Wednesday, 1 October 2014

திருக்கடவூர் அபிராமி அம்மைப் பதிகம்

திருக்கடவூர் அபிராமி அம்மைப் பதிகம்

நூல் (ஆசிரிய விருத்தம்)

கலையாத கல்வியும் குறையாத வயதும்ஓர் கபடுவா ராத நட்பும்
கன்றாத வளமையும் குன்றாத இளமையும் கழுபிணியி லாத உடலும்
சலியாத மனமும்அன் பகலாத மனையியும் தவறாத சந்தா னமும்
தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும் தடைகள் வாராத கொடையும்
தொலையாத நிதியமும் கோணாதகோலுமொரு துன்பமில் லாத வாழ்வும்
துய்நின் பாதத்தில் அன்பும்உ தவிப்பெரிய தொண்டரொடு கூட்டு கண்டாய்
அலையாழி அறிதுயிலுமாயனதுதங்கையே! ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!

காரளக பந்தியும் பந்தியின் அலங்கலும் கரிய புருவச் சிலைகளும்
கர்ணகுண் டலமும்மதி முகமண்டலம்நுதல் கத்தூரி யிட்ட பொட்டும்
கூரணி ந்திடுவிழியும் அமுதமொழியுஞ் சிறிய கொவ்வையின் கனிய தரமும்
குமிழனைய நாசியும் குந்தநிகர் தந்தமும் கோடுசோ டான களமும்
வாரணிந் திறுமாந்த வனமுலையும் மேகலையும் மணிநூ புரப்பா தமும்
வந்தெனது முன்னிற்று மந்தகா சமுமாக வல்வினையை மாற்று வாயே;
ஆரமணிவானில்லுறைதாரகைகள் போலநிறை ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!

மகரவார் குழல்மேல் அடர்ந்துகுமிழ் மீதினில் மறைந்து வாளைத் துறந்து
மைக்கயலை வேண்டிநின் செங்கமல விழியருள் வரம்பெற்ற பேர்க ளன்றோ
செகம்முழுதும் ஒற்றைத் தனிக்குடை கவித்துமேற் சிங்கா தனத்தி லுற்றுச்
செங்கோலும் மநுநீதி முறைமையும் பெற்றுமிகு திகிரியுல காண்டு பின்பு
புகர்முகத்(து) ஐராவதப் பாக ராகிநிறை புத்தேளிர் வந்து போற்றிப்
போகதே வேந்திரன் எனப்புகழவிண்ணிலே புலோமிசை யொடும்சு கிப்பர்;
அகரமுதல் லாகிவளர் ஆனந்த ரூபியே! ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!

மறிகடல்கள் ஏழையுந் திகிரிஇரு நான்கையும் மாதிரல் கரியெட் டையும்
மாநாகம் ஆனதையும் மாமேரு என்பதையும் மாகூர்மம் ஆனதையு மோர்
பொறியரவு தாங்கிவரு புவனமீ ரேழையும் புத்தேளிர் கூட்டத் தையும்
பூமகளை யுந்திகிரி மாயவனை யும்அரையிற் புலியாடை உடையா னையும்
முறைமுறைக ளாய்ஈன்ற முதியவர்களாய்ப் பழைமை முறைகள் தெரியாத நின்னை
மூவுலகி லுள்ளவர்கள் வாலையென்(று) அறியாமல் மொழிகின்ற தேது சொல்வாய்?
அறிவுநிறை விழுமியர்தம் ஆனந்த வாரியே! ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!

வாடாமல் உயிரெனும் பயிர்தழைத் தோங்கிவர அருள்மழை பொழிந்ததும் இன்ப
வாரிதியிலே நின்ன தன்பெனுஞ்சிறகினால் வருந்தா மலேய ணைத்துக்
கோடாமல் வளர்சிற்றெறும்புமுதல்குஞ்சரக் கூட்டமுத லான சீவ
கோடிகள் தமக்கெல்லாம் புசிக்கும் புசிப்பினைக் குறையாம லேகொ டுத்து
நீடாழி யுலகங்கள் யாவையும் நேயமாய் நின்னுதர பந்தி பூக்கும்
நின்மலி! அகிலங்களுக்(கு) அன்னை என்றோதும்; நீலியென்(று) ஓது வாரோ
ஆடாய நான்மறையின் வேள்வியால் ஓங்குபுகழ் ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!

பல்குஞ் சரந்தொட் டெறும்புகடை யானதொரு பல்லுயிர்க் குங்கல் லிடைப்
பட்டதே ரைக்கும் அன் றுற்பவித் திடுகருப் பையுறு சீவ னுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத வானவர் குழாத்தி னுக்கும்
மற்றுமொரு மூவர்க்கும் யார்க்கும் அவரவர் மனச்சலிப் பில்லா மலே
நல்குந் தொழிற்பெருமை உண்டா யிருந்துமிகு நவநிதி உனக்கி ருந்தும்
நானொருவன் வறுமையிற் சிறியனா னால்அந் நகைப்புனக் கேஅல்ல வோ?
அல்கலந் தும்பர்நா டளவெடுக் குஞ்சோலை ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!

நீடுல கங்களுக்(கு) ஆதாரமாய் நின்று நித்தமாய் முத்தி வடிவாய்
நியமமுடன் முப்பத்திரண்டறம்வளர்க்கின்ற நீமனை வியாய்இ ருந்தும்
வீடுவீ டுகள்தோறும் ஓடிப் புகுந்துகால் வேசற்(று) இலச்சை யும்போய்
வெண்துகில் அரைக்கணிய வீதியற்று நிர்வாண வேடமுங் கொண்டு கைக்கோர்
ஓடேந்தி நாடெங்கும் உள்ளந் தளர்ந்துநின்(று) உன்மத்த னாகி அம்மா
உன்கணவன் எங்கெங்கும் ஐயம்புகுந்தேங்கி உழல்கின்ற தேது சொல்வாய்
ஆடுகொடி மாடமிசை மாதர்வினை யாடிவரும் ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!

ஞானந் தழைத்துன் சொரூபத்தைஅறிகின்ற நல்லோர் இடத்தி னிற்போய்
நடுவினில் இருந்துவந் தடிமையும்பூண்டவர் நவிற்றும் உபதேச முட்கொண்டு
ஈனந்தனைத் தள்ளி எனது நானெனுமானம் இல்லா மலேது ரத்தி
இந்திரிய வாயில்களை இறுகப்பு தைத்துநெஞ்(சு) இருளற விளக்கேற் றியே
ஆனந்த மானவிழி அன்னமே! உன்னைஎன் அகத்தா மரைப்போ திலே
வைத்துவே றேகவலை யற்றுமே லுற்றபர வசமாகி அழியாத தோர்
ஆனந்த வாரிதியில் ஆழ்கின்ற தென்றுகாண்; ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!

சலதியுல கத்திற் சராசரங் களையீன்ற தாயா கினாலெ னக்குத்
தாயல்ல வோ? யான்உன் மைந்த னன்றோ? எனது சஞ்சலம் தீர்த்து நின்றன்
முலைகரந்தொழுகுபா லூட்டிஎன் முகத்தைஉன் முன்தானை யால்து டைத்து
மொழிகின்ற மழலைக் குகந்துகொண் டிளநிலா முறுவல்இன் புற்றரு கில்யான்
குலவி விளையாடல்கொண்டருள்மழை பொழிந்(து) அங்கை கொட்டி வாவென்(று) அழைத்துக்
குஞ்சரமு கன்கந்தனுக்(கு) இளையன் என்றெனைக் கூறினால் ஈனம் உண்டோ?
அலைகடலி லேதோன்றும் மாறாத அமுதமே! ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!

கைப்போது கொண்டுன் பதப்போதுதன்னில் கணப்போதும் அர்ச்சிக் கிலேன்
கண்போதி னாலுன் முகப்போது தன்னையான் கண்டு தரிசனை புரிகிலேன்;
முப்போதில் ஒருபோதும் என்மனப் போதிலே முன்னிஉன் ஆல யத்தின்
முன்போது வார்தமது பின்போத நினைகிலேன்; மோசமே போய்உ ழன்றேன்;
மைப்போத கத்திற்கு நிகரெனப் போதெரு மைக்கடா மீதேறி யே
மாகோர காலன் வரும்போது தமியேன் மனங்கலங் கித்தி யங்கும்
அப்போது வந்துன் அருட்போது தந்தருள் ஆதிகடவூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே!

மிகையுந் துரத்தவெம் பிணியுந் துரத்த வெகுளி யானதுந் துரத்த
மிடியுந் துரத்தநரை திரையும் துரத்தமிகு வேதனை களுந்து ரத்த
பகையுந் துரத்தவஞ் சனையுந் துரத்த பசியென் பதுந் துரத்த
பாவந் துரத்த பதிமோகந் துரத்த பலகா ரியமுந் துரத்த
நகையுந் துரத்தஊழ் வினையுந் துரத்த நாளுந் துரத்த வெகுவாய்
நாவரண் டோடிகால் தளர்ந்திடும் என்னை நமனுந் துரத்து வானோ?
அகிலஉல கங்கட்கும் ஆதார தெய்வமே! ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி! அருள்வாமி! அபிராமி யே

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over think of them as Sand paper.
They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் 
பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator