என் வீட்டின் பின்புறம் உள்ள கால் ஏக்கர் காலி நிலத்தில் நோய்களை மிக சுலபமாக தீர்க்கக்கூடிய ஒரு சில மூலிகைச் செடிகளைப் பயிர் செய்ய விரும்புகிறேன். அவை பற்றிய விவரங்களை, மருத்துவகுணங்களைத் தெரியப்படுத்தவும்.
எம்.வினோத், பாண்டிச்சேரி.
யஜுர்வேதத்தில் ஓஷதீ ஸூக்தத்தில் ஒரு பிரார்த்தனை கூறப்படுகிறது. "ஓஷதிகளாகிய தாய்களே நீங்கள் நூற்றுக்கணக்கான இடங்களில் முளைக்கிறீர்கள், ஆயிரக்கணக்கான உருவங்களில் தோன்றுகிறீர்கள். நீங்கள் புரியும் பணிகளோ அநந்தம். இவனையும் நோய்நொடியற்றிருக்கச் செய்யுங்கள்'. எந்த வயதினனாயினும், எந்த தேசத்தினனாயினும் ஒவ்வொரு மனிதனும் கூறக்
கூடிய பிரார்த்தனை இது. புள்ளிவிபரங்களைக்கொண்டு பார்க்கும்பொழுது 90 சதவிகித நோய்கள் மிகச் சுலபமாக தீர்க்கக் கூடியவையே. எளிய பொதுமருந்துகளே இவற்றைக் குணப்படுத்த முடியும். இப்போதும் சில கிராமத்துப் பெரியோர்கள் இம்முறைகளைப் பயன்படுத்தி நன்மை பெறுகிறார்கள். ஆனால் அத்தகைய பெரியோர்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. வயதானவர்கள் கூட இன்று சிறிய நோய்களுக்குக் கூட பிரசித்தமான பெரிய மருந்துகளையே மாத்திரை, கேப்சூல் முதலியவற்றையே கையாள ஆரம்பித்துள்ளனர். ஆரோக்கிய நோக்கில் இம்முறை கெடுதலையே விளைவிக்கும். அதனால் உங்களுடைய இந்த புதிய முயற்சி மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
மூலிகைகளில் சில எங்கும் பயிராகும். எக்காலத்திலும் கிடைக்கும். அத்தகைய மூலிகைகளில் சிலவற்றை நீங்கள் பயிர் செய்ய முயற்சிக்கலாம்.
1. ஆடாதொடா: வேலி அடைப்புகளாக இவைகளைப் பயிராக்கலாம். இலைகளும் வேரும் பட்டையும் மருந்தாகப் பயன்படுபவை. இலைச் சாறும் வேர் கஷாயமும் அரை அவுன்ஸ் அளவில் தினம் இரண்டு மூன்று வேளை சாப்பிட இருமல், சளி குணமாகும். காய்ச்சல் தணியும். இலைகளை அரைத்து வெட்டுக்காய புண்களில் வைத்துக் கட்ட சீழ் வைக்காமல் ஆறும்.
2. நொச்சி: இதுவும் ஆடாதொடா போலவே பயிராகக் கூடியது. இலைகளைக் கஷாயமாக்கி 1/2 - 1 அவுன்ஸ் அளவிலோ சாறு பிழிந்து டீ 1/4 - 1/2 அவுன்ஸ் அளவிலோ சாப்பிட தலைவலி நீங்கும். வயிற்றிலுள்ள கிருமிகள் நீங்கும். இத்தழைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியை முகத்தில் படும்படியாக வேதுபிடிக்க மார்பிலும் தலையிலும் கட்டிய சளி நீங்கி தலைவலி குறையும். காது நன்கு கேட்கும். இலைகளை அரைத்துப் பற்றுப்போட வீக்கம், பூச்சி கடிகளால் ஏற்படும் தடிப்பு, அரிப்பு, கீல்வாயு வீக்கம் முதலியவை நீங்கும். இதே நோய்களுக்கு இந்த இலைக் கஷாயத்தை உள்ளுக்கும் சாப்பிடலாம்.
3. மருதாணி: இதன் இலைகளை அரைத்துப் பூச கால்களில் உள்ள வெடிப்பு, உள்ளங்கால் எரிச்சல் நீங்கும். இதன் இலைகளை டீ மாதிரி போட்டுச் சாப்பிட வெட்டைநோய் நீங்கும். படை, சொறி போன்ற தோல் நோய்களில் இதன் பட்டையை அரைத்துப் பூச குணம் தரும்.
4. மாதுளை: பழத்திற்காகவும் இதைப் பயிராக்கலாம். இதன் தோல் வயிற்றுப்போக்கையும், வயிற்றுக்கடுப்பையும் குணமாக்கும். வயிற்றிலுள்ள கீரிப்பூச்சிகளையும் வெளியாக்கும். வெந்நீரில் இந்த பழத்தோலை போட்டுக் கஷாயமாக்கி வடிகட்டிச் சாப்பிட பெரும் மலப்போக்கு மட்டுப்படும்.
5. பிரண்டை: வைட்டமின் சி அதிமுள்ள கொடி. மேலேறிப் படரும் கொடியாக இதைப் பயிராக்கலாம். இதன் சாறு உணவுப் பொருள்களோடு சேர்த்து சமைத்துச் சாப்பிட நல்ல பசியைத் தூண்டும். ஜீரண உபாதைகளில் பலவகைகளில் உதவும்.
6. தூதுவளை: இலையின் நல்ல பசுமையான தோற்றத்திற்காக இதை வளர்க்கலாம். இந்த இலை, இருமல், கபக்கட்டு இவற்றைப் போக்கும். பலவீனமுள்ளவர்களுக்கு இது பலமளிக்க மிகவும் ஏற்றது.
7. துளசி: மார்ச்சளி, இருமல் இவற்றுக்கு உள்ளுக்குச் சாப்பிடவும், காதுவலிக்கு சாறு பிழிந்து காதில் ஊற்றவும். பூச்சிக்கடியின் மேல் பூசவும் நல்லது. தொண்டைக்கட்டு நீங்க இதன் இலையை வாயில் போட்டுச் சுவைத்தால் போதுமானது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் சளி இருமலுக்கு இதன் சாறு ஒரு டீ ஸ்பூன் அளவு, தேன் சேர்த்துக்கொடுக்க நல்லது.
8. பொன்னாங்கண்ணி: உணவுப்பொருளாக கீரைபோல உபயோகிக்கலாம். நல்ல ஒரு மூலிகை. தொடர்ந்து சாப்பிட்டு வர கண் பார்வை கூர்மையாக இருக்கும்.
9. கரிசலாங்கண்ணி: மஞ்சள் கரிசாலை இரண்டும் சிறந்த மூலிகைகள். இரத்தக்குறைவால் ஏற்படும் சோகை, காமாலை போன்றவற்றுக்கு நல்லது. இரும்புச்சத்து உடலில் சேர இதை கீரையாக சமைத்து உண்பதுண்டு. நீர்தேங்கும் இடங்களுக்கு அருகே இவற்றைப் பயிராக்குவது எளிது.
10. வல்லாரை: சற்று நிழலுள்ள இடங்களில் தண்ணீர் தேங்கும் பக்கத்தில் இதைப் பயிராக்கலாம். இதன் இலை 3 - 4 சேர்த்து கொத்துமல்லி விதையும், சர்க்கரையும் அதனுள் வைத்து மடித்துக் கசக்கிச் சாப்பிட குழந்தைகளின் வயிற்றுக் கடுப்பு தணியும். இலையைத் தினமும் காலையில் மென்று சாப்பிட விக்கல் குறையும். இதன் இலையை நிழலில் உலர்த்தி சூர்ணமாக்கியோ இலையை அரைத்த விழுதை பாலுடனோ சாப்பிட ஞாபகசக்தி அதிகமாகும்.
இவையெல்லாம் பல பொதுவான உபாதைகளில் எளிதான ஒரு கை வைத்தியமாக அன்றும் இன்றும் நல்ல குணம் தருபவையாகவே இருக்கின்றன. நோயின் ஆரம்பநிலையிலேயே இவற்றைப் பயன்படுத்தினால் டாக்டரைக் கூப்பிடத் தேவையே ஏற்படாமல் போகலாம். அனைவரும் இவற்றைப் பயமின்றி உபயோகிக்கலாம். கேடு விளைவிக்காதவை. குழந்தைகளும் பெரியோர்களும் இவற்றைப் பயன்படுத்தலாம். அதனால் நம் இருப்பிடத்தைச் சுற்றியுள்ள தோட்டமே நமக்கு ஆரோக்கியமளிக்கட்டும்.
(தொடரும்)
எஸ். சுவாமிநாதன், டீன் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே) செல் : 94444 41771 |
No comments:
Post a Comment