பல மாநில உணவு வகைகளைச் சமைப்பதில் கைதேர்ந்தவர் நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தைச் சேர்ந்த மும்தாஜ் பேகம். தென்னிந்திய உணவில் குறிப்பாகச் சிறுதானிய உணவு வகைகளைச் சமைப்பதில் இவருக்கு ஆர்வம் அதிகம்.
வேண்டாம், பிடிக்காது என்று பலரும் ஒதுக்கிவைக்கும் காய்கறிகளில் சுவையான உணவைச் சமைப்பதை ஒரு சவாலாகவே எடுத்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
கத்தரிக்காயைக் கண்டாலே காத தூரம் ஓடிவிடுகிறவர்களுக்கு மும்தாஜ் பேகம் சொல்லி இருக்கும் பக்குவத்தில் சமைத்துக் கொடுங்கள். அடுத்த முறை காய் வாங்கும் போது நிச்சயம் அரைக் கிலோ கூடுதலாக வாங்குவீர்கள்.
என்னென்ன தேவை?
பிஞ்சுக் கத்தரிக்காய் - கால் கிலோ
தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
தனியா - 2 டீஸ்பூன்
முற்றிய தேங்காய் - கால் மூடி
கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவைக்கு
எப்படிச் செய்வது?
வாணலியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடலைப் பருப்பு, தனியா, சீரகம், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல் சேர்த்து வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் கரகரப்பாகப் பொடிக்கவும். கத்தரிக்காய்களை நான்காகக் கீறி, அரைத்த இந்த மசாலாப் பொடியை அதனுள் அடைக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காய்ந்த்தும் கடுகு சேர்த்துத் தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். மசாலாப் பொடி திணிக்கப்பட்ட கத்தரிக்காய்களைச் சேர்த்து மிதமான தீயில் வேகவிட வேண்டும்.
கத்தரிக்காய்களை மெதுவாகப் புரட்டிப் போட்டு நன்கு வேகவிட வேண்டும். கத்தரிக்காய் நன்கு வெந்ததும் மீதமுள்ள எண்ணெய், மிளகாய்த் தூள், மசாலாப் பொடி சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். எல்லா வகை சாதத்துக்கும் ஏற்றது. |
No comments:
Post a Comment