நான் எழுதும் பதிவினை எப்படி எல்லாம் பலபேர் சிந்திப்பார்கள் என்று யோசித்தேன் அதனாலே ஒரு அவியல், குவியல்.
நம் நினைப்பே அவியல் ஒரு குவியல் - இது ஒரு அவியல், குவியல் எங்கே போனாலும் நமக்கு இரண்டு வழிகள் தென்படுகின்றன. இப்படியா, அப்படியா, இதுவா, அதுவா என்றே பல நேரம் குழம்புகிறோம். நம்மைச் சுற்றியுள்ளோரையும் குழப்பத்தில் ஆழ்த்துகிறோம். எதுவுமே துவக்கத்திலேயே முடிவெடுக்க இயலாத நிலை. எதையுமே முழுமையாக நம்பி இதுதான் சரி, நமக்குத் தகுந்தது என்று முடிவெடுக்க முடியவில்லை. ஏதோ ஒன்று வாங்கவேண்டுமெனக் கிளம்பி, ஏதோ கண்களில் பட, ஏதோ ஒன்று வாங்கி அதையும் அடுத்த நாள் மாற்றி இன்னொன்று வாங்கி அதிலும் திருப்தி அடையாமல் இருக்கிறோம். பல தருணங்களில் நாம் நம்பிக்கை வைத்தது தவறாகப்போய்விட்டதே என்றும் வருந்துகிறோம். என்னவோ ! நான் நினைச்சதே வேற ! நடந்ததே வேற என வருத்தப்படுவோர் பலர். ஏதோ படிக்கவேண்டும், ஏதோ வேலைக்கு போகவேண்டும், ஏதோ ஒருவனை (ளை) த்திருமணம் செய்யவேண்டும், என பல ஏதோக்களில் தமது வாழ்க்கையை நடத்துபவர் பலர் தமது வாழ்வின் மத்தியிலோ அல்லது மாலையிலோ தமைத்தாமே நொந்தும் கொள்கிறார்க்ள். இவற்றிற்குக் காரணம் கூறப்போனால் ஒன்று இவர்களுக்கு என்ன வேண்டுமென்பதிலே இருக்கும் தெளிவின்மை.
இரண்டாவது எது வேண்டுமோ அது பற்றிய விவரங்கள், விளக்கங்கள் இலாத நிலை. ஆகா ! இவர் சொல்லிவிட்டார் சரியாகத்தான் இருக்கும் . அவர் வாங்கியிருக்கிறார். நன்றாகத்தான் இருக்கும். என்று பல விஷயங்களில் பலரை நம்பி பின் ஏமாற்றம் அடைகிறோம். நாம் எதை நம்பவேண்டும் எதை நம்பிவிடக்கூடாது என்பதில் போதுமான தேர்ச்சி நமக்கில்லை எனவே தோன்றுகிறது.
"தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐயறவும், தீரா இடும்பை தரும் " என்பார் வள்ளுவர்.
(ஆராயாமல் ஒருவரை (ஒரு கருத்தை) நம்புதலும், ஆராந்தபின், எதை நம்பிச் செயல்படத்துவங்கிவிட்டோமோ, அதன்பால், சந்தேகக்கண்களுடனேயே இருப்பதும் முடிவிலா துன்பத்தைத் தரும்)
" ஒல்வது, அறிவது அறிந்து அதன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல் " என்றும் சொல்கிறார் வள்ளுவர்.
ஒரு காரியம் நம்மால் முடியுமா ? அதில் அறியவேண்டியது எல்லாம் அறிந்து விட்டோமா என்று எண்ணாமலேயே பல காரியங்களை நடுவிலே கொண்டு வந்து நிறுத்திய நிலையில் குழப்பத்துடன் நிற்கும் மத்திய தர பிரிவினர் ஏராளம். நமது பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் உலகத்து அன்றாட வாழ்க்கையிலே நமது தெளிவின்மையும் ஆராயாத நம்பிக்கையும் மட்டுமே முதற் காரணங்கள்.
நேரமில்லை. ஏதோ நடப்போம். செய்வோம். எல்லாம் அந்த ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று சொல்பவரும் பலர். சஞ்சலம், குழப்பத்தின் மூல காரணமே indecision.
ஆண்டவன் பார்த்துக் கொள்வான் என்று ஆன்மீகப்பக்கம் திரும்பினால் அங்கும் ஏகப்பட்ட குரல்கள். எது சரி ? எதை நம்புவது ? தோத்திரங்கள், சாத்திரங்கள், ஜாதகங்கள், பரிகாரங்கள், பல்வேறு புண்ய ஸ்தலங்கள், அங்கே ( நமது கர்ம வினைகளை நீக்குவதாகச் சொல்லப்படும்) நீத்தார் கடன் முடித்தல், நாம் முத்தி பெற செய்யவேண்டிய கருமங்கள், ஹோமங்கள், பலவித தானங்கள். இவையெல்லாம் அவ்வளவு வேண்டாம், ஏதோ நம் வீட்டில் இருந்துகொண்டே இறை பக்தி செய்தால் மட்டும் போதும் என்று நினைத்தாலும், அங்கு பற்பல திசைகளிலிருந்து பற்பல பரிந்துரைகள். இதுவா அதுவா என்று புரியாத நிலையில் இரண்டையுமே ஒழிந்து நிற்பவர் ஏராளம். எதற்கு வம்பு, என இரண்டையுமே கடைப்பிடிப்பர் சிலர். சிவனா, பெருமாளா ? அம்பாளா, தாயாரா ? வினாயகனா , விச்வ்க்சேனரா ? தமிழா வட மொழியா ? தெய்வம் பார்த்து இருப்பது கிழக்கா, வடக்கா, தெற்கா, மேற்கா ? எந்தக் கடவுள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தார் !! எந்தத் திதியில் ? பிள்ளையாரா சதுர்த்தியில் . முருகன் சட்டியில்., சிவன் பிரதோஷத்தன்று. எந்தக் கடவுளுக்கு எந்தக் கிழமையில் அர்ச்சனை செய்வது நல்லது ? சனி பகவானுக்கு சனிக்கிழமை. அங்காரகனுக்கு செவ்வாய் தக்ஷிணாமூர்த்திக்கு வியாழன். அம்பாளுக்கு வெள்ளி. அனுமனுக்கும் சனிக்கிழமை விசேடம். முருகனுக்கும் வியாழன் விசேடம்.
போதாக்குறைக்கு சூரிய மண்டலத்திலே சாயா க்ருஹமாம், ராகு கேது. எல்லா க்ருஹங்களும் க்ளாக் வைஸ். ராகு கேது மட்டும் ஆன்டி க்ளாக் வைஸ் ராகுகாலத்தில் சனிக்கிழமையன்று அதை எதிர்பக்கம் சுற்றணும்னு எங்க வீட்டு ஜோசியர் சொல்றாரே?
எங்க சாமிக்கு என்ன பூ ? அரளியா,வில்வமா, துளசியா ? அனுமாருக்கு என்ன போடவேண்டும் ? வெண்ணையா ? வெற்றிலையா இல்லை வெற்று பேப்பரையே மடித்து ராமா ராமா என எழுதி அதை மாலையாக்கலாமா ? நாம் வழிபடும் கடவுளுக்குப்பிடித்தது வடையா ? பாயசமா, கொழுக்கட்டையா, நிலக்கடலை சுண்டலா ?
" எதுவுமே இல்லை. நமக்கு எது பிடிக்குமோ சாப்பிடுகிறோமோ அதையே ஆண்டவனுக்கும் அர்ப்பித்துவிட்டு நாம் உண்ணலாம். தவறே இல்லை." இது அத்வைத வ்யாக்யானம் அப்படின்னு வேற பக்கத்து வீட்டு வேத வித்தகர் சொல்கிறார்.
இவர்கள் போடும் வாதப் பிரதிவாதங்கள் எல்லாமே சரியென்று தோன்றினாலும், இந்த வாதங்கள் முடிவதற்கு முன்னாடியே நாம் முடிந்து போய் விடுவோம் போல் இருக்கிறதே ! என்று நினைத்தேன். எதிர்வீட்டு நண்பர் சொல்வார்: இது கலியுகம். மந்திரம், தந்திரம் எதுவுமே வேண்டாம் ராம ராம என்று இறைவனை இதயத்தில் நிறுத்தி ஜபம் செய்யுங்கள் அது போதும் .
அப்படியா ! சரிதான்! இராமனை விட இராம நாமம் தான் உசத்தி. என்று கொஞ்ச நேரம் ராம ஜெபம் செய்யப்போனால், பக்கத்து வீட்டிலிருந்து சுதா பாடுகிறார்: " சிவனை நினைந்தவர் எவர் தாழ்ந்தார் ? சிவனை மறந்தவர் எவர் வாழ்ந்தார் ? "
நான் எனது மனைவியைப் பார்க்கிறேன். " எதற்கு நமக்கு வம்பு ? " நான் ராம ராமான்னு சொல்றேன். நீங்கள் ஓம் நமசிவாய சொல்லுங்கள். அந்தக் கடவுளுக்கு நம்மைப்பற்றித் தெரியாதா என்ன ? எல்லாம் அவன் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வான்' என்று அட்வைஸ் தரும் தரும பத்னி.
இதெல்லாம் எதுவுமே இல்லை. நான் தான் அந்த கடவுள். விஷ்ணுவின் அவதாரம். என்று ஊருக்கு ஒரு கடவுள் உயிரோட.
ஏன் இப்படி ஏகப்பட்டது இருக்கே நமது நம்பிக்கைக்குள்ளே என்றால் அதுதான் நமது மதத்தின் பெருமை. Diversity is the essence of our religion. அப்படியும் சொல்கிறார்கள். என் நண்பர் ஒருவர். அரசாங்கத்தில் மிகப்பெரிய பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். மறைகளனைத்தும் ஒருங்கே கற்றவர். கற்று அதற்குத்தக நிற்பவர். அவரிடம் கேட்டேன். "அய்யா ! வள்ளுவர் சொல்கிறாரே !
"யாம்மெய்யாக் கண்டவற்றுள், இல்லை, எனைத் தொன்றும் வாய்மெயின் நல்ல பிற "
அய்யா ! இவர்கள் சொல்வதில் எல்லாம் எது உண்மை ? "
அவர் கேட்டார் , நீர் தமிழ் கற்றவர் தானே ! சரியென்றும் சொல்லமுடியவில்லை. இல்லை என்றும் சொல்ல "தான்" எனைத் தடுத்த நிலை. மெளனித்தேன். அவர் தொடர்ந்தார்:
" நாடிலெழுத் தாறும் நடுவெழுத் தீரைந்தும் ஓடி னொருபதினா லாகுமே = ஓடாய் நீ ஓரெழுத்தைக் கண்டுறங்கி உன்னோ டுறங்கி நெஞ்சே ஓரெழுத்தி லேசென் றுரை."
(அகரம் ஆரம்பித்த பாடங்களை ஏன் படிக்கவில்லை என்கிறாரோ ? ) " ஓரெழுத்தா ? " "ஆம்." " அதை எங்கே சொல்லித்தருவார்கள் ?" "எங்கேயும் இல்லை ." ' அப்ப நான் முத்தி எப்படித்தான் பெறுவது " ஒரு விரக்தியுடன் கேட்டேன். அவர் பதில் சொன்னார்: சும்மா இரு. எனக்கு புரிவது போல இருந்தது. எண்ணங்களை ஒடுக்கினாலன்றி தெளிவு ஏற்படாது. ஆகவே மனதைக் கட்டுக்கொள் கொண்டு வா. மனம் அமைதியுறும் போது இலக்கு நன்றாகத்தெரியும் எனச்சொல்கிறார். என்னால் முடியும் என்று தோன்றவில்லை. நான் சொன்னேன்: அய்யா ! என்னால் சும்மா இருக்க முடியலையே ! "எவ்வது உறைவது உலகம், உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு." சொல்றாருல்லே வள்ளுவரு, அது போல இருந்துட்டுபோ அப்படின்னு சொல்றீகளோ ?
" இல்லை. "சஞ்சலம் அற்று எல்லாம் நீ தான் என்று உணர்ந்தேன் என் அஞ்சலியும் கொள்ளாய் அரசே பராபரமே " ... தாயுமானவர் சொல்வார் இல்லையா ? அது போல் "எல்லாமே நீதான் என்று உணர்" என்றார்."
" அந்த ' நீ ' யாருங்க அய்யா ? " அது நீ தான் " " நான் நீ எனக்குறிப்பிட்டது அவனை. நீங்கள் ' நீ ' எனக்குறிப்பிடுவது என்னையல்லவா ?" " இந்த இரண்டுமே ஒன்று தான் . "
அதே சஞ்சலம்.
ஆனாலும் புரிகிறாற்போல் தோன்றியது.
"அய்யா" என்று அழைத்தேன். "இங்கேதான் இருக்கிறேன்.சொல்" என்றார். " நான் இத்தனை மறை படித்திருக்கிறேன். ! எவ்வளவு பாசுரங்கள் ஓயாது ஒரு நாளைக்கு முப்பது மணி நேரம் சொல்லுகிறேன் ! இவ்வளவு படித்த எனக்குத் தெரியாத உண்மை அந்த மாடு மேய்த்த சத்யகாமனுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது ?" "அவன் ஒருவனைப் பிடித்துக்கொண்டான். அவன் வழி நடந்தான்."
"அந்த ஒருவன் யார் ? பிரும்மனா ?"
" இல்லை . பிரும்மனை அறியும் வித்தையைக் கற்பிக்கும் ஆசான்."
" எங்கே இருக்கிறார் ?" மனமே தேடு ,உன் உள் இருக்கும் புதையலை தேடு ...... அது தான் பிரம்மம். |
No comments:
Post a Comment