சீட் பெல்ட் - இன் முக்கியத்துவம், அனைவரும் 5 நிமிடம் ஒதுக்கி படியுங்கள்
ஒரு சாயங்கால வேலை பணி நிமித்தமாக கிருஷ்ணகிரி சென்று விட்டு சொந்த ஊரான அருப்புகோட்டைக்கு காரில் திரும்பிக் கொண்டு இருந்தேன். சொந்த ஊருக்கு திரும்புவது என்றாலே ஒரு அலாதி உற்சாகம்தானே .. என் மனநிலையை ஒத்தே என் காரும் அதற்கு ஈடு கொடுத்து ஓடி கொண்டு இருந்தது .. வேகம் காட்டும் முள் 80க்கும் 100கும் இடையே போக்கும் வரத்துமாக அலைந்து கொண்டு இருந்தது.
இரவு மணி 8.30 மணி இருக்கும் . திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கொடைக்கானல் விளக்கு மேம்பாலத்தில் நடுவே பயணித்துக் கொண்டு இருக்கும் வேலையில் , "டம்" என்ற சத்தம் மட்டுமே கேட்ட ஞாபகம்(அது காரின் இடது முன் பக்க சக்கரத்தின் அச்சு முறிந்ததால் ஏற்பட்ட சத்தம் எனபது விபத்தின் பின்னே தெரியப்பட்டது) . பிறகு கார் என் கட்டுப்பாட்டில் இல்லை. கண்களை மூடிக் கொண்டாலும் கார் தலைகீழாக உருண்டு கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. எப்படியும் ஒரு ஐந்தாறு முறை அது சுழன்று இறுதியில் அதற்கு மேல் உருள சக்தியற்று ஓரிடத்தில் தலைகீழாக கவிழ்ந்து நின்றது.
கண் விழித்துப் பார்த்தேன்... என்னைச் சுற்றிலும் உடைந்த கண்ணாடி துண்டுகள். நானும் காரைப் போலவே உள்ளே தலைகீழாக தொங்கி கொண்டிருந்தேன் ... நான் உயிரோடு இருக்கிறேன் என்பதை நம்புவதற்கு எனக்கு சில வினாடிகள் தேவைப்பட்டன. ஓரளவு சுதாரித்த தருணத்தில் காரின் கண்ணாடிகள் வழியே வெளியே பார்த்த போது என்னை நோக்கி சில பேர் ஓடி வந்து கொண்டிருந்தது தெரிந்தது ...
"காரில் உள்ளவர்களுக்கு என்ன ஆயிற்றோ, அவரிகளை எந்த கோலத்தில் பார்க்க போகிறோமோ" என்ற பதைபதைப்பு அவர்கள் ஓடி வரும் வேகத்தில் தெரிந்தது. காரின் வெளியே மிக அருகில் என் காரினுடைய பின் இருக்கைகள் கிடந்தன. கார் உருண்ட வேகத்தில் அது வெளியே தூக்கி விசிறப் பட்டு இருக்கிறது என்று உணர முடிந்தது.. அப்போதுதான் எனக்கு ஒரு சந்தேகம் எழுந்தது .
என்னைச் சுற்றி அனைத்து காரின் பாகங்களும் உடைந்து தொங்கி கொண்டிருந்தன. கண்ணாடிகள் முற்றிலும் சிதறி நாலா பக்கமும் கிடக்கின்றன, பின் இருக்கையே வெளியே தூக்கி எறியப்பட்டிருக்கிறது. நாம் மட்டும் எப்படி அதே இருக்கையில் அதே பொசிசனில் இருந்து கொண்டு இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அப்பொழுதுதான் கவனித்தேன். என்னை ஏதோ ஒன்று மார்போடு சேர்த்து தாங்கி பிடித்துக் கொண்டிருந்தது. ஆம் நான் அணிந்திருந்த சீட் பெல்ட்தான் அது .அதனை நம்பியதற்காக அதன் விசுவாசத்தை எனக்கு காட்டிக் கொண்டு இருந்தது.
அதற்குள் அங்கு வந்த பொதுமக்கள் கதவுகளை உடைத்து நான் வெளியே வர உதவினார்கள். நான் வெளியே வந்த உடன் அனைவரும் எனக்கு கை இருக்கிறதா , கால் இருக்கிறதா , தலையில் ரத்தம் வருகிறதா என்று கேட்டும் , சில பேர் பார்த்தும் கொண்டிருந்தார்கள் . எங்குமே ஒரு சிறு கீறல் இல்லை. அத்தனை கோரமாக சிதைந்து கிடந்த காரில் இருந்து வெளி வந்த எந்த அறிகுறியும் இல்லாமல் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் கூறிக்கொண்டு இருந்தேன்.
அனைவரும் எனக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று உறுதி செய்த பிறகு அவர்களுக்கு தெரிந்த அனைத்து கடவுள்களுக்கும் நன்றி தெரிவிக்க தொடங்கினார்கள். சிலர் நான் செய்த புண்ணியத்தின் பலனே என்றும், வேறு சிலர் என் பெற்றோர் செய்த புண்ணியம் என்றும் கூறினார்கள்.
நான் என்னுடைய செல் போன் , மற்றும் பர்சை எடுக்க மீண்டும் காரின் உள்ளே நுழைந்தது கொண்டிருந்தேன். என்னைக் காப்பாற்றிய சீட் பெல்ட் தனக்கு கொடுத்த பணியை முழுமையாக செய்து விட்ட திருப்தியில், அதற்கே உரிய இடத்தில் தன்னை சொருகிக் கொண்டிருந்தது.
இன்றைய சூழலில் பெரும்பாலானோர் கார்களை பயன்படுத்தவும். அதை தாங்களே ஒட்டவும் செய்கின்றோம். ஒவ்வொரு முறையும் தயவு செய்து சீட் பெல்ட்டை அணியவும் .. நீங்கள் முன் மற்றும் பின் இருக்கையில் அமர்ந்துபயணித்தால் கூட அதனை தவிர்க்காதீர்கள். நீங்கள் ஓட்டுனரை பணியமர்த்தி இருந்தால் அவர்களுக்கும் அதை கட்டாயப் படுத்துங்கள்.
சீட் பெல்ட் விசயத்தில் அலட்சியம் வேண்டாம்.
Thanks to சகோ சதீஸ்குமார் காந்திராஜன் அவர்கள்
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment