"உயிர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும். மனதில் அன்பு இருந்தால் ஆனந்தம் நிலைத்து இருக்கும்"
குலைக்கும் நாய்க்கு வைக்கச் சொல்லிவிட்டார் பெரியவர்"
நன்றி-பால ஹனுமான்.
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கூறுகிறார்…
துறவிகள் வருடத்துக்கு ஒருமுறை, ஒரு நான்கு மாத காலம் சாதுர்மாஸ்ய விரதம் எனும் விரதத்தை அனுஷ்டிப்பதுண்டு. மகா பெரியவரும் ஒரு கிராமத்தில் தங்கி, இந்த விரதத்தை மேற்கொண்டார்கள்.
பெரியவர் அந்த கிராமத்தில் விரதமிருந்த சமயம், தினப்படி பூஜைகள் மற்றும் சம்பிரதாய சடங்குகளும் குறைவின்றி நடந்தன. முடிவில் மடத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அன்று பங்கேற்றவர்களுக்கும் மடத்திலேயே போஜனம் அளிக்கப்படும். அதை பிரசாதமாக கருதி உண்பது சான்றோர் வழக்கம்.
இந்த அன்னத்துக்காக ஒரு தெருநாய் கூட தவமிருந்ததுதான் விந்தை! தினமும் மதியம் எல்லோரும் சாப்பிட்ட உடன், எடுத்து எறியப்படும் எச்சில் இலைகளைத் தேடிச் சென்று, அந்த நாய் சாப்பிடத் தொடங்கிவிடும். இலையைப் போடச் செல்லும்போதே பாய்ந்துவரும். குலைக்கும். அதன் பசி அதற்கு!
இந்த சப்தம் தினமும் பெரியவர் காதிலும் விழுந்தது. அதன் பசிக்குரல், அவர் மனத்தை உருக்கிவிட்டதாம். அப்போது, ஒரு தையல் இலையில் அவர் சாப்பிட ஒரு கைப்பிடி அவலோ, இல்லை உப்பில்லாத தயிரன்னமோ அவருக்கும் அளிக்கப்படுவது வழக்கம். தனக்கு தரப்பட்ட அந்த இலைப் பிரசாதத்தை, அப்படியே குலைக்கும் நாய்க்கு வைக்கச் சொல்லிவிட்டார் பெரியவர். அதற்கும் சோறு வைக்கச் சொல்லாமல், தன் சோற்றையே அவர் தரச் சொன்னதன் பின்னே, பல நுட்பமான விஷயங்கள் ஒளிந்துள்ளன.
நாயின் குலைப்பு பசி உணர்வை பெரியவருக்கு உணர்த்துகிறது. இதை வெல்வது கடினம். இந்த பாழாப்போன பசி, எச்சில் இலை என்றுகூட பார்க்காமல் நாயைத் தூண்டுகிறது. இதுதான் மனிதர்களையும் ஆட்டிப் படைக்கிறது.
இதை வெற்றி கொள்ளாமல், துறவை வெற்றி கொள்வதும் கடினம் என்பதுதான், அவர் உணர்ந்த, உணர்த்த விரும்பிய உண்மை.
பெரியவர், தன் இலையையே தரவும், ஆடிப்போன மடத்து ஊழியர்கள், அதன்பின் நாய்க்கு முதலில் உணவு வைத்துவிட்டு, பிறகுதான் போஜனத்தை தொடங்கினர்.
அதன்பின், பெரியவர் முன் இலை வைக்கும்போது நாய் குலைக்கவில்லை. அந்த ஒரு நாயின் பசிக்கு வழி செய்தாகி விட்டது.
No comments:
Post a Comment