நாளை நவம்பர் 6ம் தேதி வியாழக்கிழமை, ஐப்பசி பெüர்ணமி நன்னாளில் அனைத்துச் சிவாலயங்களிலும் அன்னாபிஷேகப் பெருநாள் நடைபெறும்.
"கோயில்களில் பூஜைகள் முறைப்படி நடந்தால்தான் நாட்டில் சுபிட்சம் நிலவும். வழிபாட்டு முறைகளில் குளறுபடிகள் நேர்ந்தால் பசி, பட்டினி, பஞ்சம்தான் ஏற்படும்' என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
கோயில்களின் பூஜை நெறிமுறைகளை எடுத்துச் சொல்வது ஆகமங்கள். அவை தமிழ்நாட்டிற்கே உரிய தனிச் சொத்துகளும் கூட! முன்னோரான தமிழ்ச் சான்றோர்களால் காலங்காலமாக காப்பாற்றப்பட்டு வரும் இவ்வாகம முறை நூல்களே நம் ஆலயங்களின் வழிபாட்டு நெறிமுறைகளை வரையறை செய்யும் சட்டப் புத்தகங்கள் என்று கூடக் கூறலாம்.
உதாரணமாக ஆலயத்தில் நடைபெறும் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, உபசாரங்கள், நித்ய ஹோமம், வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம், தீபாராதனை என எல்லாமே ஆகம வழிப்படிதான் நடத்தப்படுகின்றன. வைணவக் கோயில்களில் "வைகானஸம், பாஞ்சராத்ரம்' என்ற இரண்டே ஆகமங்கள்தான் நடைமுறையில் உள்ளன.
சிவாலயங்களுக்கோ இருபத்தெட்டு ஆகமங்கள் உள்ளன.
சிவனுக்கு அபிஷேகங்கள் விசேஷம். அபிஷேகங்கள் பற்பல! ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன். அதிலும் சில குறிப்பிட்ட நாட்களில் சில பொருட்களை அபிஷேகிப்பது மிகச் சிறப்பு. அந்த வகையில் வரும் ஐப்பசி பெüர்ணமியன்று சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகிப்பது மிகவும் புண்ணியம் தரும்.
சிவபெருமான் திருமேனியில் 70 வகையான அபிஷேகம் செய்வதைப் பற்றி புராணங்கள் குறிப்பிடுகின்றன. பஞ்ச கவ்யத்தில் தொடங்கி, மழை நீர் வரையுள்ள 70 அபிஷேகப் பொருட்களில் ஒன்றுதான் அன்னம்.
அன்னாபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன் "சாம்ராஜ்யம்' என்னும் அரசாட்சியாகும். சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து அதனை அனைவர்க்கும் அளிப்பதால் அறம், பொருள், இன்பம் அனைத்தும் கிடைக்கும். அன்னாபிஷேகம் தேசத்துக்கு சுபிட்சத்தைத் தரக் கூடியது. வற்றாத வளங்களை உருவாக்கக் கூடியது. பசி, பட்டினி, பஞ்சம் போக்கக் கூடியது.
சிதம்பரம் நடராஜர் கோயிலிலுள்ள "மோட்ச லிங்கம்' என்னும் ஸ்படிக லிங்கத்திற்கு தினந்தோறும் காலையில் அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இந்த அபிஷேகத்தைச் செய்பவர்களுக்கும், தரிசிப்பவர்களுக்கும் அன்ன ஆகாரத்திற்கு குறையேதும் இல்லை என்பது உண்மை. எனவேதான் ""அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்'' என்றார் திருநாவுக்கரசர்.
அன்னாபிஷேகம் அனைத்துச் சிவன் கோயில்களிலும் நடைபெறுகிறது என்றாலும், கங்கை கொண்ட சோழபுரத்தில் ஸ்ரீ பிரகதீஸ்வரருக்கு நடைபெறும் அன்ன அபிஷேகம் மிகவும் விசேஷமாகும். ஆம்! 13 1/2 அடி உயரமும், 63 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லிலான மிகப் பெரிய சிவலிங்கம், இக்கோயிலில் மூலவராக உள்ளது. இந்தப் பெருவுடையார்க்கு நடைபெறும் அன்னாபிஷேகம், ஓர் அற்புத நிகழ்வு. பேரூர் புராணத்தில், ""ஐப்பசி மாதத்தின் முழு நிலவில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படும் அன்னத்தின் ஒவ்வொரு பருக்கையும் ஓர் சிவலிங்க உருவமேயாகும். அந்த அன்னாபிஷேகத்தில் ஈடுபடுவோரும், அபிஷேகத்தினைத் தரிசிப்பவர்களும் இம்மையில் எல்லா நன்மைகளையும் அடைவதுடன் பிறவிப் பிணியிலிருந்து விடுபடுவர்'' எனக் கூறப்பட்டுள்ளது.
பற்பல ஆண்டுகளுக்கு முன் காஞ்சி பரமாச்சாரியாரால் கங்கை கொண்ட சோழ ஈசனார்க்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. அவரது அருளாணையின் வண்ணம், ஐப்பசி பெüர்ணமி தோறும் கங்கை கொண்ட சோழீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், வருடந்தோறும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்நன்னாளில் பக்திப் பெருக்கோடு சிவபெருமானை தரிசிக்கின்றனர். அன்னாபிஷேக தினத்தன்று 100 மூட்டை அரிசி கொண்டு சாதம் வடித்து, பிரம்மாண்டமான லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வர். மாலையில் தீபாராதனை முடித்து, அபிஷேகத்தின் ஒரு பகுதி அன்னம் பக்தர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மற்றுமொரு சிறு பகுதியை அருகிலுள்ள நீர் நிலைகளில் கொண்டு சென்று (அங்கு வாழும் நீர்வாழ் உயிரினங்களுக்காக) கரைப்பார்கள். வந்திருப்போர் அனைவர்க்கும் அன்னதானமும் வழங்கப்படுகிறது.
வருகின்ற ஐப்பசி 20ம் தேதி, வியாழக்கிழமை (நவம்பர் 6ம் தேதி) அன்னாபிஷேகப் பெருநாள். உலகுக்கே உணவளிக்கும் உமையவள் நாதனுக்கு, ஆண்டுதோறும் நன்றிக் காணிக்கையாக அன்ன அபிஷேகம் செய்யும் திருநாள். இந்த அபிஷேகத்தைத் தரிசித்தால் கிடைக்கும் அருளும், வரங்களும், நன்மையும் எண்ணிலடங்காது.
வாய்ப்புள்ளவர்கள் கங்கை கொண்ட சோழபுரம் சென்று, அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வோம். இல்லையேல் அருகிலுள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடக்கத் தேவையான உதவிகள் செய்து இறையருள் பெறுவோமாக
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment