5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை தொடக்கம்
சில்லறை விற்பனை மையங்களில் 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை தொடங்கியது.
சென்னை, தில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் தாற்காலிகமாகவும், அவசரத் தேவைக்காகவும் நாள்தோறும் எரிவாயு சிலிண்டர்களை வாங்கிப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தடையற்ற எரிவாயு விற்பனைத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கியது. நுகர்வோர் வசதிக்காக 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் எல்.பி.ஜி. விநியோக மையங்கள், சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைகளிலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக சென்னை, பெங்களூர், கோரக்பூர், லக்னௌ, அலிகார் ஆகிய 5 மாநகரங்களில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் தில்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட 50 மாநகரங்களுக்கு தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள், இலவச வர்த்தக எல்.பி.ஜி (பிரி ட்ரேட் எல்.பி.ஜி) என்று அழைக்கப்படும். முதல் விற்பனையின் போது உபகரணத்தின் விலை, தற்போதுள்ள 5 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை மற்றும் நிர்வாக கட்டணங்களும் வசூலிக்கப்படும். அடுத்த முறை விற்பனையின் போது, சமையல் எரிவாயு நிரப்புவதற்கான கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தை விலையில் விற்பனை செய்யப்படுவதால் இதன் விலை ரூ.1,600 முதல் ரூ. 1,700 வரை இருக்கும் எனத் தெரிகிறது. எந்தெந்த மாநகரங்கள்: தில்லி, கொல்கத்தா, மும்பை, ஐதராபாத், விஜயவாடா, விசாகபட்டினம், ராய்பூர், சண்டிகர், சில்வாசா, சூரத், வடோதரா, ராஜ்கோட், பவநகர், அகமதாபாத், அம்பாலா, பரிதாபாத், குர்கான், ஜம்மு, கொச்சி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், நாக்பூர், நவிமும்பை, புணே, போபால், இந்தூர், ஜபல்பூர், புவனேஷ்வரம், கட்டக், அமிர்தசரஸ், ஜலந்தார், லூதியானா, பட்டியாலா, பிகேனர், ஜெய்பூர், ஜோத்பூர், உதய்பூர், பீடப்பள்ளி, ராமகுடம், வாரங்கல், டேராடூன், ஹரித்துவார், அலகாபாத், பான்சி, பைசாபாத், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கோவா, மீரட் ஆகிய இடங்களில் இந்தத் திட்டம் அமலாக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்குகள்: பெட்ரோல் பங்குகளிலும் இந்தத் திட்டத்தை தொடங்குவதற்கு மத்திய அரசின் பெட்ரோலியத் துறை முடிவு செய்துள்ளது. குறிப்பாக, இந்திய எண்ணெய் கழகம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 பொதுத்துறை கம்பெனிகள் நேரடியாக நடத்தி வரும் பெட்ரோல் பங்க்களில் மட்டுமே 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் |
No comments:
Post a Comment