தரிசனம் தேடி...
சிறுகதை
'அப்பா, சொன்னா கேளுங்க. உங்களுக்கே உடம்பு முடியாம இருக்கு. திருப்பதி வரைக்கும் பயணம் வந்து அவஸ்தை படணுமா? பேசாம நீங்க வீட்டோட இருங்க. நாங்க மட்டும் திருப்பதி போயிட்டு வர்றோம்.' பெரியவர் ராமானுஜத்திடம் அவர் மகன் பார்த்தசாரதி நிர்தாட்சண்யமாய் சொல்லி விட்டான். அவர் மருமகள் நிர்மலா, 'இங்கேருந்தே மனசுக்குள்ளே ஏழுமலையானை நெனச்சி கும்பிட்டுக்கங்க மாமா,' என்று சொல்லி கடுப்பேற்றினாள். அவர்கள் திருப்பதி செல்ல சாமான்களை பேக் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
பேரன் வெங்கிட்டும் பேத்தி சௌம்யாவும் ராமானுஜத்தை இரக்கத்துடன் பார்த்து விட்டு, 'பாவம்டா, தாத்தாவை விட்டுட்டு நாம் மட்டும் திருப்பதி போறோம்,' என்று தங்களுக்குள் பேசியபடி நகர்ந்தார்கள். பரிதாபமாக நாற்காலியில் அமர்ந்திருந்தார் ராமானுஜம். அவர் மனைவி வைதேகியும், மகள் மல்லிகாவும் அருகில் வர, தன் ஆதங்கத்தை அவர்களிடம் கொட்டித் தீர்த்தார். 'நான் என்ன நடக்க முடியாமலா இருக்கேன்? பக்கவாதம் வந்ததாலே கொஞ்சம் கைகால் இழுத்துகிச்சி. அதுக்கும் வைத்தியம் பாத்து பிசியோதெரபி செய்து ஓரளவு நடக்கிற அளவு ஆகிட்டேன்.
எனக்கு மட்டும் திருப்பதி வந்து பெருமாளை தரிசிக்கணும்னு ஆசை இருக்காதா? திருப்பதியிலே என் மாதிரி சீனியர் சிட்டிசன்களுக்கு சலுகை உண்டே? அப்புறம் என்ன?' மகள் மல்லிகா குறுக்கே புகுந்தாள். 'நீங்க வாராவாரம் நம்ம ஊர் பெருமாள் கோயிலுக்கு போய் தரிசனம் பண்ணிட்டு வரவே எவ்வளவு சிரமப்படறீங்க? இதிலே திருப்பதிக்கு எதுக்குப்பா வர்றேன்னு அடம் பிடிக்கிறீங்க?' வைதேகி அவரிடம் கெஞ்சும் தொனியில் சொன்னாள். 'நாங்க புறப்படறப்ப நீங்க முகத்தை தூக்கி வச்சிக்காதீங்க. பார்த்தசாரதிக்கு கோபம் வந்துடும். அப்புறம் திருப்பதி பயணத்தையே நிறுத்திடுவான்.'
ஒட்டுமொத்த குடும்பமே அவரை புறக்கணித்தது அவருக்கு மன உளைச்சலைத் தந்தது. வைதேகி 'தோசை சுட்டு ஹாட் பாக்ஸிலே வச்சிடறேன். சாம்பாரும் வச்சிடறேன். ராத்திரி சாப்பிடுங்க. இன்னும் ரெண்டு நாளைக்கு பக்கத்து மெஸ்லே இருந்து வேளாவேளைக்கு டிபன் சாப்பாடு கொண்டு வந்து தந்திடுவாங்க. சாப்பிட்டுக்கோங்க.' என்று பொறுப்பாய் சொன்னபோது 'எனக்கு தெரியும். நீ போ.' என்று எறிந்து விழுந்தார், ராமானுஜம். அவருடைய கோபத்தை வேறு யாரிடம் காட்ட முடியும்? அவர்கள் கிளம்பும்போது பார்த்தசாரதி 'போயிட்டு வர்றோம்பா.'
என்றதற்கு, 'சரி, சந்தோஷமா போயிட்டு வாங்க.' என்றார் ஆற்றாமையுடன். 'உங்களுக்கும் சேத்து நான் வெங்கடாஜலபதியை வேண்டிக்கிறேங்க.' என்று சொன்னாள் வைதேகி. பகல். யாருமில்லாத தனிமையில் ஊர்ந்துபோய், இரவு வந்து விட்டது. பூஜை அறையில் திருப்பதி வெங்கடாஜலபதி - பத்மாவதி தாயார் படத்தின் முன்பு நின்று, 'பெருமாளே, உன் சந்நதிக்கு வந்து உன்னை தரிசனம் பண்ண எனக்கு கொடுத்து வைக்கலை. என்னை மன்னிச்சிடு,' என்று வேண் டிக் கொண்டபோது அவருக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது.
சமையல்கட்டுக்குப் போய் இரவு டிபனை எடுத்து வந்து சாப்பிட்ட பின், வீட்டின் முன் பக்க சிட் அவுட்டில் ஆசுவாசமாய் அமர்ந்தார். சில்லென்று வீசிய காற்றில் நினைவுகள் நீந்தின. ராமானுஜம் ஒரு தனியார் கம்பெனியில் பொறுப்பான வேலையில் இருந்தார். ஒரு மகன், ஒரு மகள் என்று அளவான குடும்பம். மகனுக்கு திரு மணம் செய்து வைத்து பேரன், பேத்தியும் கண்டு விட்டார். மகன் பார்த்தசாரதி அரசு உத்தியோகத்தில் சேர்ந்து, எல்லாம் நல்லபடி போய்க் கொண்டிருந்த போதுதான் வந்தது சோதனை.
அவருக்கு திடீரென்று பக்கவாதம் வந்து கைகால் இழுத்துக் கொண்டு விட்டது. உடம்பு திடகாத் திரமாக இருந்தால் அந்த தனியார் கம்பெனியில் எழுபது வயது வரைகூட வேலை தருவார்கள்தான். ஆனால், அவர் தானாகவே வேலையிலிருந்து ஓய்வு பெறும்படி ஆகிவிட்டது. சிகிச்சையில் உடம்பு தேறிய பின், கையை சற்று மடித்து வைத்துக் கொண்டு, சாய்ந்து சாய்ந்து நடக்கிறார். அவர் குடும்பத்தினர் வெளியூரில் திருமணம், விசேஷம் என்று வரும்போது அவரை வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லி விட்டு அவர்கள் மட்டும் போக ஆரம்பித்து விட்டார்கள்.
அதற்கு அவர் உடல் நலத்தில் உள்ள அக்கறை காரணம் அல்ல. இவர் இப்படி உடல் கோணியபடி நடப்பது அவர் மகன், மருமகளுக்கு உள்ளுக்குள் அவமானமாக இருந்தது; அதனால்தான் சால்ஜாப்பு சொல்லி அவரை தனியே விட்டு விட்டுப் போனார்கள். அவர் மனைவி வைதேகியால் மகனை மீறி எதுவும் பேச முடிவதில்லை. வயோதிகமும், நோய் பாதிப்பும் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் என்பது மகனுக்கு ஏன் புரியவில்லை? ஒருவேளை அவனுக்கென்று வரும்போதுதான் தனிமையின் வலியும், வேதனையும் புரியுமோ?
ராமானுஜம் நல்ல பக்திமான். எல்லா கடவுள்களையும் பக்தி சிரத்தையாகக் கும்பிடுகிறவர். அதிலும் பெருமாள் என்றால் உருகி உருகி வழிபடுகிறவர். இளைஞராக இருந்தபோது முதல் முறையாக திருப்பதி சென்றார். அவ்வளவு பெரிய கூட்டத்தில் கால்கடுக்க பலமணி நேரம் நின்று, கடைசியாக கரிய நிற மேனியாக திவ்ய சொரூபனாக வெங்கடாஜலபதியை தரி¢சனம் செய்தபோது, தன் ஜென்மமே சாபல்யம் அடைந்த மாதிரி கண்ணீர் பெருக நின்று விட்டார். ஜருகண்டி ஜருகண்டி என்று வாலண்டியர்கள் அவரைப் பிடித்து தள்ளிய பின்தான் சுய உணர்வு வந்து நகர்ந்தார்.
அதன்பின் திருமணமான புதிதில் வைதேகியுடன் ஒருமுறை திருப்பதி தரிசனம். பிறகு வரிசையாக மகன் பார்த்தசாரதி குழந்தையாக இருந்தபோது மொட்டை அடித்து காதுகுத்த, அதேபோல் மகள் மல்லிகாவுக்கு என்று பலமுறை திருப்பதி சென்று வந்திருக்கிறார். கடைசியாக, அவர் பேரன் வெங்கிட்டுக்கு முடிகாணிக்கை தர திருப்பதி சென்றதுதான். கிட்டதட்ட பத்து வருடம் ஓடிவிட்டது. இந்த முறை குடும்பத்தில் திருப்பதி போக முடிவு செய்ததும் பார்த்தசாரதி மிகவும் ஆனந்தப்பட்டார். ஆனால், அவர் மகன் சரியான கல்லு ளிமங்கன்.
அவரை அழைத்துச் செல்லும் எண்ணமே இல்லை என்பதை சஸ்பென்சாக வைத்திருந்து புறப்படுவதற்கு முதல்நாள்தான் சொன்னான்! ஹும், எல்லாம் காலத்தின் கோலம். அவர் பெருமூச்சு விட்டபோது, முருகேசன் வருவதைப் பார்த்தார். 'வாங்க முருகேசன் சார், உக்காருங்க.' அருகில் இருந்த இன்னொரு சேரில் அமர்ந்தார் முருகேசன், பக்கத்து வீட்டுக்காரர். கிட்டதட்ட அவர் வயதுதான். அவரைப்போலவே தனியார் கம்பெனியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இருவரும் சந்திக்கும்போது, தனியாக இருந்தால் தங்கள் மனக்குறைகளைத்தான் பேசுவார்கள்.
இப்போதும் அப்படித்தான். 'என்ன சார், நீங்க திருப்பதி போகலையா?' என்று அவர் ஆரம்பித்ததும், ராமானுஜம் தன் மனக் குமுறலை மொத்தமாகக் கொட்டினார். அமைதியாக கேட்டுக் கொண்ட முருகேசன், 'வருத்தப்பட்டு ஏதும் ஆகப் போவதில்லே. இதுவும் பெருமாள் செயல்னு நெனச்சி பொறுமையா இருங்க,' என்றார் ஆறுதலாக. சில நிமிஷ மௌனத்துக்குப் பின் அவரே பேச்சை மாற்றி நாட்டு நடப்பைப் பற்றி பேசிவிட்டுச் சென்றார். அப்போது அதே வீதியில் வசிக்கும் மகேஸ்வரன் வேகமாக தன் டி.வி.எஸ் மொபெட்டில் வந்து இறங்கி சொன்னார், 'சார், ஒரு டிரஸ்ட் சார்பா டவுன்ல திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமியோட திருக்கல்யாணம் நடக்க ஏற்பாடு செய்திருக்காங்க. நான் அதுக்குத்தான் போய்கிட்டிருக்கேன்.
நீங்க வரீங்களா?" 'நம்ம டவுன்லயா?'' என்று ஆச்சர்யப்பட்ட ராமானுஜம் உடனே வீட்டைப் பூட்டி விட்டு அவனுடன் கிளம்பி விட்டார். டவுன் திருமண மண்டபம். ராமானுஜத்தால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவர் வசித்த அதே வீதியிலுள்ள கோயிலில் மேளம் முழங்க, பட்டாச்சார்யார், பக்தர்கள், பரிவாரம் சூழ சாட்சாத் திருப்பதி வெங்கடாஜலபதி-பத்மாவதி தாயார் திருக்கல்யாணம் திவ்யமாக நடந்து கொண்டிருந்தது! ராமானுஜம் அருகிலிருந்த கடைக்குப் போய், பூஜைத் தட்டில் தேங்காய், பழம், சூடம் என்று பூஜைக்குரிய பொருட்களை சடுதியில் வாங்கிக் கொண்டு மண்டபத்துக்கு வந்தார்.
அவற்றை பட்டாச்சார்யாரிடம் கொடுத்து விட்டு, ஏழுமலையானின் தெய்வீக திருக்கல்யாண கோலத்தை மெய்மறந்து பார்த்தபடி நின்றார். திருப்பதியில் இருந்து தெய்வமே தேடிவந்து அவருக்கு தரிசனம் தந்து அருள்பாலித்துக் கொண்டிருப்பதை நினைத்தபோது அவர் உடம்பும் மனசும் சிலிர்த்தன. கண்களில் நீர் பெருக கன்னத்தில் போட்டுக் கொண்டார். திருக்கல்யாணம் மங்களகரமாக நிறைவடைந்தது. ஜனங்கள் எல்லோரும் வந்து சுவாமி தரிசனம் செய்தார்கள். பக்தர்களுக்கு, துளசி தீர்த்தமும், குங்குமமும், லட்டும் பிரசாதமாகக் கிடைத்தன.
மகேஸ்வரன் ராமானுஜம் வீடுவரை துணையாக வந்து பிரசாதத்தை பயபக்தியுடன் பூஜை அறையில் வைத்தார். 'ஏழுமலையானே, எனக்கு இந்த தரிசனம் போதும்பா' என்று நிம்மதியுடன் கும்பிட்டார் ராமானுஜம். தூங்கப் போகும்போது, அவர் குடும்பத்தினர் இன்னேரம் திருப்பதியில் தரிசனத்துக்காக வரிசையில் நின்றிருப்பார்கள் என்ற நினைவு வந்தது. காலையில் எழுந்த ராமானுஜம் சி.டி. பிளேயரில் சுப்ரபாதத்தை மென்மையாக ஒலிக்கவிட்டு, பின்கட்டுக்குப் போனார். குளியல் இத்யாதிகளை முடித்துவிட்டு, பூஜை அறைக்குள் புகுந்து வழக்கம்போல் பூஜை செய்தார்.
மெஸ்ஸுக்கு நாமே போய் டிபன் சாப்பிட்டு வரலாம் என்று வெளியே வந்தபோது, வாசலில் வந்து நின்றது ஒரு கார். பார்த்தால் வைதேகி, பார்த்தசாரதி என்று அவர் குடும்பமே சோர்வுடன் இறங்கியது. 'என்னடா பார்த்தசாரதி, நேத்து காலையிலே தான் கிளம்பிப் போனீங்க? அதுக்குள்ளே திருப்பதி யிலே தரிசனம் பண்ணிட்டு வந்துட்டீங்களா?' ஆச்சர்யத்துடன் கேட்டார் ராமானுஜம். பார்த்தசாரதி பரிதாபமாகச் சொன்னான். 'அதை ஏம்ப்பா கேக்கறீங்க? ஆந்திரா பார்டரைத் தாண்டி, திருப்பதி பக்கமா போறப்போ ஏதோ கலவரம் ஆரம்பிச்சிடுச்சி.
என்ன பிரச்னைன்னே புரியலே. பஸ், லாரி எதையும் போக விடாம சாலை மறியல் பண்ணிட்டாங்க. போலீஸ் வந்து தடியடி நடத்தி கலாட்டா அதிகமாயிடுச்சி. லக்கேஜை தூக்கிக்கிட்டு, குழந்தைகளையும் கூட்டிகிட்டு பாதி தூரம் கிடைச்ச கார்லே, பாதி தூரம் நடைன்னு தமிழ்நாடு பார்டர் வந்து சேர்றதுக்குள்ளே போதும் போதும்னு ஆகிடுச்சி...' பெரியவர்களும் குழந்தைகளும் தூக்கம் கெட்டு சிவந்து போன கண்களுடன் ஒரேயடியாக களைத்துப் போயிருந்தார்கள். 'தாத்தா, வழியிலே பஸ், லாரியை எல்லாம் நிறுத்தி அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.
பயந்துகிட்டே வந்தோம்,' என்றாள் சௌம்யா. 'ஆமாங்க. நடந்து நடந்து காலு வேறே வலிக்குது.' என்றாள் வைதேகி. 'தாத்தா, திருப்பதியிலே லட்டு பிரசாதம் வாங்கி சாப்பிடலாம்னு ஆசையா இருந்தேன். இப்படியாயிடுச்சி,' சந்தர்ப்பம் தெரியாமல் பேசினான் சிறுவன் வெங்கிட்டு. 'இதுக்கு ஏன்டா குழந்தை கவலைப்படறே? நான் தரேன் உனக்கு பெருமாள் பிரசாதம்' என்ற ராமானுஜம் பூஜை அறைக்குப் போய் குங்குமம், லட்டு பிரசாதங்களை எடுத்து வந்து குழந்தைகளுக்குக் கொடுத்தார்.
'என்னப்பா இது? திருப்பதி பிரசாதம் மாதிரியே இருக்கே!' என்று வியப்புடன் கேட்டாள் மகள் மல்லிகா. 'ஆமாம்மா. நேத்து ராத்திரி சாட்சாத் திருப்பதி வெங்கடாஜலபதி திருக்கல்யாணம் நம்ம டவுன்லேயே நடந்தது. நான் இங்கேயே நல்லா தரிசனம் பண்ணினேன். அப்ப கிடைச்ச பிரசாதம்தான் இது.' அவர்கள் எல்லோரும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டார்கள். வைதேகி மனம் உருகிப் பேசினாள், 'உங்களை வீட்டிலேயே விட்டுட்டு திருப்பதி கிளம்பின நாங்க, பாதி வழியிலேயே அலைக்கழிஞ்சி திரும்பி வந்துட்டோம்.
ஆனா, உங்களுக்கு பெருமாள், தாயாரோட நம்ம ஊருக்கே வந்து தரிசனம் கொடுத்திருக்கார். நீங்கதாங்க உண்மையான பக்திமான்!' 'ஆமாம்ப்பா.' என்றான் பார்த்தசாரதி. மருமகள் நிர்மலா, 'பெருமாளை தரிசனம் பண்ணின பெரியவங்களைக் கும்பிட்டா, பெருமாளையே கும்பிட்ட புண்ணியம் சேரும்னு சொல்லு வாங்க. குழந்தைகளா, தாத்தா கால்லே விழுந்து கும்பிடுங்க' என்றதும், குழந்தைகளோடு பெரியவர்களும் சேர்ந்து அவர் காலில் விழுந்து நமஸ்கரித்தார்கள். தன்னை திருப்பதி அழைத்துச் செல்லாமல் விட்டுச் சென்ற தன் குடும்பத்தையே தன் காலில் விழ வைத்த ஏழுமலையானின் அற்புதத்தை நினைத்து வியந்தார் ராமானுஜம்.
சந்திரா தனபால்
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment