ஆசாரம் என்றால் என்ன?-
முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரி
சொன்னவர்-இந்திரா சௌந்த்ரராஜன்.
என் தாய்மாமாவின் மிக நெருங்கிய நண்பராய் திருமுக்கூர் அவர்கள் எனக்கும் அறிமுகமாகி, ஒரு மாதகாலம் மார்கழியில் திருப்பாவையும் பாகவதமும் சொற்பொழிவாக அருளினார்.
அவரது அழுத்தமான கருத்துக்களும், சொல்லாற்றலும் பெரும் கூட்டத்தை கூட்டிவிட்டது. அந்த மார்கழி மாதத்தை வாழ்நாளில் மறக்கமுடியாது.
அவரோடு அவரது தர்மபத்தினியாரும் தங்கி இருந்தார். திருமுக்கூர் ஆசார சீலர் ஆனதால் மனைவி கையாலன்றி வெளியே உண்ணமாட்டார்.
இதுகுறித்து நான் கேட்டேன். இப்படி நடந்து கொள்வதுதான் ஆசாரமா? இதில் மற்றவர்கள் சமைப்பது எல்லாம் ஒரு மாற்றுக்குறைவு என்கிற ஒரு எண்ணம் ஒளிந்திருக்கிறதே. சுகாதாரமாக யார் சமைத்துத் தந்தாலும் சாப்பிடுவதில் தவறு இல்லைதானே?" என்று அவரிடம் கேட்டேன். இந்த கேள்விக்கு அவர் சொன்ன பதில்தான், ஆசாரம் என்றால் என்ன என்பதற்கான தெளிவை எனக்குள் ஏற்படுத்தியது.
'ஆசாரம் என்பதற்கு ஆண்டவனின் சாரம் என்றும் பொருள் கொள்ளலாம். பெரிய சாரம் - அதாவது அரிதான ஒழுகு முறை அல்லது வழி நடப்பது என்று பொருள் கொள்ளலாம்.
அப்படி நடப்பதில் நிறைய நுட்பங்கள் இருக்கின்றன. மனைவி கையால் உண்பதற்கும், பிறர் கையால் உண்பதற்கும் இடையே நீங்கள் சுகாதரத்தை அடிப்படையாக வைத்து பார்த்தீர்கள். இங்கே அதுவல்ல விஷயம். மனைவி என்பவள் கணவனின் சுகதுக்கங்களில் பங்கு உடையவள். அவர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்பவர்கள் இவர்கள் பிரிந்து வாழ்வதுதான் தவறு - பாபம்!
இப்படி கடப்பாடுடைய மனைவி கையால் உண்பதற்கும் பிறர் கையால் (அது அக்கம்பக்கம் ஹோட்டல் என்று எதுவாக வேண்டுமானால் இருக்கலாம்) சாப்பிடுவதற்கும் வேற்றுமை உள்ளது.
நம் பசியை போக்குபவர் யாராக இருந்தாலும் அவர்கள் தெய்வத்துக்கு சமம். அப்படிப்பட்டவரின் நன்றிக்கு நம் உரியவராகி விடுகிறோம். அவருக்கு நம் வாழ்நாளில் பதில் நன்றியை காட்டாவிட்டால் அது பாவம். ஆனால், அவர்களுக்கு அது புண்ணியம். சாப்பிட்டதற்கு நாம் பணம் தரலாம். அது அரிசி பருப்புக்கு சரியாக இருக்கும். அவர்கள் காட்டிய அன்புக்கு? என்னைப் போல் ஊருக்கு ஊர் போய் கதை சொல்லும் ஒரு உபன்யாசகன், தன் வாழ்நாளில் இப்படி பல பேர் கையால் சாப்பிட நேரிட்டு அவர்களுக்கு கடமைப்பட்டவர்களாக மாறும் ஒரு அமைப்பு இதனாலே உருவாகிவிடுகிறது. ஆனால், என் போன்றவர்களின் வாழ்க்கை நோக்கமோ இப்பிறப்பில் நம்மால் முடிந்த நன்மைகளைச் செய்து, இதுபோன்ற நன்றிக்கடன்களில் சிக்கிக் கொள்ளாமல், பிறப்பை முடித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
அதனால்தான் கடப்பாடுள்ள மனைவி மட்டும்போதும். புதுகடப்பாடுகளுக்கு ஆளாக வேண்டாம் என்று, அதை ஒரு ஆசார அனுஷ்டானமாகக் கொண்டுள்ளேன். இப்படி ஒவ்வொரு அனுஷ்டானம் பின்னாலும் ஒருவரது லௌகீக கோணத்துக்கு அப்பாற்பட்ட ஒரு பெரும்பொருள் உள்ளே இருக்கிறது. இதைத் தவறாக கருதி மலிவாகப் பொருள் கொள்ளவும் இடம் இருக்கிறது.
பிறர்கையால் உண்ணும் போது அவருக்கு நன்றிக் கடன்படுவது மட்டும் நிகழ்வதில்லை. அந்த கை வழியாக அவர்களின் குணநலன்களும் நமக்குள் புகும் வாய்ப்பும் உள்ளது. இப்படி நான் சொல்வதை அனுபவத்தால்தான் உணர முடியும்.
ஒரு சன்னியாசி ஒரு வீட்டில் சாப்பிட சென்றார். அன்று அந்த வீட்டுப் பெண்ணுக்கு உடல் நலமில்லை. எனவே பக்கத்து வீட்டுப்பெண் வந்து சமைத்து பரிமாறினாள். இறுதியாக வெள்ளிக் கிண்ணத்தில் பாயம் சாப்பிட்டார். சாப்பிட்டுவிட்டு அந்த வெள்ளிக் கிண்ணத்தை சன்னியாசியே தன்னோடு வைத்துக் கொண்டுவிட்டார்.
மறுநாள்தான் அவருக்கு அந்த தவறே புரிந்தது. முற்றும் துறந்த நான் ஒரு வெள்ளிக்கிண்ணத்தின் மேல் ஆசைப் பட்டுவிட்டேனே.. சே! என்ன ஒரு போதனை என்று அவர் குழம்பவும்தான் - அவருக்கு சமைத்துப்போட்ட பெண்மணிக்கு திருட்டு குணம் இருப்பது தெரியவந்தது. அவர் கையால் சாப்பிடப் போக அது சன்னியாசியையும் தொற்றிக் கொண்டது.
இப்படி சாப்பிடுவதற்கு பின்னால் நிறைய சங்கதிகள் உள்ளன. மேலோட்டமாக பார்த்து நம் விருப்பத்துக்கும் வசதிக்கும் கருத்து கூறக்கூடாது, என்று அவர் கூறவும் தான் எனக்கும் பல உண்மைகள் புரிந்தன.
இன்றைய வேகமான வாழ்க்கைப் போக்கும், பணம் சம்பாதிக்கும் நடைமுறைகளும் நம்மை பகுத்தறிவோடு கேள்வி கேட்க வைக்கின்றன. ஆனால், பகுத்தறிவுள்ள சூட்சமமான பதில்களும் உள்ளன என்பது ஏனோ நமக்குத் தெரிவதில்லை |
No comments:
Post a Comment