சென்னை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு இலவச மருந்துகள் வழங்கும் திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை தொடங்கியுள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள 15 முதியோர் இல்லங்கள் குறித்த தகவல்கள் சேரிக்கப்பட்டு, அங்கு யார் யாருக்கு என்னென்ன மருந்துகள் தேவைப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், 15 முதியோர் இல்லங்களைச் சேர்ந்த 703 பேருக்கு ஓராண்டுக்குத் தேவையான இலவச மருந்துகள் வழங்கப்படவுள்ளன.
இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மருத்துவமனையின் துணைத் தலைவர் ஷோபனா காமினேனி பேசியது:
இந்தத் திட்டத்தின் மூலம் 161 ஆண்கள், 542 பெண்கள் என மொத்தம் 703 பேர் பலனடைவார்கள். மருத்துவத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற மருத்துவமனையின் கொள்கையின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தில்லி அப்பல்லோ மருத்துவமனையின் மூலம் தில்லியில் உள்ள 16 முதியோர் இல்லங்களைச் சேர்ந்த 990 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து அப்பல்லோ மருத்துவமனையின் மூலம் முதியோர் இல்லங்களுக்கு இலவச மருந்துகளை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. அதன் அடிப்படையில் ஓராண்டில் ஆறாயிரம் முதியோர்களுக்கு மருந்துகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில் முதியோர் இல்லத்தைச் சேர்ந்த பர்வதம் கூறியது:
மனிதனுக்கு உடை,உணவு, உறைவிடம் இது மூன்றும் அத்தியாவசியத் தேவைகளாகும். ஆனால் முதியோருக்கு இவற்றுடன் மருந்து, மாத்திரைகளும் அவசியமாகக் கருதப்படுகிறது. எனவே இந்தத் திட்டம் முதியோர்களுக்கு நன்மை பயக்கும் என்றார் அவர் |
No comments:
Post a Comment