Thursday 26 December 2013

சென்னையில் நடைபெற்ற இசைக் கச்சேரிகளின்; சில விமர்சனம்.

சென்னையில் நடைபெற்ற இசைக் கச்சேரிகளின்; சில விமர்சனம்.

தினமணி;கலாரசிகன்.

எம்.எல்.வி. ஸ்லாட்டுக்கு வாரிசு வந்தாச்சு!

மார்கழி மாதம் தொடங்கியது முதல் இசை உலா வேண்டுமா வேண்டாமா என்கிற மனக்குழப்பத்திலேயே பத்து நாள்கள் ஓடிவிட்டன. வாசகர்களிடத்திலும் இசை ரசிகர்களிடமும் இசைக் கலைஞர்கள் மத்தியிலும் "இன்னும் ஏன் தினமணியின் இசை உலா வரவில்லை?' என்கிற எதிர்பார்ப்பையும் ஏக்கத்தையும் புறக்கணித்துவிடவும் மனமில்லை. நவம்பர் மாதம் முதலே சபாக்களை வளைய வந்து கொண்டிருக்கும் நாங்கள் இதோ தொடங்கிவிட்டோம் எங்கள் உலாவை!

இந்த ஆண்டு இசைவிழாவில் இரண்டு "மிஸ்ஸிங்'. முதலாவது இடிமின்னலுடன் கூடிய அடைமழை. இரண்டாவது அருணா சாய்ராம். கடந்த சில ஆண்டுகளைப் போல அடைமழை இல்லாததது "ப்ளஸ்'. தனது மகளின் உடல்நலக் குறைவுக்காக அருணா சாய்ராம் அமெரிக்கா சென்றுவிட்டிருப்பது "மைனஸ்'.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஏகப்பட்ட இளைஞர்கள் மேடை ஏறுகிறார்கள். மத்தியான கச்சேரி செய்துகொண்டிருந்த சிலர் சாயங்கால கச்சேரிக்கு முன்னேறி இருக்கிறார்கள். குரலில் பிசிறு தட்ட தொடங்கியிருக்கும் முன்னணிக் கலைஞர்கள் சிலர் அவர்களாகவே கச்சேரிகளை குறைத்து கொண்டுவிட்டார்கள். இன்னும் பத்து வருடத்துக்கு பிறகு 2013 சங்கீத சீசனை திருப்புமுனை சீசன் என்று வருங்காலம் வர்ணிக்கக் கூடும், யார் கண்டது?

வழக்கம்போல இந்த ஆண்டும் இசை உலா காயத்ரி வெங்கட்ராகவனுடன் தொடங்குகிறது. வேண்டாம் என்றாலும் தவிர்க்க முடியவில்லை. நமக்கு மட்டுமல்ல, சபாக்களாலும் தவிர்க்க முடியாத கலைஞராக வளர்ந்து விட்டிருக்கிறார் காயத்ரி வெங்கட்ராகவன் என்று நாம் சொல்லவில்லை, கிருஷ்ணகான சபா செயலாளர் ய. பிரபு கூறுகிறார். அவர் அப்படிச் சொல்வதற்கு காரணமும் இருக்கிறது.

நாம் கேட்ட காயத்ரியின் முதல் கச்சேரி, இந்த சீசனில் அவரது முதல் கச்சேரி. பாரதிய வித்யா பவனில் பத்மா சங்கரின் வயலினும், ஈரோடு நாகராஜின் மிருதங்கமும், என். குருபிரசாத்தின் கடமும் பக்கவாத்தியங்களாக வைத்துக்கொண்டு டிசம்பர் 6-ம் தேதி தனது சங்கீத உலாவைத் தொடங்கினார் காயத்ரி வெங்கட்ராகவன்.

அன்றைக்கு காயத்ரி பாடிய "என்னகானு ராம பஜன' (பந்துவராளி), "காண கண்கோடி வேண்டும்' (காம்போஜி) இரண்டுமே டாப் கிளாஸ். அதைவிட விசேஷம் என்னவென்றால் ஆலாபனையிலும் சரி, நிரவலின்போதும் சரி, ஸ்வரப்ரஸ்தாரங்களிலும் சரி காயத்ரிக்கு கிடைத்ததற்கு நிகரான ஆகாகாரமும் அப்ளாஸýம் பத்மா சங்கருக்கும் விழுந்தன என்பதுதான். அப்படியொரு அசாத்தியமான வாசிப்பு.

கிறிஸ்துமஸ் தினத்தன்று வழக்கம்போல கிருஷ்ணகான சபாவில் ஆஜரானால் ஒரு இன்ப அதிர்ச்சி. முதலில் அதிர்ச்சிக்கான காரணத்தைச் சொல்லிவிட்டு இன்பத்துக்குப் பிறகு வருகிறேன். வழக்கமாக கிறிஸ்துமஸ் அன்று காலை 9 மணிக்கு கிருஷ்ணகான சபாவில் எம்.எல். வசந்தகுமாரி பாடுவது வழக்கம். அவருடைய கச்சேரியை கேட்பதற்காகவே வெளியூர்களிலிருந்து எல்லாம் ரசிகர்கள் சென்னைக்கு படை எடுப்பார்கள்.

எம்.எல்.விக்கு பிறகு அந்த 9 மணி கச்சேரி சுதா ரகுநாதனின் ஸ்லாட்டாக மாறியது. தனது குருநாதரின் ஸ்லாட் என்பதாலோ என்னவோ அன்று கிருஷ்ணகான சபாவில் சுதாவின் கச்சேரி களைகட்டும். கூட்டம் நிரம்பி வழியும். கடந்த சில ஆண்டுகளாக சுதாவின் கச்சேரியை கிருஷ்ணகான சபாவில்தான் கேட்பது என்று பிடிவாதமாக இருக்கும் என் போன்ற ரசிகர்களுக்கு இந்த ஆண்டு பேரதிர்ச்சி. தனது உடல்நலம் சரியில்லை என்று நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டிருந்தார் அவர்.

அதிர்ச்சியின் காரணத்தை சொல்லிவிட்டேன். இன்பம் என்ன என்று கேட்பீர்களே? சுதாவுக்கு பதிலாக நேற்று கிருஷ்ணகான சபாவில் எம்.எல். வசந்தகுமாரியின் ஸ்லாட்டில் பாடியது காயத்ரி வெங்கட்ராகவன்!

"என்னடா இது, 6ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து கச்சேரி செய்து கொண்டிருக்கிறாரே, எப்படி இருக்கப் போகிறதோ?' என்கிற ஐயப்பாடுடன் உள்ளே போய் உட்கார்ந்தால் பிரமிப்பு! பிரமிப்பு!! பிரமிப்பு!!!

ஒரு டஜன் கச்சேரி செய்த தொண்டை என்று நம்பவா முடிகிறது? பாரதியார் எழுதிய "தேன் வந்து பாயுது காதினிலே' என்கிற வரிகளின் அர்த்தத்தை நேற்று காயத்ரி வெங்கட்ராகவனின் கச்சேரி கேட்டபோது நிஜமாகவே உணர்ந்தேன். மூன்று ஸ்தாயிகளிலும் சர்வசாதாரணமாக சஞ்சாரம் செய்யும் செப்படி வித்தை காயத்ரிக்கு பூர்வஜன்ம பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். விறுவிறுப்பான "மலையமாருதம்' ஆனாலும், விஸ்ராந்தியான "சிந்தாமணி'யானாலும் அவருக்கு இரண்டுமே ஒன்றுதான். அலட்டிக் கொள்ளாமல் பாட முடிகிறது.

காம்போதியில் விஸ்தாரமாக ஆலாபனை, நிரவல். தேர்ந்தெடுத்துக்கொண்ட சாகித்யம் தியாகய்யரின் "ஓ ரங்கசாயி'. காயத்ரி வெங்கட்ராகவனுக்கு காம்போதி என்று சொன்னால் அல்வா சாப்பிடுவது மாதிரி. தண்ணீரில் மீன் நீந்தி திரிவது போல காம்போதியில் விளையாடி விட்டார்.

ராகம், தானம், பல்லவிக்கு அவர் எடுத்துக்கொண்ட ராகம் "கீரவாணி'. தாளத்தை "த்வி' நடையில் அமைத்துக்கொண்டு அவரும் வயலின் வாசித்த சாருலதா ராமானுஜமும் ரசிகர்களை உன்மத்த நிலைக்கே கொண்டு சென்றுவிட்டனர். ராகமாலிகையாக "கேதாரம்', "பகுதாரி', "ஹம்சாநந்தி' ஆகிய மூன்று ராகங்களை தொட்டுக்காட்டி பிரமாதப்படுத்திவிட்டார். அவருக்கு ஈடு கொடுத்தார் என்பதைவிட கொஞ்சமும் சளைக்காமல் இணைந்து வாசித்தார் என்று சாருலதா ராமானுஜத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஏற்கெனவே இவரது வாசிப்பை சவிதா நரசிம்மனின் கச்சேரியில் கேட்டு வியந்திருக்கிறேன். அதுபற்றி பிறகு எழுதுகிறேன்.

நேற்றைய காயத்ரி வெங்கட்ராகவன் கச்சேரியில் இன்னொரு ஹைலைட் பாரதியார் பாடல்கள். "பாயும் ஒளி நீ எனக்கு' (எம்.எல்.வி.), "வில்லினை ஒத்த புருவமும்' (எம்.எஸ்.), "ஆடுவோமே பள்ளு பாடுவோமே' (டி.கே.பி.) என்று அவர் பாடியபோது அந்த இசை முன்னோடிகளை செவிகளில் கொண்டு நிறுத்தினார்.

எம்.எஸ். சுப்புலட்சுமியின் குரலில் எம்.எல். வசந்தகுமாரி பாடினால் எப்படி இருக்கும்? காயத்ரி வெங்கட்ராகவன் பாடுவதைப் போல இருக்கும். கிருஷ்ணகான சபாவில் எம்.எல்.வி.யின் ஸ்லாட்டுக்கு அடுத்த வாரிசு வந்தாச்சு!

என்னவொரு சௌக்கியம்...

இந்த வருட சங்கீத சீசனில் ஒரு வித்தியாசமான ட்ரெண்ட். யாரும் மூத்த கலைஞர்களைப் பற்றி அதிகம் பேசுவதே இல்லை. இளம் கலைஞர்களைப் பற்றியும் புதிதாக வந்திருப்பவர்களைப் பற்றியும்தான் சபா வராந்தாக்களிலும் கேன்டீன்களிலும் பெருவாரியான ரசிகர்கள் விவாதிக்கிறார்கள்.

அவ்வப்போது இன்னாருக்கு தொண்டை சரியில்லை, சாரீரம் ஒத்துழைக்கவில்லை, என்ன இப்படியெல்லாம் கிறுக்குத்தனம் பண்ணுகிறார், இந்த சேஷ்டைகளெல்லாம் தேவைதானா போன்ற வெட்டிப் பேச்சுகள் காதில் விழுந்தாலும் புதியவர்களைப் பற்றியும் இளம்கலைஞர்களைப் பற்றியும் சிலாகித்துப் பேசுபவர்கள்தான் அதிகம். அப்படி சிலாகித்துப் பேசப்படும் இளம் கலைஞர்களில் ஒருவர் பரத் சுந்தர்.

நாரதகான சபாவின் மினி ஹாலில் கடந்த ஞாயிறன்று மதியம் 2 மணிக்கு பரத் சுந்தரின் கச்சேரி. மத்தியான கச்சேரி ஆயிற்றே, ஏர்கண்டிஷன் அரங்கத்தில் குறட்டைவிடத்தானே வருவார்கள் என்று யாராவது நினைத்தால் மகா தவறு. அவரது சங்கீதத்தை கேட்பதற்காகவே கூட்டம் காத்துக் கொண்டிருந்தது. அதில் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் ரசிகர்கள் பலர் இருந்தனர் என்பது ஆச்சரியப்பட வைத்தது.

தனது கச்சேரியை அமைத்துக் கொள்ளும் அபாரமான திறமை இந்த இளைஞருக்கு இருக்கிறது. ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாக இருப்பதற்கு ஏற்றாற் போன்ற ராகங்களையும் சாகித்யங்களையும் பரத் சுந்தர் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் நேர்த்திக்காகவே அவருக்கு ஒரு சபாஷ் போட வேண்டும்.

"ஜலஜாக்ஷ' (ஹம்சத்வனி) வர்ணத்துடன் தொடங்கிய கச்சேரி லால்குடியின் தில்லானாவுடன் நிறைவு பெறும்வரை அரங்கத்திலிருந்து ஒருவராவது அங்கே இங்கே எழுந்து போக வேண்டுமே, ஊஹும்.

அன்று "சரசாங்கி' ராகத்தில் "நீ கேள தய ராது' பாடியிருக்கிறார் பாருங்கள், அடடா, அடடா என்ன ஒரு செüக்கியம். நிரவல் கல்பனா ஸ்வரம் இரண்டிலுமே பரத் சுந்தரின் சங்கீத ஆளுமை வெளிப்பட்டது. விஸ்தாரமான ஆலாபனைக்கு அவர் எடுத்துக் கொண்ட ராகம் "தோடி'. தாச்சுகோவலேனிதான் சாகித்யம். அதில் செüமித்ரி பாக்யமே என்கிற இடத்தில் நிரவல் ஸ்வரம், பிறகு தனி. விசேஷம் என்னவென்றால் பொருத்தமாக பரத் சுந்தர் ஸ்வரம் பாடிய நேர்த்தி.

கஜ வதனா (ஸ்ரீரஞ்சனி), தெலிசிராம சிந்தனத்தோ (பூர்ணசந்திரிகா) போன்ற உருப்படிகள் கச்சேரியின் விறுவிறுப்பை அதிகப்படுத்தின. எம்.எஸ். அனந்தகிருஷ்ணனின் வயலினும், திருவனந்தபுரம் பாலாஜியின் மிருதங்கமும், அடுத்த தலைமுறை இளைஞர் கூட்டத்தின் சங்கீதம் எப்படி இருக்கப்போகிறது என்பதற்கு கட்டியம் கூறின.

சபாக்காரர்களுக்கு ஒரு வேண்டுகோள்: இனியும் தயவு செய்து பரத் சுந்தர் போன்ற முன்னேறி விட்ட கலைஞர்களை, சிறுபிள்ளைகளாக கருதி மத்தியான கச்சேரிக்கு ஏற்பாடு செய்யாதீர்கள். சீனியர்களை சவாலுக்கு இழுக்கும் திறமைசாலிகள் அன்று நாரத கான சபா மினி ஹாலில் இசை நிகழ்ச்சி நடத்திய பரத் சுந்தரும் பக்காவாத்தியக்காரர்களும்.

தம்புராவுக்கும் தொண்டைக்கும் சென்ஸார் தொடர்பு!

சங்கீத சீசனில் பல நல்ல கச்சேரிகளை சாஸ்த்ரி ஹாலில்தான் கேட்க முடியும் என்று கொட்டை போட்ட சங்கீத ரசிகர்கள் சொல்வார்கள். அந்த ஹாலுக்கு அப்படியொரு ராசி. சாதாரணமான வித்வானாக இருந்தாலும் சாஸ்த்ரி ஹாலில் பாடினால் கச்சேரி அசாத்தியமாக அமைந்துவிடும். அதனால்தான் மறைந்த திருவெண்காடு ஜெயராமன் சாஸ்த்ரி ஹாலை விக்கிரமாதித்தன் சிம்மாசானம் என்று நகைச்சுவையாக குறிப்பிடுவார்.

கபாலி பைன் ஆர்ட்ஸ் சார்பில் பாலக்காடு ராம்பிரசாத்தின் கச்சேரி. இவருடைய வம்சாவளி என்ன தெரியுமோ? பாலக்காடு மணி அய்யரின் பேரன். லய சுத்தத்துக்கு கேட்க வேண்டுமா? ஸ்ருதி சுத்தம் எப்படிப்பட்டது என்றால் பஞ்சமம் ஆனாலும் சரி, மத்யமம் ஆனாலும் சரி, தம்புராவுக்கும் இவரது தொண்டைக்கும் ஏதோ ஒரு சென்ஸார் தொடர்பு இருக்கும் போலிருக்கிறது. அப்படி ஒரு சேர்ச்சை.

பாலக்காடு ராம்பிரசாத்தை சிக்கில் குருசரண், அபிஷேக் ரகுராம் வரிசையில் சேர்க்கலாம். அப்படியொரு அமரிக்கையான சங்கீதம்.

மாயாமளவ கெüளையில் "தேவ தேவ கலையாமிதே' என்று தனது நிகழ்ச்சியை ஆரம்பித்தது முதல் கொஞ்சம் கூட அலுப்புத் தட்டாமல் சரசரவென்று நகர்த்திக்கொண்டு போனார். ஏதாவது ஒரு கனமான ராகத்தை எடுத்துக் கையாள்வார் என்று எதிர்பார்த்தால் ராம்பிரசாத் சுகமான ராகத்தை ஆலாபனைக்கு எடுத்து ரசிகர்களை மயக்கினார். எடுத்துக்கொண்ட ராகம் ஹமீர் கல்யாணி.

மார்கழி மாதம் என்பதால் தூமணி மாடத்து என்கிற திருப்பாவையில் பிரமாதமாக நிரவல் ஸ்வரம் பாடி பிரமிக்க வைத்துவிட்டார். அதற்குப் பிறகு அவர் ஜெயந்தஸ்ரீ, பேஹாக் ராகங்களில் கீர்த்தனங்களும், லதாங்கி ராகத்தில் ராகம், தானம், பல்லவியும் பாடினாலும்கூட கச்சேரி முடிந்து பல மணி நேரத்திற்கு ராம்பிரசாத்தின் தூமணி மாடத்துதான் காதில் ரீங்காரம் செய்துகொண்டிருந்தது.

அப்படியானால் "லதாங்கி' ராகம், தாளம், பல்லவி சோடையா என்றெல்லாம் கேட்டுவிடக் கூடாது. பதர்பேணி நன்றாக இருக்கிறது என்று சொன்னால் பாயசம் நன்றாக இல்லை என்றா அர்த்தம்?

இதையெல்லாம் சொல்லிவிட்டு ராம்பிரசாத்தின் பாட்டுக்கு சொல்லுக்கு சொல், தாளத்துக்கு தாளம், சுகத்துக்கு சுகம் என்று ஈடு கொடுத்த எம்.ஆர். கோபிநாத்தின் வயலினையும், திருவனந்தபுரம் பாலாஜியின் மிருதங்கத்தையும், ராஜகணேஷின் கஞ்சிராவையும் பாராட்டாமல் விட்டால், அது இசை தேவதைக்கே பொறுக்காது.

முதல் நாள் விமர்சனத்தை இத்துடன் முடித்துக் கொள்வோம். நாளை முதல் நமது விமர்சன ஆலாபனை சற்று விஸ்தாரமாகவே தொடரும்.

குரலுக்கு மருந்து..

50 வருஷங்களுக்கு முன்பு வந்து கொண்டிருந்த திங்கள் என்ற பத்திரிகையில் வந்த வைத்தியக் குறிப்பு இது. சங்கீதம் பழகுபவர்கள் மற்றும் வித்வான்கள் சாரீரம் நன்கு அமைய இந்த மருந்து உதவும் என்று குறிப்பு போட்டிருந்தார்கள்.

அதிமதுரம் 2 ரூபாய் எடை, சீரகம் 1 ரூபாய் எடை, ஓமம் 1 ரூபாய், கடுக்காய் (விதை நீக்கியது), வசம்பு, சுக்கு, இந்துப்பு, லவங்கப்பட்டை, பூலாங்கிழங்கு, நாவல் பூ, ஜாதிக்காய் (இவை அனைத்தும் அரை ரூபாய் எடை), அரிசித் திப்பிலி கால் ரூபாய் எடை.

தயாரிக்கும் முறை: இந்தப் பதினான்கு மருந்துச் சரக்குகளையும் வாங்கி கல், தூசி, துரும்பு இன்றிச் சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும். கடுக்காய் விதையெடுத்த பிறகு நிறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

இவை நன்றாகக் காய்ந்த பிறகு உரலில் போட்டு இடித்து மெல்லிய துணியில் சலித்து எடுத்துக் கொள்ளவும். குங்குமப் பூ ஒரு ரூபாய் எடை. பச்சைக் கல்பூரம், புனுகு, ஜவ்வாது ஆசியவை வகைக்கு கால் ரூபாய் எடை ஆக நான்கும் ஒன்றே முக்கால் ரூபாய் எடை ஒன்றாகக் கலந்து, பொடி செய்து வைத்துள்ளதுடன் நன்றாகக் கலந்து காற்றுப் போகாத சீசாவில் அடைத்துப் பத்திரப்படுத்தவும். அதிகாலையிலும், இரவிலும் இந்தச் சூரணத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வருவது சாரீரத்தை விருத்தி செய்து கொள்ளச் சிறந்த வழியாகும்.



தகவல் உதவி: ஜெயஸ்ரீ, படங்கள்: ஆர்.கே., ஏ.எஸ். கணேஷ், கே.அண்ணாமலை

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator