ஆயுர்வேத மருந்துகளுக்குப் பின்விளைவுகள் உண்டா?
ஆறுமுகம், முனைஞ்சிப்பட்டி
எங்குப் பலன் தரும் விளைவு இருக்கிறதோ, அங்கு பின்விளைவும் இருக்கும். இதற்கு ஸத்காரிய பாவம் என்றும், காரண காரிய சித்தாந்தம் என்றும் பெயர். ஆயுர்வேத மருந்துகளுக்குப் பின்விளைவுகள் சற்றுக் குறைவு என்று வேண்டுமானால் சொல்லலாம்.
விஷத் திரவியங்களாகிய சேராங்கொட்டை, பல்லாதகம் போன்ற மருந்துகளைப் பயன்படுத்தினாலோ, சேனைகளின் சில வகைகளிலோ ஒவ்வாமையைக் காணலாம். இதை allergic reaction என்று குறிப்பிடுவோம். இது அல்லாமல் ஒரு சில நிலைகளில் இயல்புக்கு மாறாக வினைபுரிந்து (idiosyncrasy) மருந்து ஒத்துக்கொள்ளாமல் மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படுவதுண்டு. ரச ஔஷதங்கள் நாகம், வங்கம் போன்றவை சரியாகச் சுத்தி செய்யப்படாமல் போனால் சிறுநீரகப் பாதிப்புகள் வரலாம்.
சித்த மருத்துவமா, ஆயுர்வேத மருத்துவமா எதுவாக இருந்தாலும் பின்விளைவுகள் உண்டு. ஆனால், நவீன மருத்துவர்கள் மிகைப்படுத்திக் கூறுவதைப் போலச் சிறுநீரகம் செயலிழந்து போகும் அளவுக்குப் பெரிதாக எதுவும் நடப்பதில்லை.
ஒரு மருத்துவர் கவனத்துடன் செயல்பட்டால் பின்விளைவுகளைத் தவிர்க்கலாம். ஒரு கத்தியை வைத்துப் பழத்தை நறுக்கலாம். நறுக்கும்போது தவறுதலாகக் கையில் பட்டுவிடலாம் இல்லையா? பின்விளைவுகளும் அப்படித்தான்.
அதனால்தான் நோயாளிகளுக்கு வருடத்துக்கு ஒரு முறை Hb, TC, DC, ESR, urea creatinine, liver function test, urine micro albumin போன்றவற்றைப் பார்க்கிறோம். இந்தப் பரிசோதனைகள் மூலம் மருந்துகளுக்குப் பின்விளைவுகள் இருக்கின்றனவா என்பதையும், கல்லீரல், சிறுநீரகம் சரியாக இயங்குகிறதா என்பதையும் கண்காணிக்கிறோம். நவீன மருத்துவர்களும் இதைச் செய்துவருகிறார்கள்.
இவ்வாறு செய்யும்போது ஆயுர்வேத மருத்துவ முறை விஞ்ஞானபூர்வமாகச் செயலாற்றுகிறது, தவறுகள் தவிர்க்கப்படுகின்றன. இது நடப்பதற்கு ஆயுர்வேதத் திரிதோஷ மெய்ஞான அறிவுடன், நவீன மருத்துவ விழிப்புணர்வும் சேர்ந்த ஒரு மருத்துவர் உங்களுக்குக் கிடைக்க வேண்டும். கிடைத்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் உங்களை அணுகாது.
ஒரு சில மருத்துவர்கள் எதற்கெடுத்தாலும் தயிரைக் கெடுதல் என்றும், விஷம் என்றும் சொல்கிறார்களே. இது எவ்வளவு தூரம் உண்மை?
- பானுமதி, சேலம்.
இந்தக் கூற்று முற்றிலும் தவறு. தயிருக்கு நல்ல குணமும் உண்டு, கெட்ட குணமும் உண்டு. எந்த ஒரு பொருளையும் முற்றிலுமாகப் புறக்கணிக்கக் கூடாது, முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் முடியாது. இதைப் பயன்படுத்துகிற ஒருவர், அவருடைய அக்னி பலம், தேசம், காலம், ரோகம் ஆகியவற்றைப் பொறுத்தே பத்தியம் சொல்ல முடியும்.
தயிர் செரிப்பதற்குச் சற்றே கடினமானது, இனிப்பும் புளிப்பும் கலந்தது. வாதத்தைத் தணிப்பது, உடலுக்குப் பலம் தருவது. நீர்ச்சத்தை இழக்க வைக்காமல் இருக்கும். விஷ ஜுரம் போன்ற நோய்களுக்கும், நாள்பட்ட ஜலதோஷ நோய்களுக்கும் இது நல்லது.
இரவு வேளைகளில் தயிர் சாப்பிடுவது தவறு என்று பாப பிரகாசம் என்ற நூல் சொல்கிறது. தயிரை இந்துப்புடனோ, மிளகுடனோ, நெய்யுடனோ, சர்க்கரையுடனோ, பச்சை பயறுடனோ, நெல்லிக்காய், தேன் போன்றவற்றுடனோ சேர்த்தே சாப்பிட வேண்டும்.
இலையுதிர் காலத்திலும், வசந்த காலத்திலும், வெயில் காலத்திலும் தயிரை அதிகம் சாப்பிடக் கூடாது. சூடாக்கிச் சாப்பிடக் கூடாது. பித்த நோய்கள், கப நோய்களுக்குச் சாப்பிடக் கூடாது.
வாத-கப நோய்களுக்குச் சாப்பிட்டாக வேண்டும் என்றால் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்தோ அல்லது கடுகுப் பொடி சேர்த்தோ சாப்பிட வேண்டும். குளிர் காலங்களுக்கு தயிர் சிறந்தது. உடலுக்கு வலுவைத் தருவது. மழைக் காலங்களில் இதைச் சாப்பிட வேண்டும் என்று பாப பிரகாசர் சொல்கிறார்.
எத்தனையோ நிகண்டுகள் இருந்தாலும் ஸ்ரீ நரஹரி பண்டிதரின் ராஜ நிகண்டில் தயிர் பற்றி கூறப்படும் விளக்கங்கள் ஏற்புடையதாக உள்ளன.
தயிர் மனச்சோர்வை மாற்றுவது, சீரணத்தை அதிகரிப்பது. ஆனால் தோல் நோய்கள், குஷ்ட நோய்கள், பிரமேக நோய்கள் மற்றும் சில நோய்களுக்குச் சாப்பிடக் கூடாது.
ஆலோசனை
உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.
பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன், உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கிறார். மருத்துவம், உடல்நலம், ஆரோக்கிய உணவு உள்ளிட்ட கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் முகவரிக்கோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்புங்கள்.
மின்னஞ்சல்:
nalamvaazha@thehindutamil.co.inமுகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002
No comments:
Post a Comment