"கொழந்தைக்கு நல்ல தர்மதாத்தா- சம்சாரசாகரத்தில் இருந்து கரையேற்றும் கப்பலோட்டி" ரிக், யஜுர் ,சாமவேதங்கள் மூன்றும் பயிலுவிக்கும் மடத்து குழந்தைகள் பெரியவாமுன்னர் மாமறை ஒப்பித்தனர். பெரிய வித்வத் சதஸ் நடந்து பெரும் வித்வான்கள் சம்பாவனைகள் பெற்றிருந்த சமயம். எதிர்காலத்தில் நமது சனாதன தர்மத்தின் ஆணி வேரான வேதத்தை காத்து தரப்போகும் இளம் வாரிசுகளையும் சம்பாவிக்க தெய்வம் சங்கல்பித்தது போலும்! சுவையான முறையில் அதை செய்தார்...யஜுர் வித்யார்த்தி கூறிய பஞ்சாதியில் "க்ரிஷ்ணாஜினம்" [மான்தோல்] என்று வந்தது. உடனே பெரியவா அப்பிள்ளைக்கு, மாந்தோலாசனம் பரிசளிக்கசெய்தார். சாமவேத வித்யார்த்தி சோமனை பற்றிவேதகானம் இசைத்தான். "கொழந்தைக்கு நல்ல சோமன் [வேஷ்டி] கொண்டு வாங்கோ" என்று வழங்கினார் தர்மதாத்தா. ரிக் வேத வித்யார்த்தி சொல்லி போன ஸூக்தத்தில் இதுபோல் மந்திர வார்த்தைகள், பரிசளிக்க கூடியதாக எதுவும் வரவில்லை. முடிக்கும் போது ஏதோ ஒரு வார்த்தை, "நெய்தோசை" என்பது போல் ஒலித்தது.பெரியவாளுக்கு அதுவே போதுமானதாகி விட்டது. "கொழந்தைகள் எல்லாருக்கும் இப்பவே நெய்தோசை வார்த்து போடுங்கோ!" என்று அன்பாணை இட்டு விட்டார் நம் வள்ளல். வாயிலை ஒட்டியுள்ள அறையில் அமர்ந்திருந்த பெரியவா, கப்பல்களை பற்றிய விசாரணைசெய்தார். எத்தனை கப்பல் ஒன்றுக்கொன்று இடிக்காமல் போகின்றன, எதாவது மூழ்கி போயிடுத்தா என்று கேள்விகள் வேறு.யாரை கேட்க்கிறார் என்று ஒருத்தருக்கும் புரியவில்லை. விசாகபட்டினம் போர்ட்ஆபீசர் ஒருவர் தன்னிடம் தான் பெரியவா கேட்கிறார் என்று நினைத்தார். புரிபடாத கேள்வியாக இருந்ததால், பெரியவாளிடமே தெளிவு படுத்துமாறு கேட்டார். பெரியவா அழகாக சிரித்தார். "த்ளாயிரத்து முப்பத்தார்ல நான் வைசாக் வந்து போர்ட் எல்லாம் சுத்தி பாத்திருக்கேன். ஆனா,......இப்ப நான் கேள்வி கேட்டுண்டு இருந்தது, ஒங்க கப்பலை பத்தி இல்லே..... .நான் பண்ணின கப்பல்களை பத்திதான் கேட்டுண்டு இருந்தேன். இங்கே சில பசங்கள் அழுதுண்டு இருந்ததுகள். மழை பெய்யறதோன்னோ? அதனால காயிதத்துலஅஞ்சாறு கப்பல் பண்ணி அதுகளுக்கு கொடுத்து, ரோட்ல ஜலம் ஓடிண்டிருக்கொன்னோ, அதுலவிட்டு வெளையாடஅனுப்பிச்சேன்....அந்த கப்பல்களோட "க்ஷேமலாபம்"தான் விசாரிசுண்டிருக்கேன். நீ என்னமா பதில் சொல்லுவே?"சம்சாரசாகரத்தில் இருந்து கரையேற்றும் கப்பலோட்டி இப்படி ஒரு இனிய விதத்தில் கப்பல் தயாரிப்பாளராகி இருக்கிறார் !
No comments:
Post a Comment