ஆற்றங்கரையோர ஆடிப்பெருக்கு! 03-08-2014
(வலையில் படித்தது)
புளிசாதத்திலிருந்து ஆறடி கூந்தல் அழகி தன் தலைக்குச் சதும்பத் தேய்த்துக் குளிக்கும் அளவிற்கு எண்ணெய் என் கையில் இறங்கியிருந்ததில் என் முகத்தை அதில் பார்த்துக்கொண்டே கேட்டேன் "இன்னிக்கி என்ன எல்லாம் கலந்த சாதமாயிருக்கு?" "இன்னிக்கு பதினெட்டாம் பெருக்குடா"
அம்மா சொன்னதும்தான் இன்று ஆடி பதினெட்டு என்று புத்தியில் உரைத்தது. பதினெட்டாம் பெருக்கு. பால்ய வயது ஞாபகங்கள் என் உள்ளங்கை எண்ணெய்க் கண்ணாடியில் கனாப் புகையின் நடுவே கலர்க் கலர் காட்சிகளாய் இரண்டு மூன்று ரீல்கள் ஓடியது.பதினெட்டாம் பெருக்குக்கு இரண்டு நாட்கள் முன்னரே மூலையில் கிடந்த பழைய சப்பரத்தை தூசித் தட்டி எடுத்து ஆங்காங்கே ஆப்படித்து ஆணியடித்து இன்னும் சில மராமத்துப் பணிகள் செய்துச் செப்பனிட்டுக் கொள்வோம். மத்தியான்ன நேரத்திலிருந்து காகிதக் கப்பலும், கொடிச்சப்பர அலங்காரமும் கும்பலாக உட்கார்ந்து குருவி சோப்பிற்கு லேபிள் மடிக்கும் குடிசைத் தொழில் போல நடக்கும். அந்த வருஷத்திய வாசனை தொலையாத புத்தம் புது நோட்டிலிருந்து சலவைக் காகிதக் கப்பல் செய்துவிட்ட தனவந்தர்களின் வாரிசுகளும் எங்களுடன் விளையாண்டிருக்கிறார்கள் என்று நினைக்கும்போது சற்றே பெருமையாக இருக்கிறது. அந்தி வரும் நேரத்தில் கொடிச்சப்பரத்தை தரதரவென்று வீதியில் இழுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குத் துள்ளி ஓடுவோம். நாற்புரமும் கேட்கும் "ஹோய்" என்ற ஆனந்தக் கூச்சலும் சப்பரத்தின் மரச் சக்கரம் மண்ணோடு உராயும் ஒலியும் பதினெட்டாம் பெருக்கின் பிரதான பின்னணி இசை. பொசுபொசுவென்று மார்பு ரோமங்கள் தெரியும், தொப்புள் வரை திறந்த, பட்டன் பிய்யும் "இறுக்கிப்பிடி" சட்டையும் தரை பெருக்கும் பெல் பாட்டமுமாய் (பிரத்யேகமாக அடியில் ஜிப் வைத்துத் தைத்தது) எதையோ தொலைத்த பாவனையில் அண்ணாக்களும், எதையோ தேடும் பாவனையில் கண்களை அலையவிட்டு ஹாஃப் ஸாரி, பாவாடை, இடுப்பில் சொருகிய வெள்ளைக் கர்ச்சீஃப் சகிதம் பதினெட்டுகளின் கூட்டமும் காவிரிக்கரையோரம் காதலுடன் நடமாடும். என்னைப் போல் ஒன்றும் தெரியாத அச்சுப்பிச்சு அரை ட்ராயர்கள் அந்த அண்ணாக்களுக்கும் அக்காக்களுக்கும் இடையே "சிறார்"விடு தூதாக இடையூறில்லாத இடையர்களாய் பணியாற்றும். இதமாகத் தலைகோதும் தென்றல், சலசலக்கும் ஆறு, காற்றில் தலையாட்டும் கரையோர அரசமரம், சுற்றிலும் காற்றாடி விட்டு ஓடியாடும் சின்னஞ் சிறுசுகள், மனைவியிடமிருந்து கண்ணடிக்க வைக்கும் புளிசாதம் கையில் வாங்கித் தின்ணும் கணவன், குழுமி உட்கார்ந்து அரட்டையடிக்கும் சிநேகிதங்கள், "டேய்! புதுத்தண்ணி காவு வாங்கிடும். ஜாக்கிரதை" என்று நொடிக்கொருதரம் பிள்ளைகளைப் பார்த்து அலெர்ட் செய்யும் அக்கறையான பாட்டிமார்கள் என்று அந்த பாமணியாற்றங்கரை அரசமரமிருக்கும் தேவலோகமாகக் காட்சியளிக்கும். தேங்காய் சாதம், புளி சாதம், எலும்பிச்சை சாதம் என்று பல வீட்டுச் சித்ரான்னங்கள் ஆற்றங்கரை அரசமரத்தடியில் அன்போடு அளவில்லாமல் கிடைக்கும். சுவை மிகுந்த சோத்துச் சட்டிகள் சீக்கிரம் தீர்ந்துவிடும். ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கப்பல் விட்ட வ.ஊ.சியின் பெருமிதத்தோடு காகிதக் கப்பல்கள் விடுவோம். நுரை பொங்க வரும் புதுப் புனலில் மிதந்து சொற்ப நேரத்திற்குள் கோரைப்புற்களால் கவிழும் கா.கப்பல்களின் அணிவகுப்பு அந்த நொடி தண்ணீரில் முளைத்த இன்ஸ்டண்ட் அல்லிப்பூக் கூட்டம் போல மிதக்கும். வயிறும் மனசும் நிறைந்து முழுத் திருப்தியடைந்த அந்தி சாய்ந்த நேரத்தில் ஒரு பக்கக் கால் கழன்ற சப்பரத்தை இழுத்துக்கொண்டு, தலை கலைந்து, சட்டை அழுக்காகி புத்துணர்வுடன் இல்லம் திரும்புவோம். இந்த வருஷம் பதினெட்டாம் பெருக்குக்கு ஆற்றில் சொட்டுத் தண்ணீர் இல்லையாம். ஆற்றங்கரையில் துவங்கிய நாகரீகங்கள் ஆற்றங்கரையில்லாமலே முடிந்துவிடும் அபாயத்திலிருக்கிறது. "ஆடியில அடிக்குதம்மா அதிர்ஷ்டக்காத்து"ன்னு டிவி பார்த்துக்கொண்டு பாப்கார்ன் கொரித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் இன்றைய இளைய சமுதாயம் இதுபோல சந்தோஷங்களை அனுபவிக்க கொடுத்துவைக்கவில்லை. அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களுக்கும் ஆறு குளங்கள் வறண்டுபோகாமால் அனுபவிக்க வாய்ப்பிருந்தால்தானே! |
No comments:
Post a Comment