மூச்சுக்காற்றே மூலதனம் ...
காலையில் முழித்த முகம் சரியில்லை!
எடுத்த காரியம் எதுவும் நடக்கவில்லை! என்று அலுத்துக் கொள்வோர்களும், இன்றைக்குக் கழுதை முகத்தில் முழித்திருப்பான் போலிருக்கிறது! அதிர்ஷ்டக்காரன், அவனுக்கு அடித்தது, யோகம் என்று வியந்து போவோரும் இருக்கின்றார்கள்.
ஆனால், காலையில் தூங்கி எழும்போதே அன்றைய தினம் எப்படி இருக்கும்! எப்படி இருந்தால் தனக்கு நன்மை உண்டாகும் என்பதை அறிந்து செயல்படுபவர்கள் குறைவு. நாம் நமது மூக்கின் வழியாக விடுகின்ற மூச்சுக்காற்று நம்மை ஆக்குகின்றது. நம்மை ஆள்கின்றது.
நம்மை வழி நடத்துகின்றது.
நம்மைப் பற்றியும் நம் உடம்பைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்யும் மணியாக மூக்கையும் மூச்சையும் குறிப்பிடலாம். படுக்கையிலிருந்து எழ வேண்டிய நேரம் அதிகாலை 4.00 மணி. 4.00 மணி என்பது மிகவும் முக்கியமான நேரமாகும்.
அதிகாலை 4.00 மணிக்கு எந்த நாசிப்பக்கமாக மூச்சு வெளிவருகிறது என்பதைக் கவனித்தால், அன்றைய பொழுதில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம். மூக்கிலிருந்து வெளிவருகின்ற மூச்சு முறையாக இல்லாமல் தாறுமாறாக இருக்குமேயானால், மதங்கொண்ட யானையைப் போல் தாறுமாறாக நடந்து இன்பங்களை இழந்து துன்பங்களைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டியிருக்கும்.
ஒவ்வொரு நாளும் நாம் விடுகின்ற மூச்சு, மூக்கின் இரண்டு நாசிகளில் ஒரு பக்க நாசியில் வெளி வர வேண்டும். மூக்கில் விடுகின்ற மூச்சுக்காற்று முறையாக வெளிவர முதலில் இடது பக்கத்து நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து வலது பக்க நாசி வழியாக வெளியிட வேண்டும்.
அடுத்து, வலது பக்க நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து இடது பக்கத்து நாசி வழியாக வெளியிட வேண்டும். இவ்வாறு, காலையிலும் மாலையிலும் 21 முறை செய்து பழக வேண்டும்.
அவ்வாறு செய்தால், மூக்கிலும் மூச்சுக் குழாயிலும் நுரையீரலிலும் உள்ள அடைப்புகளும், சளியும் வெளியேறிவிடும்.
அதன் பின் மூச்சுவிடுவது இயல்பாக இருக்கும். அடுத்ததாக, அதிகாலையில் விழித்தெழுந்து மூக்கில் எந்த நாசி வழியாக மூச்சுக்காற்று வெளியே வருகிறது என்று பார்க்க வேண்டும்.
அதிகாலையில் எந்தப்பக்கத்து நாசி வழியாக மூச்சுக் காற்று வெளிவருகிறது என்பதைக் கொண்டு, அன்றைய தினம் நமது உடம்பு எவ்வாறு இருக்கும் என்பதை முன்னரே அறிந்து கொள்ளலாம். வலது நாசி என்பது சூரிய கலை.
இடது நாசி என்பது சந்திர கலை.
ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு அன்றைய பொழுதின் உடல் நலம் தொடங்குகிறது.
அன்றைய பொழுதின் உடல் நடத்தை அதிகாலையிலேயே கண்டறிந்து கொண்டு, அதற்கு வேண்டிய மாற்ற நடவடிக்கைகளைச் செய்து கொண்டால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல, அதிகாலையிலேயே முடிந்துவிடும். எப்படியென்றால், வார நாள்களில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய இம்மூன்று நாள்களில் அதிகாலை நான்கு மணியிலிருந்து காலை ஆறு மணி வரை இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.
ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய இம்மூன்று நாள்களில் வலது பக்க நாசி வாயாக மூச்சு வெளிவர வேண்டும். வார நாள்கள் எனில் வியாழக்கிழமை மிகவும் முக்கியமான நாளாகும்.
மற்ற ஆறு நாள்களைப்போல வியாழக்கிழமையில் மூச்சு விட முடியாது.
வியாழக்கிழமை அன்று பௌர்ணமியாக இருந்தால், அதிகாலை நான்கு மணிக்கு இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும். வியாழக்கிழமை அன்று அமாவாசையாக இருந்தால் இடது நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.
இவை இரண்டும் இல்லாமல் வளர்பிறையாக இருந்தால் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.
தேய்பிறையாக இருந்தால் வலது பக்க நாசி வாயாக மூச்சு வெளிவர வேண்டும். மேலே கூறியது கூறியவாறு மூச்சு வெளிவந்து கொண்டிருந்தால் அந்த ஏழு நாள்களும் உடல் நலமும் மன நலமும் சீறாக இருக்கும்.
எவ்விதமான நோய்நொடிகளும் அண்டாமல் இருக்கும்.
அதற்கு மாறாக, நடந்தால் என்ன நடக்கும் என்பதைக் காண்பதற்கு முன் ஒரு சிறிய இடைவேளை. ஞாயிறு அன்று காலையில் வலது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், தலைவலி, சளி, இருமல், ஈளை, மூச்சடைப்பு நோய்கள் உருவாகும்.
திங்கள் அன்று காலையில் இடது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவந்தால், ஜலதோசம், ஆஸ்துமா, தும்மல் நோய்கள் உண்டாகும். செவ்வாய் அன்று காலையில் வலது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூசு வெளிவந்தால், காய்ச்சல், கண் எரிச்சல், நெஞ்செரிச்சல், பித்த மயக்கம் ஆகியவை ஏற்படும்.
புதன் அன்று காலையில் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், உடல் வலி, கைகால் குடைச்சல், மூட்டுவலி, நீரேற்றம், தலைக்குத்தல் போன்ற நோய்கள் உருவாகும். வியாழக்கிழமை நாளில் பௌர்ணமி, அமாவாசை, வளர்பிறை, தேய்பிறை ஆகியவை இருந்தால், முறையே இடது நாசி, வலது நாசி, இடது நாசி, வலது நாசி ஆகிய நாசி வழியாக மூச்சு வெளிவரவேண்டும்.
அதற்கு மாறாக வெளிவந்தால், அடி வயிற்றில் நோயுண்டாகும். பெண்களுக்குக் கருப்பைக் கோளாறு ஏற்படும். மலட்டுத் தன்மை உருவாகும்.
இல்லற உறவு கசந்து போகும்.
வெள்ளி அன்று காலையில் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், கண் வலி வரும். கண் நோய் உண்டாகும். பார்வை குறையும். சனி அன்று காலையில் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், குளிர் கரம், சரும நோய், குட்டம் போன்ற நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு.
மூக்கின் வழியாக வருகின்ற மூச்சுக்காற்று தடம் மாறி நடந்தால் உடல்நலம் மட்டுந்தான் பாதிக்கும் என்றில்லை. மன நலமும் பாதிக்கும். மன நலத்தில் ஏற்படுகின்ற பாதிப்பினால், உற்றார் உறவினர்களுடன் பழகும் பழக்கங்களும் பாதிக்கும். அதனால், உறவு முறிவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
வார நாள்களில் விடுகின்ற மூச்சுக்காற்று தடம்மாறினால் உடல் நலத்தில் குறைபாடுகளும் நோய்களும் உருவாகி, அவற்றின் ஆதிக்கத்தினால் உடல் நலம் பாதிக்கும். உறவும் தொழிலும் உடன்படாமல் எதிர்மறையாகச் செயல்படும்.
கசப்பும் இழப்பும் வாழக்கையைத் தடம் புரளச் செய்துவிடும்.
இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணமானது மூச்சுக்காற்று.
அது, நாள்தோறும் விடியற்காலையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கொண்டு அன்றைய பொழுதின் ஆரோக்கியத்தை, மன வளத்தை அறிந்து கொள்ளலாம். மூச்சுக்காற்று எந்த நாசியில் இயங்குகிறது என்பதைக் கண்டறிந்து அன்றைய பொழுது எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்வது மட்டும் உடல் நலத்தைப் பேணுவது ஆகாது.
தீங்கும் தீமையும் வரப்போகிறது என்றறிந்து கொண்டு வருவது வரட்டும்! ஒரு கை பார்த்துக் கொள்ளலாம்! என்றிருப்பது அறிவுடமையுமாகாது. எந்தச் செயலுக்கும் ஒரு மாற்று இருப்பதைப் போல, எல்லாவற்றுக்கும் தீர்வு என்பது இருக்கும் என்பதை உணர்ந்து அந்தத் தீர்வு என்ன என்று அறிய முற்பட வேண்டும்.
மூச்சுக்காற்று அதன் இயல்புக்கு மாறாக நடக்கத்தொடங்கும் போதே அதனை மாற்றுவதற்கான தீர்வைச் செய்து முறையாக இயங்கச் செய்ய வேண்டும்.
அப்படிச் செய்தால் தீங்கும் தீமையும் நீர்த்துப் போகும். கிழமைக்கு ஏற்றவாறு நாசியின் வலப்புறமோ அல்லது இடப்புறமோ இயங்குகின்ற மூச்சானது, சுமார் ஒரு மணி நேரம் வரை இயங்கிவிட்டு அடுத்த நாசிக்கு மாறிவிடும். அதிகாலை நான்கு மணி என்பது அன்றையப் பொழுதின் தொடக்க நேரம் என்று முன்னரே சொன்னோம். அந்த நேரத்தைக்குறிப்பிடவே 'வைகறை துயில் எழு' என்று கூறப்பட்டுள்ளது.
சூரியகலை சூரியனின் ஆதிக்கத்தில் இயங்குகிறது. இது வெப்பமானது. சந்திரகலை சந்திரனின் ஆதிக்கத்தில் இயங்குகிறது. இது குளிர்ச்சியானது.
குளிர்ச்சியும் வெப்பமும் உடலுக்குத் தேவை என்பதால் அவை இரண்டும் மாறி மாறி இயங்கி உலைப் பாதுகாக்கின்றன.
வெப்பம் மிகுந்தாலும் நோயாகும். குளிர்ச்சி மிகுந்தாலும் நோயாகும். அவை இரண்டும் சம அளவில் இயங்கிக் கொண்டிருந்தால், அல்லது இயங்கச் செய்து கொண்டிருந்தால் நோய் என்னும் பேச்சுக்கே இடமில்லை. அதிகாலையில் எழுந்திருந்த காலைக்கடன்களை முடித்து விட்டு, முகத்தைச் சுத்தம் செய்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறிக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர், நாசிக்குக் கீழே கையை வைத்து எந்த நாசியின் வழியாக மூச்சுக்காற்று வந்து போகிறது என்பதைச் சோதிக்க வேண்டும். அதன் பிறகு, அன்றைய கிழமை என்ன, அக்கிழமையன்று எந்த நாசியின் வழியாக மூச்சு இயங்க வேண்டும் என்றறிந்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு வலப்புற நாசி வழியாக மூச்சுக்காற்று இயங்க வேண்டும். அன்றைக்கு அதிகாலையில் வலப்புறத்தில் இயங்கினால் தோஷமில்லை. மாறாக இடப்புறமாக இயங்குகிறது என்று வைத்துக் கொள்வோம்.
என்ன செய்ய வேண்டும்?
போர்வை, சமுக்காளம் போன்ற துணியைத் தரையில் விரித்துக் கொண்டு, அதன் மீது பத்ம ஆசனம் போட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். பத்மாசனம் போட முடியாவிட்டால் சுகாசனம் போட்டு அமர்ந்து கொள்ளலாம்.
சுகாசனம் என்பது சாப்பிடும்போது உட்காருவதுபோல் உட்கார்வது.
அவ்வாறு உட்கார்ந்து கொண்டு வலது கையின் கட்டை விரல் மோதிர விரல் ஆகிய இரண்ட மட்டும் நீட்டிக் கொண்டு மற்ற மூன்று விரல்களையும் உட்புறமாக மடக்கிக் கொண்டு, கட்டை விரலை வலப்புற நாசியிலும் மோதிர விரலை இடப்புற நாசியிலும் மூக்கைச் சிந்தும்போது வைப்பது போல் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது, கட்டை விரலால் வலப்புற நாசியை அமுக்கி மூச்சு வராமல் அடைத்துக் கொண்டு இடப்புறத்து நாசி வழியாக மூச்சை மெதுவாக உள்ளுக்குள் இழுக்க வேண்டும். அவ்வாறு இழுக்கும் நேரம் அரை நிமிடம் என்று வைத்துக் கொள்வோம்.
மூச்சை இழுத்தவுடன் மோதிர விரலால் இடப்புறத்து நாசியை அடைத்துக் கொண்டு, கட்டை விரலை எடுத்து விட்டு, வலப்புற நாசி வழியாகக் காற்றை வெளியே விட வேண்டும். மூச்சை வெளியே விடும்போது, இடப்புறமாக மூச்சை இழுக்கும்போது ஆகும் நேரம் அரை நிமிடத்தைப் போல இரண்டு மடங்கு நேரம் (ஒரு நிமிடம்) மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும்.
அடுத்து, வலப்புற நாசி வழியாக மூச்சை வெளியே விட்டதும், அந்த நாசியின் வழியாகவே மூச்சை அரை நிமிட நேரம் அளவுக்கு உள்ளே இழுக்க வேண்டும். காற்று உள்ளே சென்ற வலப்புற நாசியைக் கட்டை விரலால் அடைத்துக் கொண்டு, இடப்புறத்தை அடைத்துக் கொண்டிருக்கும் மோதிர விரலைத் தளர்த்திக் கொண்டு ஒரு நிமிட நேரம் அளவுக்கு உள்ளே சென்ற காற்றை மெதுவாக வெளியே விட வேண்டும்.
இவ்வாறு, வலப்புறமும் இடப்புறமும் மாறி மாறி விட வேண்டும். வலது புறத்திலும் இடது புறத்திலும் மூச்சு விடுவது ஒன்று எனக் கணக்கிட்டு, இருபத்தொரு முறை விட வேண்டும்.
அவ்வாறு செய்த பின்பு, சிறிது நேர ஓய்வுக்குப் பின்பு நாசியைச் சோதிக்க வேண்டும். அப்போது, இயல்பாக வரவேண்டிய வலது புறத்து நாசி வழியாக மூச்சு வர வேண்டும்- அப்போதும் இடது புறத்து வழியாகவே மூச்சு வந்து கொண்டிருந்தால், கவலைப்படவேண்டாம்.
விரித்து வைத்துள்ள துணியின் மீது, தெற்கில் தலையை வைத்துப் படுத்துக் கொள்ளலாம். இடது கையை மடக்கி தலைக்கு வைத்துக் கொள்ளலாம்.
உள்ளங்களையில் காதைவைத்து படுத்துக் கொள்ளவும்.
இடது காலை மடக்கி வலது காலை நீட்டிக் கொள்ளவும். வலது கை வலது தொடையில் இருக்குமாறு நீட்டிக் கொண்டு, பத்துப் பதினைந்து நிமிடங்கள் படுத்திருந்தால், மூச்சு இடது கலையிலிருந்து மாறி வலதுக்கு வந்துவிடும். மேலும் மற்றொரு முறை சுவர் ஓரமாக நின்று கொண்டு இடது காலைத் தூக்கி வலது கால் தொடை மீது வைத்துக் கொள்ளவும்.
கை இரண்டையும் ஒன்றாகச்¢சேர்த்து கும்பிடுவதுபோல வைத்துக் கொண்டு, கையைத் தலைக்கு மேலே நீட்டிக் கொள்ளவும். இதற்கு நின்ற பாத ஆசனம் என்று பெயர். இந்த ஆசனத்தில் ஐந்து நிமிடம் நின்றால் மூச்சு இடகலையிலிருந்து வலதுக்கு மாறிவிடும்.
இவ்வாறு கலையை மாற்றிக்கொண்டால், அன்றைய பொழுது ஆனந்தமாக இருக்கும்.
கால் மேல் கால்: ஒரு சிலர் எந்த இடத்தில் அமர்ந்தாலும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
பெரியவர்கள் முன்னிலையில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு அமரக் கூடாது! அது மரியாதைக் குறைவு என்றெல்லாம் கூறப்பட்டாலும், யார் எதைச் சொன்னாலும் நான் அப்படித்தான் உட்காருவேன் என்று, உட்காருவோரும் இருக்கின்றார்கள். வலது காலின் பெரு விரலிலிருந்து சூரிய கலையும், இடது காலின் பெருவிரலில் இருந்து சந்திர கலையும் தொடங்குகிறது என்பதால், வலது காலைச் சூரியனாகவும் இடது காலைச் சந்திரனாகவும் கருதலாம்.
உட்காரும் போது வலது கால் இடது காலின் மீது போட்டுக் கொண்டு அமர்ந்தால் சூரிய ஆற்றல் மிகும். இடது கால் வலது காலின் மீது போட்டுக் கொண்டு அமர்ந்தால் சந்திர ஆற்றல் மிகும்.
எப்போதும் வலது காலை இடது கால் மீது போட்டுக் கொண்டு அமர்கின்றவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.
இடது காலை வலது கால் மீது போட்டுக் கொண்டு அமர்கின்றவர்கள் சாந்தமானவர்களாக இருப்பார்கள். இருக்கையில் அமரும் போது அப்படி அமரலாம்.
தரையில் அமரும் போது என்ன செய்யலாம்?
தரையில் அமரும் போதும் முதலில் இடது காலை மடக்கிக் கொள்ளவும்.
அடுத்து வலது காலைத்தூக்கி இடது கால் மீது போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டால் சூரிய ஆற்றல் கிடைக்கும். — -- |
No comments:
Post a Comment