இந்த மாதத்தில் கோகுலாஷ்டமி வருகிறது. சாமான்யமாக சிவராத்திரியானது சிவனுக்கு விசேஷம். நவராத்திரி அம்பாளுக்கு விசேஷம். ராமநவமி ராமர் பெயரில் இருக்கிறது. கந்த ஷஷ்டி சுப்ரமண்யருடைய பெயரில் இருக்கிறது. ஆனால் கிருஷ்ணருக்கு மட்டும் அவருடைய பெயரில் இல்லாமல் அவர் பிறந்த இடமான கோகுலத்தை வைத்து, அவர் பிறந்த திதியான அஷ்டமியை வைத்து கோகுலாஷ்டமி என்று வழங்கப்படுகிறது.
ஏனெனில், கிருஷ்ண பகவான் முழுவதுமே ஈஸ்வர ஸ்வரூபமாக அவதரித்தவர். மற்றவர்களெல்லாம் அம்சா அவதாரம் என்று சொல்லுவார்கள். ராமபிரானையே எடுத்துக்கொண்டால் கூட தியாகம் சுமந்து, தியாகத்தில் பாரிபாஸ்தை ராமருக்கும் மற்றொரு பாரிபாஸ்தை இலட்சுமண பரத சத்ருக்கனன் என மூவருமாக பகிர்ந்து கொண்டதைத்தான் வரலற்றில் நாம் காண்கிறோம்.
ஆகவே, முழுமையான அவதாரம் கொண்டவர் கிருஷ்ணபகவான்தான். தன்னைத்தானே பகவான் பகவான் என்று பல இடங்களில் சொல்லிக்கொள்கிறார். பகவானாகவே பிறந்திருந்தாலும் நான் மனிதர்களுக்கெல்லாம் நன்மை செய்வதற்கென்றே பிறந்திருக்கிறேன் என்று மீண்டும் மீண்டும் தன்னை மனிதனாகவே சொல்லிக்கொள்கிறார். முழுமையான அவதாரமாக கிருஷ்ண பகவானை கருதுவதால் அவர்பிறந்த இடத்தையும், திதியையும் வைத்து மரியாதையுடன் கோகுலாஷ்டமி என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதேபோல், பகவத் கீதையை பார்த்தாலும் அர்ஜுனஉவாச, சஞ்சீவஉவாச, திருதராஷ்டிர உவாச என்றுதான் இருக்கும். இப்படி பல பேருடைய பெயர்கள் வந்தாலும் கூட, கிருஷ்ண பகவானின் உபதேசம் என்றாலும் கிருஷ்ண உவாச என்று இருக்காது, பகவான் உவாச என்றுதான் இருக்கும். அங்கே பெருமைக்காக மரியாதையுடன் அழைப்பதற்காக பகவான் உவாச என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இங்கே பெரிய இடத்துப் பிள்ளையாக, பகவானுடைய ஸ்வரூபமாக இருப்பதனால் அவர் பெயரை சொல்லக் கூடாதென்பதற்காக கோகுலாஷ்டமி என்று வைத்தார்கள்.
நமது பெரியவருக்கு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி என்று பெயர். ஆனால் அப்படி யாரும் கூப்பிடமாட்டார்கள். சொல்லவும் மாட்டார்கள். பரமாச்சார்யாள், ஜகத்குரு, மகாஸ்வாமிகள், பெரியவாள் என்று அடைமொழி வைத்து சொல்லுவார்கள்.
அதேபோல், சாட்சாத் பகவான் ஸ்வரூபமாக இருப்பதனால் எந்தப் பெயரை வைத்து அழைப்பதென்றில்லாமல் கோகுலாஷ்டமி என்றழைத்தார்கள். இப்படிப்பட்ட கிருஷ்ணாவதாரத்தில் பரிபூரணாநந்த ஸ்வரூபம் கோகுலாஷ்டமி அன்று வருகிறது.
ஸ்ரீ ஜெயந்தி என்றும் அதை சொல்லுவார்கள். லட்சுமியை பிரதானமாக வைத்துக்கொண்டு ஜயந்தி கொண்டாடும்போது ஸ்ரீஜயந்தி என்று வைஷ்ணவர்கள் எல்லோரும் கொண்டாடுகிறார்கள். மற்ற அனைவரும் பொதுவாக கோகுலாஷ்டமி என்று கொண்டாடுகிறார்கள்.
மதுராவில் பிறந்து கோகுலத்தில் வளர்ந்து, துவாரகையிலே ராஜ்ய
பரிபாலனம் செய்து பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஷேத்திரங்களில் ஒன்றான சோமநாத ஷேத்திரத்தில் பிரதாபபட்டம் என்ற இடத்தில் தன்னுடைய கடைசி காலத்தில் இருந்துகொண்டு வைகுண்டம் சென்றதாக வரலாறு சொல்லுகிறது.
குழந்தை முதல் அவர் பலவிதமான லீலைகளையெல்லாம் செய்தவர். தாய்க்கு உலகம் முழுவதையம் தன் வாய்க்குள்ளேயே காட்டியவர். பிரம்ம தேவருக்கு பசுக்களை அழைத்துச் செல்லும்போது தானே பசுவாகவும் கன்றாகவும் இருந்து காட்டியவர். பல இடங்களில் விஸ்வரூபத்தை வெளிக்காட்டியிருக்கிறார். பாண்டவர்களின் தூதுவராக போகும்போது கூட ஒரு சமயம் நாற்காலியில் கட்டிவைக்கப்பட்டபோது, அந்த நாற்காலியோடு சேர்ந்து தன் விஸ்வரூபத்தைக் காட்டியவர். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.
ஆனால் அர்ஜுனனுக்கு மட்டும் தெரிந்த விஸ்வரூப ஸ்வரூபம் பகவத்கீதையில் காட்டிய விஸ்வரூப ஸ்வரூபமாகும். இப்படி விஸ்வரூப வடிவமாக உலக வடிவமாக எல்லா வடிவமாகவும் இருந்து அருள்பாலிப்பவர் கண்ணபிரான்.
இவர் இரவில் பிறந்தார். ஆகவேதான் அறியாமையை அகற்றும் ஜோதியாக விளங்குகிறார். அஷ்டமி நவமி காலங்களில் மங்களகரமான காரியங்களை செய்யக்கூடாதென்பார்கள். ஏனென்றால் அஷ்டமி நவமி என்பது பகவான் கிருஷ்ணரும், ராமரும் பிறந்த திதியாகும்.
நமக்கு பிறந்த நாளிலே நாமெல்லாம் விசேஷமாக கொண்டாடிக் கொள்கிறோம். மற்றவர்களின் காரியங்களை விட்டுவிடுகிறோம். அப்படி இருக்கும்போது உலகிலுள்ள லௌகீக காரியங்களை செய்யக்கூடாதென்பார்கள். ஏனென்றால் அஷ்டமி நவமி என்பது பகவான் கிருஷ்ணரும், ராமரும் பிறந்த திதியாகும்.
நமக்கு பிறந்த நாளிலே நாமெல்லாம் விசேஷமாக கொண்டாடிக் கொள்கிறோம். மற்றவர்களின் காரியங்களை விட்டுவிடுகிறோம். அப்படி இருக்கும்போது உலகிலுள்ள லௌகீக காரியங்களை செய்யாமல் ஈஸ்வர காரியங்களை செய்ய வேண்டுமென்பதற்காகத்தான் அன்றைய தினம் மங்களகரமான காரியங்களேதும் செய்யாமல் பகவானைப் பற்றிய பக்தி, பஜனை, கீர்த்தனம், உபவாசம் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இப்படி கண்ணபிரானின் பெருமையானது வர்ணிக்க முடியாததாகும். அவரின் விஸ்வரூப தரிசனத்தை எப்படி வர்ணிக்க முடியாதோ அதுபோல் அவருடைய பெருமைகளையும் வர்ணிக்க இயலாது. அப்படிப்பட்ட கண்ணபிரானின் கோகுலாஷ்டமி தினத்தில் அவரைப் பற்றிய ஸ்தோத்திரங்களைப் படித்து, பூஜைகள் செய்து, அவர் அருள் பெற்று, அறியாமையிலிருந்து அகன்று, எல்லா நலன்களையும பெற்று, பரிபூரண ஆனந்தத்தையும், பகவான் அனுகிரஹத்தையும் பெற வேண்டும்..
No comments:
Post a Comment