அடகு ******* கணபதியும், அவர் மனைவி பாக்கியமும், தெருவில் தங்களை யாராவது கவனிக்கிறார்களா என நோட்டமிட்டவாறே தெருக் கோடியில் உள்ள அந்த அடகுக்கடைக்குள் நுழைந்தனர். - நகைகளை வைத்து பணமும், இரசீதும் பெற்று கொண்டு வெளியேறினர். வழியில் உள்ள மளிகைக் கடையில் அரிசியும், கொஞ்சம் மளிகையும் வாங்கி கொண்டு வீட்டுக்கு திரும்பினார்கள். - இவர்கள் அடகுக் கடைக்கு போனது தான் அன்றைக்கு அந்த தெருவில் முக்கிய விஷயமாக பேசப்பட்டது. என்ன ஆச்சு? பெருசுகளுக்கு? மளிகையும், மூட்டை அரிசியும் வீடு தேடிவருமே அடகு கடைக்கு வேறு போவானேன்? என்ன கஷ்டமோ பாவம் என பேசியவர்களில் நலம் விரும்பிகளும் உண்டு. நக்கல் அடிப்போரும் உண்டு. - மறு நாள் ரயிலில் எதிரில் அமர்ந்திருந்த கணபதியிடம், ஏங்க நாமகோயிலுக்கு போகத்தான் நம்ம பையன் பணம் கொடுத்தானே, பின்ன எதுக்கு நகையை சொற்ப பணத்துக்கு அடகுல வச்சீங்க? தெருவில் நம்மள பத்தி என்ன நினைப்பாங்க? என்றாள் பாக்கியம்மாள் கோபமாக. - பாக்கியம், நாம திரும்பி வர எப்படியும் பத்து நாள் ஆகும். நம்ம வீடோ தனியா ஒதுக்குப்புறமா இருக்குது. நாம வர்ற வரைக்கும் நகையெல்லாம் பத்திரமா இருக்க இதுவும் ஒரு வழிதான்.
மத்தவங்க நினைக்கிறத பத்தி நீ ஏன் கவலைப்படறே? என்றார் கணபதி. கணவரின் வியூகத்தை வியந்த பாக்கியம் வாயடைத்து அமர்ந்தாள். |
No comments:
Post a Comment