இன்னும் ஐந்து செகண்டுகள் தான்..!
கருத்துகள்
சிறுகதை
படுவேகத்தில் வந்துகொண்டிருந்தது அந்த எக்ஸ்பிரஸ் ரயில். அடுத்தடுத்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் இடைவெளியில் உள்ள எச்சரிக்கைக் கம்பங்கள் பச்சையாய் வழிகாட்ட, எந்தத் தடையுமில்லாமல் தாராள வேகத்துடன் அது வந்துகொண்டிருந்தது. புலர்ந்துவிட்ட காலையின் 7 மணிப் பொழுது. இன்னும் ஒரு மணி நேரத்தில் பிரதான ஸ்டேஷனை அடைந்து விடலாம். இன்ஜின் டிரைவர் இரவுக் கண்விழிப்பில் சற்றே சோர்வு கொண்டிருந்தாலும், விரைவில் ஊர் வந்து சேர்ந்துவிடும் நிம்மதியில் ரயிலை இயக்கிக் கொண்டிருந்தார்.
பார்வை மட்டும் முன்னே நீண்டு செல்லும் தண்டவாளத்திலும் அதிலிருந்து பிரியும் அல்லது வந்து சேர்ந்துகொள்ளும் தண்டவாளங்களிலுமே பதிந்திருந்தது. அவ்வப்போது தொலைவில் தெரியும் பச்சை சிக்னலையும் கவனித்துக்கொண்டார். இப்போதைக்கு ரயிலின் வேகத்தைக் குறைக்க வேண்டிய அவசியம் இருக்காது.... ஐயோ இதென்ன, ஒரு இளைஞன் இந்த ரயில் வரும் தண்டவாளத்துக்கு அருகில் வருகிறானே! மடக்கிய இடது கை, இடது காதில் செல்போனை அணைத்து கொடுக்க, யாரிடமோ, எதையோ பேசிக்கொண்டு வருகிறானே.
அடப்பாவி! இந்த தண்டவாளங்களைக் கடந்து போய்விடுவான் என்று பார்த்தால், இரண்டுக்கும் நடுவில் கொஞ்சம்கூட ஆபத்தை உணராமல் முன்னால் நடந்துபோய்க் கொண்டிருக்கிறானே! பதறிப் போனார் டிரைவர். மிக அழுத்தமாக ஹாரனை இயக்கினார். அது உலகத்தையே உலுக்கிப் போட்டாலும், அந்த இளைஞன் மட்டும் எந்த சலனமுமில்லாமல் நிதானமாக நடக்கிறானே! இன்னும் அதிகபட்சம் பத்து செகண்டுகளுக்குள் அவனை ரயில் மோதிவிடுமே! உடலே வியர்த்தது அவருக்கு. இன்ஜினை இயக்கும் கைப்பிடியிலிருந்து கையை எடுத்தால், அதனால் வேகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையலாமே தவிர, ரயில் இளைஞன் மீது மோதுவதைத் தவிர்க்கவே முடியாது.
அவனைத் தாக்கிவிடாதபடி கட்டுப்படுத்த இப்போது அதிரடியாக பிரேக் பிடித்தால் அது அந்தப் பையனை மோதாமல் நிற்குமா என்பதும் சந்தேகமே. அதோடு சில கிளை தண்டவாளங்கள் இந்த தண்டவாளத்துடன் அடுத்தடுத்து இணையவோ, பிரியவோ போகின்றன என்பதால், அப்படி பிரேக் பிடித்தால், ஒருவேளை ரயில் தடம் புரளக்கூடும். அப்படி தடம் புரண்டால், ரயிலில் பயணித்துக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான பயணிகள் ஆபத்துக்குள்ளாவார்கள்; அவர்களில் சிலபேர் இறக்கவும் நேரிடலாம்; பலர் படுகாயமுறலாம்; எந்த ஆபத்துமின்றி தப்பிக்கக்கூடியவர்கள் வெகு சிலராகத்தான் இருக்க முடியும்.
படுவேகமாகப் பின்னோக்கிப் போய்க்கொண்டிருந்த மரங்கள், கட்டிடங்கள் எல்லாம், அந்த இளைஞன் தன் முடிவை வெகுவாக நெருங்கிக் கொண்டிருப்பதை அவசர அவசரமாக அறிவித்தன. இப்போது என்ன செய்வது? அந்த ஒருத்தனைக் காப்பாற்றுவதற்காக இந்த நூற்றுக்கணக்கானவர்களை ஆபத்திற்குள்ளாக்குவது முறையா? அல்லது இவர்களைக் காப்பாற்றுவதற்காக இந்த ஒருத்தன் போனால் பரவயில்லையா? குழம்பித் தவித்தார் டிரைவர். இன்னும் ஐந்து செகண்டுதான்... இரண்டாவதுதான் சரி. இந்த இளைஞன் செத்துத் தொலையட்டும்.
ஆனால், அது, தான் செய்யும் கொலையல்லவா? ஒருவர் இன்னொருவர் மீது கடுங்கோபம் கொண்டு தாக்கினால் ஏற்படுவது கொலை; அல்லது தற்காப்புக்காகத் திருப்பித் தாக்கும்போது அதுவும் கொலையாக முடியலாம். ஆனால், இது எதில் சேர்த்தி? எந்த முன் விரோதமும் இல்லாத, தற்காப்புக்கான எந்த முகாந்திரமும் இல்லாமல் செய்யப்படப்போகும் இந்தக் கொலை எதில் சேர்த்தி? 'விபத்து' என்று அலட்சியமாகத் தலைப்பிட்டுத் தப்பித்துவிட முடியுமா? இதோ, என்னால் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இன்ஜின் எந்த வகையிலும், கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத இந்த இளைஞனைக் கொல்லப் போகிறதே, அதுவும் என் கண்ணெதிரிலேயே நிகழப் போகிறதே, இதனை விபத்து என்று சொல்லி மனதை சமாதானப்படுத்திக்கொண்டு விடமுடியுமா?
எனக்குக் கொஞ்சமும் தொடர்பில்லாத இவனைக் கொலை செய்ய எனக்கு என்ன உரிமை இருக்கிறது? இப்போது இவன் கொலைசெய்யப்பட்டானானால் அது பிரம்மஹத்தி தோஷமாகி, தன்னையும், தன் குடும்பத்தையும் துரத்துமா? என் வாரிசுகளின் வாழ்க்கை இதனால் பாதிக்கப்படுமா? அட, நான்தான் இந்தக் 'கொலை'க்குப் பிறகு நிம்மதியாக உயிர் வாழ முடியுமா? இந்தச் சம்பவமே வாழ்நாள் முழுவதும் என் நெஞ்சை அறுத்துக் கொண்டிருக்குமே! பொல்லாத ஜோதிடமும், சாஸ்திரமும் அவர் நினைவுக்கு வந்து அவரைப் பாடாய்ப்படுத்தின.
சாஸ்திரப்படி, இந்த தோஷம் அவருடைய ஏழு தலைமுறையையும் பாதிக்குமோ? இப்பொது இவன் இறந்தானென்றால் அடுத்தடுத்து என்ன நிகழும்? மறுநாள் செய்தித்தாளில் தகவல் வரும்: ''செல்போன் பேசிக்கொண்டே தண்டவாளத்தில் நடந்து சென்றவர் ரயில் மோதி மரணம்.'' இது, அவனைப் போலவே செல்பேசிக்கொண்டு இதேபோல அலட்சியமாக, ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடக்க முயற்சிக்கும் பிறருக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்கட்டுமே...
இந்த கட்டத்தில், இந்த நெருக்கடியில் வேறொன்றும் செய்ய இயலாது.
கார்டுக்கு வயர்லெஸ் மூலம் தகவல் தெரிவிக்கலாமா? தெரிவித்தும் என்ன பயன்? 'நம் ரயில் இன்ஜின், ஒரு இளைஞனை மோதப் போகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்... ஆனால், அதற்குள் காலம் கடந்துவிடுமே! கடவுளே என்னை மன்னித்து விடு. என் கண்ணெதிரிலேயே, நான் ஓட்டி வரும் ரயில் இந்த இளைஞனை மோதி சாகடிக்கப்போகிறது. அவன் சிதறி பல துண்டுகளாக ஆங்காங்கே வீசியடிக்கப்படப் போகிறான்...
பெரும் துயரத்துடன் கண்களை மூடிக்கொள்ள டிரைவர் முயன்றபோது... அட, இதென்ன, யாரோ ஒருவர் அவனருகே ஓடி வந்து அவனை அப்படியே பிடித்து தண்டவாளத்தை விட்டு வெளியே தள்ளிவிட்டு, தானும் அவனக் கட்டிப் புரண்டபடி அவனோடு தண்டவாளத்தை விட்டு ஒதுங்குகிறாரே! நன்றி கடவுளே! பெருமூச்சுவிட்டார் டிரைவர். ரயில் வேகம் குறையாமல், சந்தோஷ நிம்மதியுடன் அந்த மரண இடத்தை வேகமாகக் கடந்தது.
பிரபுசங்கர்
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment