதித்திருக்கிறது. உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டாக வேண்டும். ஏற்கெனவே நான்கைந்து மாதங்கள் வீணாகிப் போய் விட்டன. இனியும் காலதாமதம் செய்யாதீர்கள்!' என்றார் அவர்.

பாவம், சுவாமிநாதனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. 

1981-ஆம் ஆண்டு, மார்ச் மாதம், அவர் டெல்லி போகவேண்டிய வேலை வந்தது. அங்கேயும் ஒரு சோதனை நடத்திப் பார்த்துவிட முயன்றார். 

அங்கே பிரபல மருத்துவர் டாக்டர் கோபிநாத், சுவாமிநாதனின் நுரையீரலைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, டாக்டர் கிருஷ்ணசுவாமி சொன்னது போலவே, "நுரையீரலின் மேற்பகுதியில் அழுத்தம் இருக்கிறது. மூன்று மாதங்கள் தொடர்ந்து மருந்துகள் சாப்பிட்டு விட்டு, பின்னர் எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதனை செய்யலாம், கவலைப்படாதீர்கள்!' என்றார்.

சுவாமிநாதனுக்கு மஹா பெரியவாளிடம் அளவு கடந்த பக்தி உண்டு. 

அவர் எப்போதும் தன் மீது அலாதியான பரிவு காட்டி வந்திருப்பது அவருக்கு நினைவு வந்தது. 

பெரிய பெரிய மருத்துவர்கள் எல்லாம் இப்படி வெவ்வேறான கருத்துக்கள் கூறியதில், அவருக்கு மிகவும் கவலையாகப் போய்விட்டது. 

ஆரம்பத்திலேயே மஹா பெரியவாளிடம் சரணடைந்திருக்கலாமோ என்றுவருத்தப்பட்டார். 

எத்தனை பெரிய குழப்பமாக இருந்தாலும், அவரிடம் தாம் கொண்டிருந்த அளவற்ற பக்தி தம்மைக் காப்பாற்றும் என்று பரிபூரணமாக நம்பினார்.

அப்போது, கர்நாடக - மகாராஷ்டிர எல்லையில் மஹாபெரியவா தங்கி, பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.

சுவாமிநாதனின் சார்பாக அவரது நெருங்கிய நண்பரும், பெரியவாளின் பரம பக்தருமான ஜோஷி என்பவர், சுவாமிநாதன் படும் துன்பத்தை பெரியவாளிடம் எடுத்துச் சொன்னார்.

அதன்பின், மஹா பெரியவா சில மணி நேரம் கடும் மவுனம் அனுசரிக்கத் தொடங்கிவிட்டார்.

அப்போது அவரின் முகாரவிந்தத்தில் ஏற்பட்டிருந்த தேஜோமயமான ஒளி, அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. 

'அது என்ன அப்படிப்பட்ட ஒரு பிரகாசம்!' என்று சுற்றி இருந்தவர்கள் கொஞ்சம் பயந்து கூடப் போனார்கள்.

சற்று நேரத்துக்குப் பிறகு, மவுனத்தைக் கலைத்தார் பெரியவா. 

எதிரே நின்றுகொண்டிருந்த ஜோஷி மற்றும் கண்ணன் இருவரையும் அருகில் அழைத்து, 'அவனுக்கு அதெல்லாம் ஒண்ணும் வராது!' என்று மிகவும் கருணை யோடு, ஆனால் அழுத்தமாகச் சொன்னார்.

ஜோஷி இதைத் தொலைபேசி மூலம் சுவாமிநாதனிடம் சொல்ல, அவருக்கு ஒரே மகிழ்ச்சி! இனம் தெரியாத புத்துணர்ச்சி! 

ஜோஷியின் வார்த்தைகள் மஹா பெரியவாளின் வாய் வார்த்தைகளாகவே அவர் காதில் விழ, மெய்சிலிர்த்துப் போனார்.

அன்றைய தினத்திலிருந்து, மாலையில் காய்ச்சல் வருவது நின்றது. முகத்தில் இருந்த தளர்ச்சியும், சோர்வும், கவலை ரேகைகளும் மெள்ள மெள்ள அகன்றன. உடல் எடை குறை வதும் நின்றது. முகத்தில் ஒரு புதிய பொலிவு வந்தது.

ஆனால், மே மாதத்திலிருந்து மறுபடியும் அவருக்கு உடம்பு படுத்த ஆரம்பித்துவிட்டது. ஓயாத இருமலும், காய்ச்சலும் வர ஆரம்பித்தன. 

கேரள ஆளுனரின் குடும்ப ஆலோசகரான ஒரு மருத்துவர், சுவாமிநாதனின் பழைய எக்ஸ்ரே படங்களையும் மருத்துவக் குறிப்புகளையும் பார்த்துவிட்டு, மிக நவீன கருவியால் இன்னும் சில படங்கள் எடுத்துப் பார்த்தார்.

அந்த நிபுணரின் முகம் வருத்தத்தில் தோய்ந்தது. 

படத்தில், நுரையீரலின் மேல் பக்கத்தில் புதிதாக ஒரு நிழல் தெரிந்தது. 

சுவாமிநாதனுக்குப் புற்று நோய் இரண்டாம் கட்ட நிலையை அடைந்துவிட்டது என்றும், ஆனால் அறுவை சிகிச்சையை அவர் தாங்கும் நிலையில் இல்லை என்றும் கூறினார். '

உடனடியாக கீமோதெரபி எனப்படும் கதிர் இயக்க சிகிச்சை தொடங்க வேண்டும். அதுகூட இறுதி நிலை வலியினால் உண்டாகும் வேதனையைக் குறைக்கத்தான் உதவும்!' என்றார். 

அவர் ஆளுநருக்கு ஒரு தனிக்குறிப்பும் எழுதி அனுப்பினார். அதில், மூன்று மாதங்களுக்குள் சுவாமிநாதனின் உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆளுனர் திருமதி ஜோதி வெங்கடாசலத்துக்குத் தன் உதவியாளர் சுவாமிநாதன் மீது மிகவும் பரிதாபம் உண்டாயிற்று. 

மறுபடியும் டெல்லி அகில இந்திய மருத்துவ மனையைத் தொடர்புகொண்டு, மூத்த மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின்பேரில் சுவாமிநாதனை சென்னைக்கு அனுப்பி, ரயில்வே ஆஸ்பத்திரியில் சேர்க்கச் செய்தார். 

அங்கே, சுவாமிநாதனின் இதயம் மிகவும் பலகீனமாக இருப்பதாகவும், அதன் காரணமாக இதயத்தில் ரத்தம் தேங்கிப்போய், தாங்கும் சக்தியைக் கடந்ததும் வெடித்து விடும் போன்ற அபாய கட்டத்தில் இருப்பதாகவும், பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்கள்.

சுவாமிநாதன் நடுநடுங்கிப்போனார். 

மீண்டும் நண்பர் ஜோஷியிடம் தன் நிலைமையை எடுத்துச்சொல்லி, பெரியவாளிடம் முறையிடுமாறு கேட்டுக் கொண்டார். 

அதன்படி, ஜோஷியும் மஹா பெரியவாளை மீண்டும் தரிசித்து, 'சுவாமிநாதனின் மனைவிக்கு மாங்கல்ய பிக்ஷை கேட்கிறேன், சுவாமி!' என்று சொல்லிக் குலுங்கிக் குலுங்கி அழுதார்.

பக்தரின் அபாய நிலை தெரிந்தும், மஹா பெரியவா சும்மா இருப்பாரோ? 

சிறிது நேர மவுனத்துக்குப் பின், ஸ்நானம் செய்யப் புறப்பட்டார். ஜோஷி தம்பதியர் பயபக்தியுடன் ஒதுங்கி நின்றனர்.

நீர் நிறைந்த தொட்டியில் இறங்கி நின்ற பெரியவா, ஜோஷியை அருகில் அழைத்தார். 

சுவாமிநாதன் பற்றிய முழு விவரங்களையும் மீண்டும் ஒரு முறை சொல்லச் சொன்னார். பிறகு ஒரு தடவை நீரில் மூழ்கி எழுந்தார். 

'அவனுக்கு ஒன்றும் ஆபத்து வராது. அவனுக்கு இது புனர் ஜன்மம்!' என்று உத்தரவு தருவது போன்று அருளினார்.

ஜோஷி இதை சுவாமிநாதனுக்குத் தெரிவித்து, தைரியமாக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

நவீன கருவிகளின் கணிப்பு, மருத்துவர்களின் கெடு, நிபுணர்களின் கருத்துக்கள் எல்லாம் அவருக்கு மூன்று மாதங்களே என்று நிர்ணயித்து விட்ட பிறகு, எப்படித் தைரியமாக இருப்பது? எந்த சக்தியால் இதை மாற்ற முடியும்?

மறுபடி, டெல்லியில் 15 நாட்கள் சோதனைகள் நடந்தன. 

மஹா பெரியவாளே 'அவனுக்குப் புனர்ஜன்மம்' என்று கூறிவிட்ட பிறகு, அந்தத் தெய்வத்தின் வாக்குக்கு மறுவாக்கு உண்டோ? அதற்கான பலன்கள் கிட்டவே செய்தன. 

எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு, ஓர் அற்புதமே நிகழ்ந்திருந்தது. 

திருவனந்தபுரத்தில் எடுத்த எக்ஸ்ரே படத்தில் காணப்பட்ட கருநிழல், டெல்லியில் எடுத்த படத்தில் முற்றிலும் மறைந்திருந்தது.

டெல்லி பரிசோதனையின் முடிவில், சில எதிர்பாராத உண்மைகள் தெரிய வந்தன. 

சுவாமிநாதனுக்குப் பிறவியிலேயே மூக்குத்தண்டில் வளைவு உண்டு. அதன் காரணமாக, அவருக்கு ஜலதோஷம் பிடிக்கும் போதெல்லாம் சளி வெளியே வராமல், நுரையீரலுக்குள் சேர்ந்து, உறைந்து போய், அதனால்தான் நுரையீரலில் அழுத்தம் காணப் பட்டது. அதுதான் கரு நிழல் போல் எக்ஸ்ரேயில் தெரிந்திருக்கிறது.

அதைத்தான் புற்று நோய் என வல்லுநர்கள் தவறான முடிவுக்கு வரக் காரணமாக இருந்தது.

சுவாமிநாதனுக்குத் திருவனந்தபுரம் மருத்துவ மனையில் ஒரு சிறு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் பூரண குணம் அடைந்தார். 

மூன்று மாதமே அவருக்கு ஆயுட்காலம் என்று புகழ்பெற்ற மருத்துவர்கள் சொல்லியிருந்தபோதும், பெரியவாளிடம் அவர் கொண்டிருந்த அளப்பரிய பக்தி அவரைக் காப்பாற்றியது.

அவர் மஹா பெரியவாளை தரிஸனம் செய்யச் சென்றபோது, அவர் தம் அருகில் இருந்த கண்ணனிடம், 'சுவாமிநாதன் வந்திருக்கானே, பார்த்தியா? புற்று நோய், அது இதுன்னு அவனை பயமுறுத்திட்டாளாமே?' என்று சிரித்துக்கொண்டே கேட்டாராம்.

மஹானின் கருணைக் கடாக்ஷம் கிடைத்துவிட்டால், அதற்கு மேல் வேறு என்னதான் வேண்டும்?











 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator