மார்கழி மாத சிறப்புகள்
நமது மனித நாளில் காலை 4 மணி முதல் 6 மணிவரையான காலம் பிரம்ம முகூர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. சூரிய உதயத்திற்கு முந்தைய இந்தக் காலம் இறைவனை வணங்குவதற்கும், யோக சித்திக்கும் உகந்த நேரம் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அதிகாலை துயிலெழுவதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வலியுறுத்தினர். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். ஆகவே தேவர்களுடைய சூரிய உதயமான உத்தராயண காலத்திற்கு(தை மாதம்) முந்திய மார்கழி மாதம் தேவர்களின் பிரம்ம மூர்த்தமான காலமே மார்கழி மாதம். தேவர்கள் செய்யும் ஆறு கால பூஜையின் உதய கால பூஜையே திருவாதிரை பூஜையாகும்.
எல்லோரும் நினைப்பது போல மார்கழி மாதத்தில் வேறு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தாமல் இருப்பதற்கு காரணம் வேறு எதைப் பற்றியும் நினைக்காமல் அந்த இறைவனை மட்டுமே நாம் நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான், தெய்வ காரியங்களுக்காகவே ஏற்பட்ட மாதம் மார்கழி மாதம். அதனால் இந்த மாதம் முழுவதும் அனைத்து ஆலயங்களிலும் பிரம்ம முகூர்த்தத்தில் தனுர் மாத பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது. பாவை நோன்பைக் கொண்டாடுவதும் இந்த மாதத்தில்தான். எனவே தான் சிவத்தலங்களில் திருவெம்பாவையும், வைணவத் தலங்களில் திருப்பாவையும் சேவிக்கப்படுகின்றன.
தட்சாயண காலத்தின் கடைசி மாதம் மார்கழி, ருதுவில் இது ஹேமந்த ருது. தனுர் மாதம் என்றும் அழைக்கப்படுகின்றது. வேத ஞானத்தின் மணி முடியாகத் திகழும் ஸ்ரீமத் பகவத் கீதையில் "மாஸானாம் மார்கசீர்ஷோ அஹம்" அதாவது "மாதங்களில் நான் மார்கழி" என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகின்றார். இம்மாதத்தில் தான் பௌதீக நிலையின் அறியாமையிலிருந்து மனித குலத்தை விடுவிக்க அர்ஜ"னனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் கீதோபதேசம் செய்தார்.
மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், வைகுண்ட ஏகாதசியும் கொண்டாடப்படுகின்றது. சிவ பெருமானின் நட்சத்திரமாக கருதப்படுவது திருவாதிரை என்னும் ஆதிரை தரிசனம் அன்றைய தினம் தேவர்களின் பூஜையினால் மனம் மகிழ்ந்த நடராஜப் பெருமான் தமது ஆனந்த தாண்டவத்தை காட்டியருளிகின்றார். அனைத்து சைவத் தலங்களிலும் இன்றைய தினம் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது.
பல சைவத்தலங்களில் இவ்விழா பத்து நாள் விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம், மார்கழி மாத ஏகாதசி விரதம் வைகுண்ட ஏகாதசி என்றும், முப்பத்து முக்கோடி ஏகாதசியென்றும் போற்றப்படுகின்றது. பல வைணவ தலங்களில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அத்யயனோற்சவம் நடைபெறுகின்றது.
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari

No comments:
Post a Comment