வெல்ல கொழுக்கட்டை
29-08-2014-பிள்ளையார் சதுர்த்தி.
தேவையான பொருள்கள்:
சொப்பு செய்ய: பச்சரிசி – 1 கப் தண்ணீர் – 2 1/2 கப் உப்பு – 1 சிட்டிகை நல்லெண்ணெய்
பூரணம் செய்ய: தேங்காய்த் துருவல் – 1 கப் வெல்லம் – 1 கப் ஏலப்பொடி
செய்முறை:
சொப்பு:
முதலில் பச்சரிசியை நன்கு கழுவி, 2 1/2 கப் தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
அதே தண்ணீரையே விட்டு அரிசியை நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். நனைத்து வைத்த தண்ணீர் மீதமிருந்தால் அதையும் மாவுக் கரைசலிலேயே நீர்க்கக் கலந்து கொள்ளவும். (சொல்ல வருவது, மொத்தம் 1 கப் அரிசிக்கு 2 1/2 கப் தண்ணீர் சேர்ந்திருக்கவேண்டும்) வாணலியில் மாவுக் கரைசலை விட்டு, இரண்டு டீஸ்பூன் நல்லெண்ணெய், சிட்டிகை உப்பு சேர்த்து நிதானமான தீயில் அடிப்பிடிக்காமல் கிளறவும்.
மாவு சேர்ந்து இறுகிவரும் வரை விடாமல் கிளறி (இப்போது பாதி வெந்து நிறம் மாறி இருக்கும்.) இறக்கி, ஒரு துணியில் சுற்றியோ அல்லது பாத்திரத்தில் மூடியோ ஆற வைக்கவும். மாவை திறந்துவைத்து காயவிடக் கூடாது. பூரணம்:
வெல்லத்தை கால் கப் தண்ணீருடன் அடுப்பில் வைத்து, நல்ல கம்பிப் பாகாக வைத்துக் கொள்ளவும்.
தேங்காய், ஏலப்பொடி சேர்த்து நன்கு சேர்ந்தாற்போல் வரும்வரை கிளறி இறக்கவும்.
கொழுக்கட்டை:
ஆறிய அரிசி மாவை நன்றாகப் பிசைந்து, பெரிய நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு கையில் மாவை வட்டமாகத் தட்டி, நடுவில் குழித்து, தேங்காய் பூரணத்தை ஒரு டீஸ்பூன் உள்ளே வைத்து நாலுபக்கமும் சேர்த்து மூடவும். மேலே கிரீடம் போல் இழுத்துவிடவும். அதிக அரிசிமாவு உச்சியில் இருந்தால் அதை எடுத்து விடலாம். எல்லாப் பக்கமும் ஒரே மாதிரி நன்றாக மூடியிருக்கவேண்டியது முக்கியம்.
செய்துவைத்த கொழுக்கட்டைகளை எண்ணெய் தடவிய இட்லித் தட்டில் வைத்து, குக்கரில் (இட்லி மாதிரி வெயிட் போடாமல்) பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை வேகவைத்து எடுக்கவும். * அரிசிமாவை நான்ஸ்டிக்கில் வைத்துக் கிளறினால் சுலபமாக இருக்கும். மாவு நன்றாக சேர்ந்து வந்தபின்பும் மேலும் 2, 3 நிமிடங்கள் கிளறிக் கொண்டே இருந்தால்(இது சாதா வாணலியில் அடிப்பிடிக்கும்; கருகும்.) மாவு நன்றாக, பந்து மாதிரி வந்துவிடும். இந்த முறையில் மாவுக்கு கொஞ்சம் இழுவைத் தன்மையும் வந்துவிடும். அதனால் கொழுக்கட்டை செய்யும் போது பிளக்காது. பிளந்தாலும் அந்த இடத்தில் இன்னும் சிறிது மாவு வைத்தாலும் சுலபமாகச் சேர்ந்து கொள்ளும். * சிலர் ஊறவைத்து உலர்த்திய அரிசியை மிஷினிலோ மிக்ஸியிலோ வறட்டு மாவாக அரைத்துவைத்துக் கொண்டு, 2 பங்கு தண்ணீரைக் கொதிக்கவைத்து, அதில் மாவைக் கொட்டிக் கிளறுவார்கள். ஆனால் அதில் இருக்கும் கட்டிதட்டிவிடக் கூடிய சாத்தியங்கள் மேற்சொன்ன முறையில் அறவே இல்லை. * மிஷின் இல்லாமல், மிக்ஸியிலும் சரியாக அரைக்க முடியாதவர்கள், சல்லடையை ம்யூசியத்தில் தேடுபவர்கள், அதைவிட முக்கியமாக மேல்மாவு சரியாக கொழுக்கட்டை செய்ய வரவேண்டுமே என்று கவலைப்படுபவர்களுக்கெல்லாம் மேலே சொன்னதே ஆகச் சுலபமான முறை. தைரியமாகச் செய்து பார்க்கவும். * சிலர் பூரணத்திற்கு வெல்லம் குறைவாகச் சேர்ப்பார்கள். ஆனால் வெளியே இருக்கும் மேல்மாவு சப்பையாக இருப்பதால் பூரணம் நிறைந்த இனிப்புடன் இருப்பதே சாப்பிடும்போது சரியாக இருக்கும்.
* மேலே சொன்ன அளவில் சுமார் 50 கொழுக்கட்டைகள் வந்தன. * பூரணத்தில் ஏலப்பொடி தவிர நம் விருப்பம் போல் முந்திரி, அரைத்த கடலைப்பருப்பு, கிஸ்மிஸ் என்றெல்லாம் சேர்த்துக் கொள்ளலாம். சனிதசைக்காக விநாயகருக்கு கொழுக்கட்டை செய்பவர்கள், இரண்டு டீஸ்பூன் எள் வறுத்தும் சேர்ப்பார்கள். * தேங்காய்ப் பூரணத்திற்குப் பதில் வறுத்த அரைத்த எள் ஒரு கப், வெல்லம் அரையிலிருந்து முக்கால் கப் சேர்த்து எள் கொழுக்கட்டையும் செய்யலாம்.
* தயாரித்த பூரணம் தீர்ந்து, சொப்பு மாவு மிஞ்சினால் அதில் மணிக் கொழுக்கட்டை செய்யலாம். பூரணம் மிஞ்சினால், சின்ன உருண்டைகளாக்கி, கரைத்த உளுத்த மாவில் தோய்த்து சுகியன் மாதிரி எண்ணெயில் பொரித்தெடுக்கலாம் |
No comments:
Post a Comment