போலியோ...தேவை தடுப்பூசி!
முகநூல் நண்பர்களே நம் வீட்டு செல்லக்குழந்தைக்கு இந்த நிலைமை வேண்டுமா..?
போலியோ தடுப்பூசியை மறவாமல் போடுங்கள் தாய்மார்களே
குழந்தை பருவத்திலேயே கோடிக்கணக்கான நபர்களை முடமாக்கிய கொடிய வைரஸ் கிருமி போலியோ.
தற்போது, இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக உலகச் சுகாதார மையம் அறிவித்துள்ளது.
கடந்த மூன்று வருடங்களாக வெளியில் உள்ள போலியோ வைரஸால் (wild polio virus) எவரும் தாக்கப்படாவிட்டாலும், போலியோ சொட்டு மருந்திலுள்ள போலியோ வைரஸால் பல குழந்தைகள் போலியோ தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர் என்பது அதிர்ச்சியும், வேதனையும் கலந்த உண்மை.
இனியும், இதுபோல் போலியோ பாதிப்பு ஏற்படாமலிருக்க, பாதுகாப்பான போலியோ தடுப்பூசிக்கு மாற வேண்டுமென்ற கோரிக்கைகள் இந்தியா முழுவதும் எழுந்துள்ளன.
இந்தநிலையில், போலியோ ஒழிப்பு மற்றும் போலியோ தடுப்பூசிகள் பற்றிச் சமூக மருத்துவயியல் பேராசிரியர் டாக்டர். கிருஷ்ண சந்திர பானிக்ரஹியிடம் பேசினோம்.
''போலியோவை உலகிலிருந்து ஒழிக்கும் முயற்சியை உலகச் சுகாதார மையம் 1988ல் ஆரம்பித்தது.
முதன் முதலாக, போலியோ சொட்டு மருந்து அளிப்பதன் மூலம், போலியோவை முற்றிலும் ஒழித்த நாடாகச் செக்கோஸ்-லோவாகியா விளங்கியது.
அதனைத் தொடர்ந்து, உலகச் சுகாதார மையம் அனைத்து நாடுகளிலும் போலியோ சொட்டு மருந்துகள் குழந்தைகளுக்கு அளிக்கப்படுவதை உறுதிப்படுத்த அறிவுறுத்தியிருந்தது.
போலியோ சொட்டு மருந்தின் முக்கியத்துவம் ஊடகங்கள் வாயிலாகப் பிரசாரம் செய்யப்பட்டன.
பல்ஸ் போலியோ திட்டத்தின்படி, நாடு முழுவதும் ஒரே நாளில் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு அளிக்கப்பட்டது.
வீடுதோறும் சென்று சொட்டு மருந்து பெறாத குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்குச் சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.
மேலும் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டன.
இதெல்லாம் நமக்குத் தெரிந்த விஷயங்கள்தான்.
இதன்மூலம், போலியோ இல்லாத நாடாக இந்தியா உருவாகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது.
2020க்குள் போலியோ, உலகத்தைவிட்டே விரட்டப்படுமென்று உலகச் சுகாதார மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஆனால் நாம் நூறு சதவிகிதம் மகிழ்ச்சி அடைய முடியாதபடி நெருடலான விஷயமும் உள்ளது.
போலியோ சொட்டு மருந்தில் நோய் ஏற்படுத்தும் வீரியம் நீக்கப்பட்ட போலியோ வைரஸ் உள்ளது.
அதை உட்கொள்ளும்போது, குடல்பாதையில் போலியோவுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்படும்.
இதனால், போலியோ வைரஸின் (wild polio virus) தாக்குதல் தடுக்கப்படுகிறது.
சில மாதங்களுக்குச் சொட்டு மருந்திலிருந்து பெறப்பட்ட போலியோ வைரஸ், குழந்தைகளின் குடலில் பெருக்கமடைந்து மலத்துடன் வெளியேறும்.
போலியோ சொட்டு மருந்திலுள்ள போலியோ வைரஸ், நோய் ஏற்படுத்தும் வீரியமற்றதாகவும், நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்தும் திறன் மட்டுமே கொண்டதாகவும் இருக்கும்.
சில நேரங்களில் போலியோ வைரஸ், மனித உடலில் பெருகும்போது மாற்றம் (mutation) உண்டாகி, மீண்டும் பழைய வீரியத்தைப் பெறுகின்றன.
இவ்வாறு மாற்றம் அடையும் வைரஸால் ஏற்படும் முடக்குவாதம், வைல்டு போலியோ வைரஸால் ஏற்படும் முடக்குவாதம் போன்று இருக்கும் (vaccine-derived wild- like poliovirus). 7,50,000 போலியோ சொட்டு மருந்து பயனாளிகளில் ஒருவருக்குத்தான் இதுபோன்று ஏற்படும்.
மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு இதுபோன்ற முடக்குவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
சென்ற வருடம் மட்டுமே நான்கு குழந்தைகளுக்குப் போலியோ சொட்டு மருந்தினால் முடக்குவாத போலியோ ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்தியாவில் போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டாலும், போலியோ சொட்டு மருந்தினால் போலியோ ஏற்படாமலிருக்கப் போலியோ தடுப்பூசிக்கு (IPV) மாற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் போலியோ தடுப்பூசியின் விலை அதிகம்.
போலியோ சொட்டு மருந்தை, சுகாதாரப் பணியாளாரால்கூட எளிதாகக் கொடுக்க முடியும்.
ஆனால், ஐபிவி-யை ஊசி மூலமே செலுத்த வேண்டும்.
ஐபிவி-யின் ப்ரைமரி டோஸ் 6, 10, 14 வாரங்களிலும், பூஸ்டர் டோஸ் 18 மாதங்களிலும் கொடுக்கப்படுகிறது.
பல நாடுகள் போலியோ சொட்டு மருந்திலிருந்து, போலியோ தடுப்பூசிக்கு மாறிவிட்டன.
ஐபிவி-யில், பார்மலினால் (formalin) செயலிழக்கப்பட்ட போலியோ வைரஸ் உள்ளது.
அதை ஊசி மூலம் நேரடியாகச் செலுத்துவதால், ரத்தத்தில் போலியோ வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தி ஏற்படுகிறது.
ஐபிவி, போலியோ சொட்டு மருந்தைவிட அதிகச் செயல்திறன் கொண்டது.
மேலும் ஐபிவியில், தடுப்பூசியால் ஏற்படும் முடக்குவாத போலியோ ஏற்படாதென்பது குறிப்பிடத்தக்கது.
சில வருடங்களில், போலியோ சொட்டு மருந்திலிருந்து ஐபிவி-க்கு இந்தியா மாறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' என விரிவான பதிலைத் தந்தார்.
நன்றி Dr.கிருஷ்ண சந்திர பானிக்ரஹி
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment