ஆடிப் பெருக்கு -03-08-2014
(ஆடிப் பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு நீருக்கு நன்றி சொல்லும் ஒரு நன்நாள்.)
ஆடி பிறந்தாலே கொண்டாட்டம் தான். பண்டிகைகள் வரிசைக்கட்டி நிற்கும். கோவில்களில் விசேஷம். வீட்டில் விருந்து என ஜாலிதான். ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடிவெள்ளி என எத்தனையோ விசேஷங்கள் இந்த ஆடி மாதத்தில்.
இன்று ஆடிப்பெருக்கு. நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்தில் அம்மா எனக்கு ஆடி 18க்கு புத்தாடை கட்டாயம் வாங்கி வைத்திருப்பார். ஆடிப்பெருக்கு அன்று வீட்டுப்பெண்ணிற்கு புத்தாடை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று சொல்லி வாங்கி சில சமயம் அம்மாவே தைத்துக்கொடுப்பார். வயலட் நிற வெல்வெட் துணியில் அடுக்கடுக்காய் இருக்கும் கவுன் ஒருமுறை அம்மா தைத்துக்கொடுத்து அதைப் போட்டு வாஷிங் பவுடர் நிர்மா பெண் போல் சுத்தியது கொசுவத்தி சுத்துது.
ஆடிப்பட்டம் தேடிவிதைன்னு சொல்வாங்க. ஆடிப்பெருக்கும் அப்படித்தான். அது என்ன ஆடிப் பெருக்கு? ஆடி மாதத்தின் 18ஆம் நாள் ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. மழைக்காலத்தை வரவேற்கும் ஒரு நிகழ்ச்சி. இன்று நதிக்கரை,குளக்கரைக்குச் சென்று பூஜித்து படையல் படைத்து, நோன்புக்கயிறு கட்டிக்கொள்வார்கள். திருமணம் ஆகாத பெண்கள் கூட கழுத்தில் மஞ்சள் நூல் கட்டுவது இன்று மட்டும் தான்.
இந்த நந்நாளில் கணவனின் நலனுக்காக பிரார்த்திக்கும் ஒரு நாளாகவும் சொல்லலாம். காதோலை, கருகமணி, காப்பரிசி வைத்து பூஜை செய்யும் கன்னிப்பெண் சீக்கிரமே நல்ல கணவனை அடைவாள் என்பது நம்பிக்கை. திருமணமான பெண்ணோ தன் மாங்கல்யம் நிலைத்து நிற்க பூஜை செய்வாள்.
சில இடங்களில் முளைப்பாரி எடுத்துச் சென்று நதி தீரங்களில் அல்லது குளங்களில் கரைப்பது வழக்கம். எங்கள் புதுகையில் குளத்திற்கு ஒன்றும் பஞ்சமே இல்லை. பல்லவன் குளம், ஐயர்குளம், ராஜாக்குளம் என பல குளங்கள். இங்கெல்லாம் குடும்பத்துடன் மக்கள் வந்து பூஜை செய்ததைப் பார்த்திருக்கிறேன்.
எங்கள் வீட்டில் அம்மா இன்று அன்னைக்கு பூஜை செய்து கலந்த சோறு செய்வார். புத்தாடை அணிந்து இன்று கண்டிப்பாய் பாடம் படிக்கச் சொல்வார். ஏதேனும் புதிய வகுப்பில் சேர்வதாக இருந்தால் இன்றைய தினம் மிக விசேஷம். ஆடிப்பெருக்கில் ஆரம்பிக்கப்படும் எந்த ஒரு நல்ல காரியமும் பெருகும் என்பது ஐதீகம்.
ஆடித்தங்கம் கூடும் என நகைக்கடைக்காரர்கள் ஆரம்பித்திருக்கிறாகள். ஆடித்தங்கம், அட்சய திருதியைத் தங்கம், தன் த்ரேயஸ் தங்கம் என எல்லா நாளும் தங்க நகை வாங்கிக்கொண்டிருந்தால் அம்பேல்தான். நல்ல மனத்தோடு இறைவனை பூஜித்து, நிவேதனம் சமர்ப்பித்து இருப்பதுதான் பண்டிகை. ஆடித்தங்கம் கண்டிப்பாய் வாங்க வேண்டும் என்றெல்லாம் கொள்கை வைக்காமல் ஆடி 18க்கு அம்மனுக்கு பூஜை செய்து மாங்கல்யம் தழைக்க, மங்களவாழ்வு கூட, பிரார்த்திப்பதே சரி.
பொங்கல் சூரியனுக்கு நன்றி செலுத்தும் பண்டிகை என்பது போல ஆடிப் பெருக்கு அல்லது பதினெட்டாம் பெருக்கு நீருக்கு நன்றி சொல்லும் ஒரு நன்நாள். |
No comments:
Post a Comment