Tuesday, 26 August 2014

விநாயகர் அகவல்






விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பல்லிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழ(கு) எறிப்பப் . 4

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் . 8

நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்னும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமும் புரிநூல் திகழ்ஒளி மார்பும் . 12

குளிர்ச்சியும் நறுமணமும் உடைய செந்தாமரைப் பூவின் நிறத்தையுடைய பாதங்களில் அணிந்துள்ள சிலம்பு பலவிதமான இசை ஒலிகளை எழுப்ப, இடுப்பினிலே பொன்னாலான அரைஞாண் கயிறும், அழகிய வெண்பட்டு ஆடையும் அழகிற்கு மேலும் அழகேற்ற, பெரிய பேழை போன்ற வயிறும், பெரிய உறுதியான தந்தமும், யானை முகமும், நெற்றியில் ஒளிவீசும் குங்குமப் பொட்டும், ஐந்து கைகளும், அவற்றில் இரண்டில் அங்குசம், பாசம் ஆகிய ஆயுதங்களும், மிகப் பெரிய வாயும், நான்கு பருத்த புயங்களும், மூன்று கண்களும், மூன்று மதங்களின் கசிவினால் உண்டாண சுவடு போன்ற அடையாளங்களும், இரண்டு காதுகளும், ஒளிவீசுகின்ற பொன்கிரீடமும், மூன்று நூல்கள் சேர்த்து திரித்து செய்யப்பட்ட முப்புரி நூல் அலங்கரிக்கும் அழகிய ஒளிவீசுகின்ற மார்பும்.. 

சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பக் களிரே!
முப்பழம் நுகரும் மூஸிக வாகன
இப்பொழுது என்னை ஆட்கொள வேண்டித் . 16

தாயாய் எனக்குத் தானெழந்(து) அருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதல்ஐந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து . 20

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம் இதுபொருள்என
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே. 24

சொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும் நிலையில் உண்மையான ஞானமானவனே, மா,பலா,வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே, மூஞ்சூறினை வாகனமாக கொண்டவரே, இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி, தாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே, மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்து எறிபவரே, திருத்தமானதும் முதன்மையானதும் ஐந்து எழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சர மந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க என்னுடைய உள்ளத்தில் புகுந்து, குரு வடிவெடுத்து மிக மேன்மையான தீட்சை முறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையான நிலையான பொருள் எது என்று உணர்த்தி, துன்பமில்லாமல் என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்கு அருள் செய்து, கோடாயுதத்தால் என்னுடைய பாவ வினைகளை அகற்றி..

உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் . 28

கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடித்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே. 32

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே . 36

வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து, எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி, தங்கள் இனிய கருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி, மேலே சொன்ன ஐந்து பொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளை நீக்கி, 1) சாலோகம் 2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்கு தலங்களையும் எனக்கு தந்து, 1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்ற மூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து, உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி, 1) மூலாதாரம் 2) சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4) அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து, 

இடைபிங், கலையின் எழுத்தறி வித்துக்
கடையில் சுழிமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக். 40

குண்டலி அதனில் கூடிய அசபை
லிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்து மூண்டெழு கனலைக்
காளால் எழுப்பும் கருத்தறி வித்தே . 44

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச். 48

இடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி, இடையிலிருக்கும் சக்கரமான விசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ்களின் நிலையையும், உடலில் உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி, 

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்
எண்முக மாக இனிதெனக்(கு) அருளிப்
புரியட்ட காயம் புலப்பட் எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப் படுத்தி . 52

கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிதெனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து . 56

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே என்றன் சிந்தை தெலிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து)- அழுத்திஎன் செவியில். 60

உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி, மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன் மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபால வாயிலை எனக்கு காட்டித் தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்க அருளி, நான் யார் என்பதை எனக்கு அறிவித்து, பூர்வ ஜென்ம கன்ம வினையை அகற்றி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கு தந்து அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி, இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றே அடிப்படையானது என்பதை உணர்த்தி, அருள் நிறைந்த ஆனந்தத்தை உன் காதுகளில் அழுத்தமாக கூறி 

எல்லை இல்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி. 64

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி. 68

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட
வித்தக விநாயக! விரைகழல் சரணே . 72

அளவில்லாத ஆனந்தத்தை தந்து, துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி, அருள் வழி எது எனக்காட்டி, சத்-சித் அதாவது உள்ளும், புறமும் சிவனைக் காட்டி, சிறியனவற்றிற்கெல்லாம் சிறியது பெரியனவற்றிற்கு எல்லாம் பெரியது எதுவோ அதை கணுமுற்றி நின்ற கரும்பு போல என் உள்ளேயே காட்டி, சிவவேடமும் திருநீறும் விளங்கும் நிலையிலுள்ள உள்ள உண்மையான தொண்டர்களுடன் என்னையும் சேர்த்து, அஞ்சக் கரத்தினுடைய உண்மையான பொருளை எனது நெஞ்சிலே அறிவித்து, உண்மை நிலையை எனக்குத் தந்து என்னை ஆட்கொண்ட ஞான வடிவான வினாயகப் பெருமானே மணம் கமழும் உமது பாதார விந்தங்கள் சரணம். 

விநாயகர் அகவல் முற்றிற்று



 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator