உலகின் நம்பர் ஒன் மெக்கானிக்!
சாமான்யர் தொழிலிலும் சாதனை செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் மதுரையைச் சேர்ந்த மெக்கானிக் மீனாட்சி சுந்தரம்.
வாகனங்கள் பழுதாகும்போது மட்டும் ஆபத்பாந்தவனாகத் தெரியும் மெக்கானிக்குகளை, மற்ற நேரங்களில் மறந்துவிடுவோம்.
ஒரு மெக்கானிக் வாகனத்தையும் ஓட்டுபவரையும் மட்டும் காப்பாற்றுவது இல்லை;
அதன் மூலம், வாகனம் ஓட்டுபவரின் குடும்பத்தையும், சாலையில் செல்வோரையும் சேர்த்தே காப்பாற்றுகிறார்.
ஜப்பானைச் சேர்ந்த யமஹா நிறுவனம், ஆண்டுதோறும் உலகம் முழுக்க உள்ள தனது டீலர்ஷிப்களில், சிறந்த மெக்கானிக்கை கடுமையான போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கிறது.
யமஹா வேர்ல்டு டெக்னிஷியன் கிராண்ட் ப்ரீ (Yamaha World Technician Grand Prix) எனும் பெயரில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் ரேஸ் பைக், சூப்பர் பைக், கம்யூட்டர் பைக் என மூன்று பிரிவுகளின் கீழ் சிறந்த மெக்கானிக்கைத் தேர்வு செய்கிறார்கள்.
இதில், உலகம் முழுவதும் அதிக மெக்கானிக்குகள் மோதும் கம்யூட்டர் பைக் பிரிவில், உலகின் சிறந்த மெக்கானிக்காக முதல் இடம் பிடித்து அசத்தியிருக்கிறார் மீனாட்சி சுந்தரம்.
மிகப் பெரிய விருதைப் பெற்று வந்ததற்கான எந்த பந்தாவும் இல்லாமல் வழக்கம்போல, மதுரை ஒர்க்ஷாப் சாலையில் உள்ள அழகேந்திரன் ஆட்டோஸ் யமஹா சர்வீஸ் சென்டரில் வேலை செய்துகொண்டிருந்தார் மீனாட்சி சுந்தரம்.
அவரின் சாதனையை கேட்போம் வாருங்கள்
''என் அப்பா மில் தொழிலாளி. சிறு வயதில் இருந்தே பைக் ஓட்ட வேண்டுமென்று பயங்கர ஆர்வம்.
ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
பத்தாம் வகுப்பு வரைதான் படித்தேன்.
என்னமோ தெரியவில்லை, பைக் மெக்கானிக் ஆக வேண்டும் என்ற ஆசை அப்போதே மனசில் ஒட்டிக்கொண்டது.
என் 20 வயதில் மெக்கானிக் குமார் அண்ணனிடம் ஹெல்பராகச் சேர்ந்தேன்.
அவரிடம்தான் தெளிவான அடிப்படைத் தொழிலைக் கற்றேன்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, அழகேந்திரன் யமஹா சர்வீஸில் பணியில் சேர்ந்தேன்.
அங்கு வீல் டியூனிங் கற்றுக்கொண்டேன்.
இயல்பாகவே எந்த வேலையையும் கவனமாகவும், வேகமாகவும், சரியாகவும் செய்யும் பழக்கம் எனக்கு உண்டு.
வாடிக்கையாளர்கள், 'ஏன் இதை மாற்ற வேண்டும்?' என்று கேட்டால், டெக்னிக்கலாக அந்த பைக்கில் என்ன பிரச்னை என்பதைச் சரியான முறையில் எடுத்துச் சொல்வேன்.
நான் வேலை செய்யும் விதத்தைப் பார்த்து, அழகேந்திரன் ஆட்டோஸ் நிர்வாகம், என்னை பயிற்சிக்காக1999-ல் பெங்களூருவுக்கு அனுப்பிவைத்தது.
ஒரு வாரம் நடக்கும் அந்தப் பயிற்சியில் எலெக்ட்ரிக்கல், இன்ஜின் சர்வீஸ் ஆகியவற்றுடன் வாடிக்கையாளரைத் திருப்தி செய்யும் விதம் பற்றியும் பயிற்சி அளித்தார்கள்.
அப்போது எனக்குப் பயிற்சியளிக்க வந்தவர்தான், இன்று யமஹா இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கும் ரவீந்திரசிங்.
இதுபோன்ற பயிற்சிகள் என்னை மெக்கானிக் தொழிலில் இன்னும் ஆர்வம்கொள்ள வைத்தது.
பெரிய அளவில் இன்ஜின் பிரச்னை வந்தாலும், அதை பெங்களூரில் இருக்கும் இன்ஜினீயர்களிடம் ஆலோசித்து மதுரையிலேயே சரிசெய்துவிடுவோம்.
எங்களைப் போன்ற மெக்கானிக்குகளைத் தரமாக உருவாக்கவும், ஆர்வத்தை ஏற்படுத்தவும், யமஹா நிறுவனமே ஒவ்வொரு நாட்டிலும் மெக்கானிக்குகளுக்கு ஆண்டுதோறும் சில சோதனைப் போட்டிகளை வைக்கிறது.
அந்த வகையில்தான் இந்த ஆண்டு இந்தியாவில் உள்ள யமஹா சர்வீஸ் சென்டரில் பணிபுரியும் மெக்கானிக்குகளுக்கும் போட்டி வைத்தனர்.
இந்தப் பயிற்சியின்போது ஏராளமான பிரச்னைகள் உள்ள ஒரு பைக்கைக் கொடுப்பார்கள்.
அதை ஒரு மணி நேரத்துக்குள் சரிசெய்து, ஓட்டிக் காட்ட வேண்டும்.
அதேசமயம், எப்படி இந்த வேலையைச் செய்தேன் என்பதையும் விளக்க வேண்டும்.
நான் எனக்குக் கொடுத்த பைக்கை 40 நிமிடங்களுக்குள் சரிசெய்து ஓட்டிக் காட்டினேன்.
அடுத்த டெஸ்ட் இன்னும் கடினமானது.
டென்ஷனோடு வருகின்ற வாடிக்கையாளரை, ஒரு மெக்கானிக் எப்படித் திருப்திப்படுத்தி அனுப்புகிறார் என்பதைக் கணிப்பதற்காக நடத்தப்படும் டெஸ்ட்.
யாரை அனுப்புகிறார்கள் என்பதும், அவர் எந்த மாதிரியானவர் என்பதும் எங்களுக்குத் தெரியாது.
அவரிடம், பைக்கில் என்ன பிரச்னை என்பதைப் புரியும் வகையில் சொல்ல வேண்டும்.
இந்தப் போட்டியில் நான் வெற்றிபெற்று 2014-ம் ஆண்டின் யமஹா இந்தியாவின் சிறந்த மெக்கானிக்காகத் தேர்வானேன்.
இந்தியாவில் நம்பர் ஒன் மெக்கானிக் என்பதால், ஜப்பானில் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெற்ற 'வேர்ல்டு டெக்னீஷியன் கிராண்ட்ப்ரீ' போட்டிக்கு அனுப்பிவைத்தார்கள்.
இதற்கு முன்பாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஒரு மாத காலம் கடுமையான பயிற்சி கொடுத்தது இந்திய யமஹா நிர்வாகம்.
ஜப்பானில் யமஹா தொழிற்சாலை இருக்கும் இஷிதாவில்தான் இறுதிப் போட்டி. 18 நாடுகளில் இருந்து என்னைப்போல தேர்ந்தெடுக்கப்பட்ட மெக்கானிக்குகள் வந்திருந்தார்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒரு மொழிபெயர்ப்பாளரும் கொடுத்திருந்தார்கள்.
அதனால், மொழிப் பிரச்னை இல்லை.
வேகம், சரியான வேலை, செய்த வேலை என்ன என்பதை வாடிக்கையாளரிடம் விளக்கிச் சொல்வது இந்த மூன்றையும்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று போட்டி துவங்குவதற்கு முன்பாகச் சொன்னார்கள்.
முழுவதும் பழுதான பைக்கை அரை மணி நேரத்தில் சரிசெய்யச் சொன்னார்கள்;
செய்தேன்.
எலெக்ட்ரிக்கல் வேலையை 15 நிமிடங்களில் செய்யச் சொன்னார்கள்; மூன்றே நிமிடங்களில் செய்து முடித்தேன்.
30 நிமிடங்களுக்குள் முடிக்கச் சொன்ன வீல் பேலன்ஸிங் வேலையை, 13 நிமிடங்களில் முடித்தேன்.
என் மீதான நம்பிக்கை எனக்கு அபரிமிதமாக இருந்ததால், செம ஸ்பீடாக எல்லா வேலைகளையும் செய்தேன்.
அக்டோபர் 2-ம் தேதி என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள்.
மதுரை, ஹார்விப்பட்டியில் சுற்றித் திரிந்துகொண்டிருந்த நான், அன்று ஜப்பானில் உலக நாடுகளில் இருந்து வந்திருந்த அத்தனை மெக்கானிக்குகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, முதல் பரிசை வென்றபோது, என்ன நடக்கிறது என்று உணர்வதற்கே எனக்கு சில மணித் துளிகள் ஆனது.
எல்லா பயிற்சிகளுக்கும் அனுப்பிவைத்து, ஜப்பான் வரை சென்று திரும்ப எனக்குத் துணையாக இருந்த அழகேந்திரன் யமஹா நிறுவனத்துக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று நெகிழ்ந்தார் மீனாட்சி சுந்தரம்.
ஜப்பானில் விருது வென்றதைப் பாராட்டி, யமஹா இந்தியா நிறுவனம் யமஹா ரே ஸ்கூட்டரை மீனாட்சி சுந்தரத்துக்குப் பரிசாக வழங்கியுள்ளது.
அவர் பணிபுரியும் அழகேந்திரன் ஆட்டோஸ் நிர்வாகம், மீனாட்சி சுந்தரத்துக்கு சூப்பர்வைஸராகப் பதவி உயர்வு வழங்கியுள்ளது.
சாதனைத் தமிழனுக்கு வாழ்த்துகள்!
....
'' When people hurt you Over and Over think of them as Sand paper.They Scratch & hurt you, but in the end you are polished and they are finished. ''
No comments:
Post a Comment