ஜெர்மானிய மன்னனான வில்லியம் கெய்சர் தன் அரண்மனைத் தோட்டத்தை விரிவுபடுத்துவதற்காக அருகில் வசித்த ஏழை எளிய மக்களின் வசிப்பிடங்களிலிருந்து விரட்டியடித்தான்.
அவர்களுடைய நிலங்களையெல்லாம் எடுத்துக் கொண்டு நஷ்ட ஈடு என்கிற பெயரில் சிறிது தொகையும் கொடுத்தான்.
ஆனால் அவனை எதிர்த்துக் கேட்க முடியாமல் அவன் கொடுப்பதை வாங்கிக் கொண்டு பேசாமல் கிடந்தார்கள்.
அவனுடைய ஆசையும் விரிவடைந்தது. அரணமனைத் தோட்டத்தை மேலும் விரிவுபடுத்த விரும்பினான். சுற்றிலுமிருந்த நிலத்தைக் கையகப்படுத்தத் தொடங்கினான்.
இம்முறை ஒரு கிழவி மட்டும் அவளுடைய நிலத்தைத் தரமுடியாது என்று மறுத்தாள்.
அரசன் அவளுக்கு எந்தத் தொகையையும் கொடுக்காமல் விரட்டியடித்தான்.
அவள் அதற்காகப் பயப்படவில்லை. நீதிமன்றத்தில் அரசன் மீது புகாரளித்தாள்.
அப்போது நீதிமன்றத்தின் நீதிபதியாக இபின்பெசின் என்பவர் இருந்தார்.
அவர் அரசனிடமிருந்து கிழவிக்கு அவளது நிலத்தை எப்படியாவது திருப்பிப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்று விரும்பினார்.
அவர் அரசனிடம் சென்றார்.
கிழவியிடமிருந்து அபகரித்த நிலத்திலிருந்து ஒரு பையளவு மண்ணை மட்டும் எடுத்துக் கொள்ள அனுமதி வேண்டினார்.
அரசனும் அதற்குச் சம்மதித்தான்.
நீதிபதி தான் கொண்டு வந்த பையில் மண்ணை நிரப்பிக் கொண்டார்.
அந்த மண் நிரப்பப்பட்ட பையைக் கழுதை மேல் ஏற்ற உதவும்படி அரசனிடம் வேண்டினார் அந்த நீதிபதி.
அரசன் அந்தப் பையை இரு கைகளாலும் தூக்கப் பார்த்தான். ஆனால் அவனால் முடியவில்லை.
இந்தப் பை மிகவும் கனமாக இருக்கிறதே என்று மெதுவாகக் கூறினான்.
அதைக் கேட்ட நீதிபதி சிரித்தார்.
பின்னர், "மன்னா! இத்தனை பெரிய நிலத்திலிருந்து இத்தனைச் சிறிய பையில் எடுத்த இந்த மண்ணே இவ்வளவு கனம் கனக்கிறதே... கிழவியின் இவ்வளவு பெரிய நிலத்திலிருக்கும் அத்தனை மண்ணையும் ஒரு சேர சேர்த்தால் எவ்வளவு கனமிருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்" என்றார்.
மேலும் தொடர்ந்து, "இந்த பையையே உங்களால் தூக்க முடியவில்லையே... இந்தக் கிழவியிடம் அபகரித்த நிலத்திற்காக இறைவன் அளிக்கும் தண்டனையை எப்படித்தான் சுமக்கப் போகிறீர்களோ..?" என்றார்.
வில்லியம் கெய்சருக்கு அப்போதுதான் தான் செய்த தவறு தெரிந்தது.
கிழவியிடம் நிலத்தைத் திருப்பிக் கொடுத்தான்.
அரண்மனைத் தோட்டத்துக்காகத் தான் குறைந்த தொகைக்கு எடுத்துக் கொண்ட நிலத்தையெல்லாம் திருப்பிக் கொடுத்தான்.
No comments:
Post a Comment