பெரியவா சரணம்.
இன்றைய தினம் உடல் நிலை சரியின்றி அலுவலகம் செல்ல இயலவில்லை. இரவு முதலாக வயிற்றுப் போக்கினால் உபாதை. சோர்ந்திருந்த எனக்கு முகனூல் ஒரு புதிய உணர்வினைத் தராதா என்ற ஏக்கத்தில் கணினியைக் கரம்கொண்டேன்.
எனது மகன் எனக்கு தயிர் சாதம் பிசைந்தெடுத்து வந்து (வத்தக்குழம்பு தொட்டுக்க) எனக்கு என் அன்னையைப் போல் உணவூட்டினான். அவனது பிஞ்சுக் கரங்களால் தந்த அமுதமான உணவினை உட்கொண்டபடியாக ஆனந்தமாக இருந்த பொழுதினில் தான் நண்பர் Ganesh Ravindran அவர்கள் எந்தன் முகனூல் தலைவாசலில் பதிந்திருந்த ஸ்ரீமஹாஸ்வாமிகளின் திருவுருவப் படங்களைக் கண்டேன்.
மஹா ஆனந்தமான உணர்வுகளை என்னில் பதியவைத்தமைக்கு அவருக்கு எந்தன் மனமார்ந்த நன்றி.
விழித்திருக்கும் நிலையில் கூட நம்மால் கனவு காண இயலுமா..?!!
முடியும்! ஆம், இன்று கண்டேன். அந்தக் கனவில் நான் கொண்ட உணர்வுகளின் வெளிப்பாடே இந்தப் பாடல்.
காஞ்சியின் ஸ்ரீமடம்.
ஸ்ரீமஹாஸ்வாமிகளின் உற்சவமூர்த்தி உலா. சந்தியாகாலப் பொழுது அது!
திரும்பிப்பார்க்கும் இடமெல்லாம் பக்தர்கள் கூட்டம். வேத கோஷம். நாதஸ்வர மேள தாளங்களின் இசைச் சங்கமம் அங்கு கூடியிருந்த ஒவ்வொரு ஜீவர்களின் மனங்களிலும் பக்தி வெள்ளத்தைக் கரைபுரண்டோடச் செய்கிறது. நம் குருமார்களான இரண்டு ஸரஸ்வதி ஸ்வரூபிகளும் முன்னால் செல்ல ஸ்ரீமஹாஸ்வாமிகளின் உற்சவமூர்த்தியின் உலா. புஷ்பங்களால் நிரைக்கப்பட்ட அவரைச் சுமக்கும் ஒவ்வொரு ஜீவர்களும் செய்த புண்ணியங்கள் தாம் என்ன! அந்த அற்புத பொழுதினில் நானும் ஒருவனென அந்தக் கூட்டத்தில் இருக்கும் பாக்கியத்தினை என்னென்று சொல்ல!!
மனம் சிரிக்கிறது; ஆயினும் கண்களில் நீரலைகளோடு அழுதுகொண்டே நான் எப்படியேனும் ஸ்ரீமஹாஸ்வாமிகள் அருகில் சென்று அவரை தரிசித்து நமஸ்கரிக்க வேண்டிய துடிப்புடன் கூட்டத்தின்னுள்ளாக நகர்கின்றேன். மனதில் உள்ள ஒவ்வொரு சோக உணர்வுகளும் எழுப்பும் அழுகையினை, அந்தச் சூழ்நிலையின் பாங்கு, அதாவது அந்த வேத கோஷங்கள், அந்த விளக்கொளிகள், பக்தர்களின் பக்திமணம், ஆச்சார்யர்களின் தரிசனம், அங்குள்ள பெண்மணிகளின் ஸ்லோகவொலிகள் இப்படியாக அந்த சூழ்நிலையின் தாக்கத்தால் எந்தன் சோகங்கள் கண்ணீராக வெளிப்பட்டு மனதில் பக்தி..ஆச்சார்யன் மேல் உள்ள பக்தி, அதனால் தோன்றிய நிலையான நம்பிக்கை, பெரியவா இருக்கா - பாத்துப்பாங்கிற ஏக்கம் இவற்றோடு நான்!
அந்த சூழலில் தான் இந்தப் பாடலையும் பாடுகின்றேன்.
பொதுவாக எந்தவொரு பாடலானாலும் பல்லவியைத் தொடர்ந்து கோரஸில் நாமவொலி கேட்டிருக்கின்றேன். இங்கே பல்லவியே பக்தர்களின் கோஷவொலியாகிறதாம். அந்த கோஷவொலிப் பல்லவியைத் தொடர்ந்து எந்தன் எண்ணத்து நெய்யெடுத்து ஏற்றுகிற தீபமாய் இந்தப் பாடல்வரிகள். எந்தன் ஒவ்வொரு அந்தாதியையும் ஆமோதிப்பதாகவும், உண்மை தான் - நாங்களும் இதனையே நினைக்கின்றோம் என்பதாக அந்த பக்த வெள்ளத்தினின்று ஒலிக்கப்பெறும் கோஷ நாம பல்லவி தொடர்கிறது.
ஹே, பக்தானுக்ரஹா! இதோ, நானும் உன்னைத் தேடி, உந்தன் பாதங்களில் சரண் புகுவதற்காக வந்துள்ளேன்! நீயே கதி இனி எனக்கு! எல்லாம் நீ தந்தது; நீயே எடுத்துக் கொள்கிறாய்! எனக்கு எது நல்லது என நீயே முடிவு செய்கிறாய்! அதுவே சௌக்கியம்! ஹே! பரந்தாமா, தோ..! இப்போ என் காலில் இடித்த உந்தன் தலைவாசல் தூண்; அது எனக்கு வலி தருகிறது. இந்த வலி எனக்கு நல்லது தானா! ஆம்! அந்த இடது கால் சுட்டு விரலில் இரத்த ஓட்டம் இப்போது அதிகமாகிறதோ! இது நேக்கு நல்லது தானே! அழுகின்றேன். அப்பா...! நோக்கு தான் எல்லாம் தெரியும்; எனக்கு எது நல்லதுன்னு அம்மா, அப்பாவுக்கு நல்லா தெரியும் என்பதை உணர்கின்ற பொழுதினில் அவர்கள் எனக்கு எட்டாத் தூரத்தில் இருத்தி வைக்கப்பட்டார்கள் - விதியின் வலிமை. ஆனால், தோ, நானிருக்கேண்டா-ந்னு நீங்க வந்துட்டேள் என் மனசுலே. அம்மையப்பனாச்சே நீங்க! உங்களுக்குத் தெரியாதா இந்தக் குழந்தைக்கு எது நல்லதுண்ணு! பெரியவா...! சோகத்தின் அழுத்தம் நேக்கு வலி தர்றது. வலிக்கிறது... நீங்க இருக்கேள்ங்கிற எண்ணம் மட்டுமே என்னை மறுபடியும் தூக்கி நிறுத்துகிறது. இப்படியாக புலம்பல்கள்; அவற்றால் தீட்டப்பெறும் உணர்வுக் கோலங்கள்...
கண்களில் நீர்பணித்திருப்பதை உணர்ந்த பொழுதினில் தான் இந்தப் பாடல் முடிவடைந்ததனை உணர்ந்து விழித்திருக்கும் நிலையிலும் ஓர் கனவு கண்ட த்ருப்தியை உணர்ந்தவனானேன்.
அது மட்டுமா! உடல் நிலை மோசத்தினால் பெற்ற அவதியும் குறைந்திருப்பதையும் உணர்ந்தேன். ஆம். என் மகன் எனக்குத் தாயாகி எனக்கு உணவு ஊட்டிவிட அந்த அமுத உணவினையும் உட்கொண்டு முடித்திருந்தேன். "என்னப்பா, டான்ஸ் ஆடின்டே பாட்டெழுதினே... அப்புறம் ஏன்ப்பா அழுதுண்டே எழுதினே?" எனக்கு என்ன பதில் சொல்வதென புரியாது விழிக்க மட்டுமே இயன்றது. அதே நேரம் அவனும் எனக்கென குடிக்க தூத்தம் கொண்டு வர சமையலறை நோக்கி நகர்ந்தான். பாடலும் இனிதே எழுதப்பெற்று முடிந்தது. மனம் ஓர் அமைதி தடத்தில் சில நொடிகள் ப்ரயாணிக்காது நிலைத்திருப்பதை உணரமுடிந்தது.
இந்தப் பாடலை பதிவு செய்யும் இந்த வேளையில், ஒவ்வொரு பொழுதிலும் என்னை அவர் நினைவாகவே இருக்கச் செய்யும் சூழ் நிலைதனை எனக்குச் சொந்தமாக்கும் ஒவ்வொரு ஜீவர்களுக்கும், உங்கள் ஒவ்வொருவரின் நலன் பொருட்டும் நான் செய்யும் ப்ரார்த்தனைகளைக் காணிக்கையாக்குகின்றேன், நன்றி உணர்வோடு!
பெரியவா கடாக்ஷம்.
நமஸ்காரங்களுடன்,
சாணு புத்திரன்.
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment