Friday, 20 December 2013

சங்கராச்சாரியார் வழக்கு - ஒரு மீள்பார்வை!



சங்கராச்சாரியார் வழக்கு - ஒரு மீள்பார்வை!

புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றம், சங்கரராமன் கொலை வழக்கில்
குற்றம் சாட்டப்பட்டிருந்த காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சாரியார்கள் 
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி, ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி உள்ளிட்ட 23 பேரையும் 
நிரபராதி என்று தீர்ப்பு வழங்கி விடுதலை செய்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு
நேற்று (நவம்பர் 27, 2013) வெளிவந்தவுடன் கடந்த 2004 நவம்பர் மாதம் 
சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டதைத் 
தொடர்ந்து எழுந்த பரபரப்புகளையும், அநாகரிகமான விமர்சனங்களையும் 
எண்ணிப் பார்க்கத் தூண்டியது.
 
சங்கராச்சாரியாருக்கு எதிராக என்னென்ன விமர்சனங்கள் எழுப்பப்பட்டன, 
எப்படிப்பட்ட கேலியும் கிண்டலும் செய்யப்பட்டன என்பதையும், திராவிடக் கொள்கையாளர்களாலும், கட்சியினராலும், ஏன் தங்களை மதச் சார்பற்றவர்கள் 
என்று கூறிக்கொள்ளும் ஊடகங்களாலும், சமுதாயப் பிரமுகர்களாலும் காஞ்சி 
சங்கர மடமும், சங்கராச்சாரியார்களும் தரம் தாழ்த்தி சித்திரிக்கப்பட்டனர் 
என்பதையும் இப்போது நினைத்தாலும் முகம் சுளிக்க வைக்கின்றன.
 
சங்கராச்சாரியார்தான் குற்றவாளி என்று விசாரிக்காமலேயே முடிவுசெய்தது போதாதென்று, ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி பற்றி இல்லாததும் பொல்லாததுமாக 
எத்தனை எத்தனையோ அபவாதங்களை வேறு எழுப்பினார்கள். இதில் இறை 
நம்பிக்கை இல்லாத திராவிடக் கட்சிகளின் பங்களிப்புக்கு எள்ளளவும் 
குறைவில்லாதது, நமது ஊடகங்களின் பங்களிப்பு. இதனால் மனம் புண்பட்ட லட்சக்கணக்கான காஞ்சி மடத்தின் பக்தர்களும், ஆன்மிக நாட்டமுள்ளவர்களும் 
வெளியில் சொல்ல முடியாமல் மனதுக்குள் விம்மி விம்மி அழுததும், ஆறுதல் 
சொல்ல ஆளில்லாமல் மெüனமாக அதையெல்லாம் சகித்ததும் எளிதில் 
மறந்துவிடக் கூடியவையா?
 
காஞ்சி சங்கரமடமும், சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதியும் பல்வேறு 
விதமான விமர்சனங்களுக்கும், கண்டனங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் 
உள்ளானபோது, இந்து மதத்தின் அடித்தளத்தை உடைத்துவிட வேண்டும் 
என்று சில நலம் விரும்பிகள் முனைந்தபோது, "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' 
நாளிதழ் மட்டும்தான் உண்மையின் பக்கம் நின்றது. ஆதாரமில்லாமல், 
காழ்ப்புணர்ச்சியால் இறையுணர்வின், ஆன்மிகத்தின் எதிரிகள் ஒன்றுபட்டு சங்கர மடத்தையும், சங்கராச்சாரியாரையும் பொய்யான குற்றச்சாட்டை ஆதாரமாகக் 
கொண்டு பழிவாங்க முற்பட்டபோது, உண்மை என்று தான் நம்பிய கொள்கைக்காகத் துணிந்து போராடியதும் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ் மட்டுமே!
 
மடமும் சங்கராச்சாரியார்களும் எந்தவித ஆதாரமுமில்லாமல் 
காயப்படுத்தப்படுகிறார்கள், போதிய சாட்சியமில்லாமல் அவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது என்பதை நாங்கள் மட்டுமே உறுதியாகச் சொன்னோம். 
இப்போது, போதிய ஆதாரங்களோ, சாட்சிகளோ இல்லாமல் வழக்கு 
தொடரப்பட்டிருக்கிறது என்று புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் 
தீர்ப்பளித்திருப்பதை, சங்கராச்சாரியார் கைதான போதே "தி நியூ இந்தியன் 
எக்ஸ்பிரஸ்' தெரிவித்திருக்கிறது.
 
"வழக்கு செத்துவிட்டது. எப்போது, யார் இறுதிச்சடங்கு செய்வது?' என்று 
தலைப்பிட்டு சங்கரராமன் கொலை வழக்கு பற்றிய ஐந்து தொடர் கட்டுரைகள் 
"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் வெளியானது. சங்கராச்சாரியார் 
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்ட தீபாவளி தினத்திலிருந்து 12-ஆவது 
நாளான நவம்பர் 24, 2004 அன்று எழுதப்பட்ட அந்தக் கட்டுரைத் தொடரின் முதல் கட்டுரையிலேயே இந்த வழக்கு எந்தவித ஆதாரமோ, சாட்சியமோ இல்லாமல் தொடுக்கப்படுகிறது என்பதை விளக்கமாவே எழுதி இருந்தேன்.
 
""சங்கராச்சாரியார் மீது தொடுக்கப்பட்ட இந்த வழக்கு பலமில்லாதது என்பது 
மட்டுமல்ல, ஆரம்பம் முதலே அடிப்படை ஆதாரமும் இல்லாதது. அது மட்டுமல்ல, இட்டுக்கட்டப்பட்டதும் கூட. ஆமாம், சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதியைக் குற்றவாளியாக்க வேண்டும் என்பதற்காகவே புனையப்பட்ட வழக்கு இது'' என்று தொடங்கியது அந்தக் கட்டுரை.
 
""காவல்துறையினர் தாங்கள் அடையாளம் கண்ட சங்கராச்சாரியார்தான் 
குற்றவாளி என்று நிரூபிக்க முடியாமல் ஆதாரங்களைத் தேடி அலைகிறார்கள். 
ஆதாரமும் சாட்சியங்களும் கிடைக்கவில்லை என்பதற்காக விட்டுவிடவும் 
முடியவில்லை. சாட்சியங்களை இட்டுக்கட்டி எப்படியாவது வழக்கை ஜோடித்துவிட 
எல்லா முயற்சிகளும் செய்கிறார்கள். ஆனால், வழக்கு ஆரம்பத்திலேயே 
தோற்றுவிட்டது. காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு 
விசாரணைக்கு வந்தபோதே, காக்கியின் சாயம் வெளுத்துவிட்டது. எந்த இரண்டு குற்றவாளிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சங்கராச்சாரியாரை சங்கரராமன் கொலையில் முதல் குற்றவாளி என்று காவல்துறை தங்களது வழக்கை ஜோடித்திருந்ததோ, அந்த இருவருமே, நாங்கள் காவல்துறையால் வற்புறுத்தப்பட்டதால் தரப்பட்ட வாக்குமூலம் இது என்று சொன்னபோதே, வழக்கு தோற்றுவிட்டது'' 
என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
 
இப்போது சங்கரராமன் கொலை வழக்கிலான தீர்ப்பு அதையேதான் கூறுகிறது. 
"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் நான் எழுதிய அந்தக் கட்டுரைத் 
தொடரில் ஒன்று - "அபிமன்யு போல நிராதரவாக நிற்கும் சங்கராச்சாரியார்!'. அந்தக் 
கட்டுரையில், தன்மீது அபாண்டமாக சுமத்தப்பட்டிருக்கும், கொலைப் பழியால் திகைத்துப்போய் செய்வதறியாமல் நிற்கும் சங்கராச்சாரியாரை, இறை 
மறுப்பாளர்களும், இந்துமத வெறுப்பாளர்களும், திராவிடக் கட்சியினரும், போலி மதச் சார்பின்மையைக் கொள்கையாகக் கொண்ட சமூக சிந்தனையாளர்களும், அரசியல் கட்சிகளும் வல்லூறுகளைப் போலக் கொத்திக் குதறக் காத்திருக்கிறார்கள். காவல்துறையினரால் கட்டவிழ்த்து விடப்படும் புனையப்பட்ட செய்திகளையும், அபாண்டமான குற்றச்சாட்டுகளையும் நமது ஊடகங்களும், திராவிட இயக்க பிரச்சார இயந்திரமும் சங்கராச்சாரியாரைக் களங்கப்படுத்தவும், அசிங்கப்படுத்தவும் முனைந்து 
செயல்படுகின்றன. வழக்கால் ஏற்படும் பாதிப்பை விட இதுபோன்ற ஆதாரமற்ற 
தவறான பிரசாரங்களால் ஏற்படுத்தப்படும் கருத்துருக்கள்தான் சங்கராச்சாரியாருக்கு 
அதிக களங்கம் ஏற்படுத்துகின்றன'' என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
"ஏதோ சங்கராச்சாரியார் ஒரு மிக மோசமான கிரிமினல், தரம் கெட்டவர் என்பது
போன்ற கருத்தை நீதிமன்றத்திற்கு ஏற்படுத்த, மிகவும் மோசமான குற்றங்களில் 
ஈடுபடும் கிரிமினல்களின் வாக்குமூலங்களை வலுக்கட்டாயமாகக் காவல்துறை பெறுகிறது' என்று "இந்த வழக்கை மறு விசாரணை செய்யாமல், நீதி கிடைக்காது' 
என்கிற கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
 
டிசம்பர், 3 2004-இல் எழுதியிருந்த கட்டுரையில், எப்படி இந்த வழக்கு ஒரு கொலை குற்றத்தின் புலன் விசாரனை என்கிற நிலையிலிருந்து விலகி, 
சங்கராச்சாரியாரைத் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்த்துவதையும், காஞ்சி சங்கர மடத்தின் மரியாதையைக் குலைப்பதையும்தான் குறிக்கோளாக கொண்டிருக்கிறது'' 
என்று எழுதி இருந்தேன். ""தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி, எதிர்பாராமல் ஏற்பட்டிருக்கும் தாக்குதல்களால் விக்கித்து வாயடைத்துப்போய் நிற்கும் காஞ்சி சங்கர மடத்திற்கு 
எதிராக நடக்கும் யுத்தமாகக் காவல்துறை இந்த வழக்கை மாற்றிவிட்டிருக்கும் 
நிலையில், பல மிகப்பெரிய தவறுகளுக்கு இது வழிகோலியிருக்கிறது. சமுதாயத்தில் ஆன்மிக மடங்களின் மரியாதை சீர்குலைக்கப்படுகிறது. மத நம்பிக்கையே தகர்க்கப்படுகிறது. குற்றப் புலனாய்வாக இல்லாமல், மத நம்பிக்கையையும், 
காஞ்சி சங்கர மடத்தின் புகழையும் தகர்க்கும் செயலாக இது மாறிவிட்டிருக்கிறது'' 
என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.
 
""மதச்சார்பின்மை பேசும் ஊடகங்கள் நீதிபதி ரெட்டியின் எச்சரிக்கைக்கு 
செவிசாய்க்குமா?'' என்பது 2005 ஜனவரி 14ஆம் தேதி நான் எழுதிய கடைசி 
கட்டுரையின் தலைப்பு. கைது செய்யப்பட்டபோது காஞ்சி சங்கராச்சாரியார் ஒரு தொழிற்சாலையில் விருந்தினர் விடுதியில் தங்கி இருந்ததால், அந்தத் 
தொழிற்சாலையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு கொலையுடன் 
அவரைத் தொடர்புபடுத்தி யாரோ தொடுத்த வழக்கில் நீதிபதி நரசிம்ம ரெட்டி 
ஆந்திர உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பளித்தார். அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து 
அவர் அளித்த தீர்ப்பில், 2,500 ஆண்டு பாரம்பரியமிக்க ஒரு ஆன்மிக அமைப்பின் மரியாதைக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில், ஊடகங்களில் பரபரப்பு ஏற்படுத்துவதற்காக செய்யப்படும் நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடியிருந்தார் 
நீதிபதி ரெட்டி.
 
""தனிநபர்கள் மட்டுமல்ல, சில இயக்கங்களும், ஏன் அரசு இயந்திரமே கூட நமது பாரம்பரியப் பெருமைகளைச் சிறுமைப்படுத்தவும், புகழ்பெற்ற நிறுவனங்களைக் களங்கப்படுத்தவும், குற்றப்படுத்தவும் முயற்சிப்பது வேதனைக்குரியது. தேசத்தையே நிலைகுலைய வைத்திருக்கும் காஞ்சி சங்கர மடத்திற்கு எதிரான பிரசாரங்களை 
எப்படி மனித உரிமை, நீதி, நேர்மை, சுய மரியாதை என்றெல்லாம் பேசும் நபர்களும், அமைப்புகளும் பார்த்துக் கொண்டு மௌனம் காக்கின்றன என்பது வியப்பாக 
இருக்கிறது. அன்று கெüரவர்கள் சபையில் பாஞ்சாலிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எள்ளளவும் குறைவானதல்ல இப்போது காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர 
சரஸ்வதி மீது கட்டவிழ்த்து விடப்படும் பிரசாரங்களும், ஆதாரமில்லாத 
அபவாதங்களும்'' என்றும் நீதிபதி ரெட்டி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
 
சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதியும், காஞ்சி சங்கர மடமும் உண்மையை எடுத்துரைக்க வாய்ப்புக்கூட அளிக்கப்படாத அந்த தர்மசங்கடமான நிலையில், உண்மையின் பக்கம் நின்று குரலெழுப்பிய ஒரே ஊடகம் "தி நியூ இந்தியன் 
எக்ஸ்பிரஸ்' மட்டுமே!
 
அதற்கு எனக்குத் தரப்பட்ட வெகுமதிதான் வாரண்டு அனுப்பப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டது. "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகை அலுவலகம் சோதனையிடப்பட்டது. இந்தக் கட்டுரைகளின் தமிழாக்கத்தை வெளியிட்ட 
"துக்ளக்' இதழும் சோதனையிடப்பட்டது. வழக்கம்போல, நீதிமன்றம் தலையிட்டுத் 
தடை வழங்கியதால் எங்கள் தலை தப்பியது.
 
என்னை விசாரணை செய்த விசாரணை அதிகாரியிடம், "எந்த அடிப்படையில் 
நீங்கள் சங்கராச்சாரியாரைக் குற்றவாளி என்று கருதுகிறீர்கள்?' என்று நான் 
கேட்டேன்.அதற்கு அவர் அளித்த பதில்-- ""கொலை செய்யப்பட்டவர், 
சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதிக்குத் தொடர்ந்து அவரை விமர்சித்தும் 
குற்றம் சாட்டியும் கேவலப்படுத்தும் விதத்திலும் கடிதங்கள் எழுதியவண்ணம் இருந்திருக்கிறார். அதனால், அவரை ஜயேந்திர சரஸ்வதி கொலை செய்வதற்கான 
காரணம் இருக்கிறது!''
 
""இந்தக் காரணத்தால் சங்கரராமனை சங்கராச்சாரியார் கொலை செய்திருக்கக் 
கூடும் என்று நீங்கள் கருதுவதானால், அதற்கு முன்னால், சங்கராச்சாரியாருக்கு 
வேண்டாத வேறு யாராவது இதையே காரணமாக வைத்து சங்கரராமனைக் 
கொலை செய்து அந்தப் பழியை சங்கராச்சாரியார்மீது சுமத்திவிடவில்லை 
என்பதை நீங்கள் உறுதிப்படுத்தி இருக்க வேண்டும். செய்தீர்களா?'' என்று நான் 
கேட்டேன்.அவரிடம் பதில் இல்லை. மெüனமாக இருந்தார். நான் மீண்டும் அதே 
கேள்வியை கேட்டேன். முகத்தைத் திருப்பிக் கொண்டு விட்டார்.
 
கிரிமினல் குற்ற விசாரணையில், விசாரணை அதிகாரி ஒரு முடிவுக்கு 
வருவதற்கு முன்னால், அது தொடர்பான எல்லா சாத்தியக்கூறுகளையும் 
ஆராய்ந்து, விசாரித்து, அவை எதுவுமே சாத்தியமில்லை என்பதை உறுதிப்படுத்தி 
இருக்க வேண்டும் என்பதை அவரிடம் விளக்கினேன். அப்படிச் செய்யாமல் 
போனால், வழக்கு தோற்றுவிடும் என்று நான் சொன்னதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவே தயாராக இருக்கவில்லை.
 
காஞ்சி சங்கராச்சாரியாரை எப்படியாவது குற்றவாளியாக்கி சிக்க வைக்க 
வேண்டும் என்பதில் மட்டும்தான் குறியாக இருந்தார்களே தவிர, அதற்குப் 
போதிய ஆதாரங்களும் சாட்சியங்களும் இருக்கின்றனவா என்பதை எல்லாம் உறுதிப்படுத்தும் மனநிலையில் காவல்துறை இருக்கவில்லை. அதன் 
விளைவுதான் இந்த மிகப் பெரிய சமுதாய, பண்பாட்டு இழப்பு.
 
ஒரு மேன்மையான, பாரம்பரியமிக்க ஆன்மிக நிறுவனம் மட்டுமல்ல, அதன் லட்சக்கணக்கான வன்முறையை விரும்பாத, சமாதானத்தை நேசிக்கும் 
விசுவாசிகளும் காயப்பட்டிருக்கிறார்கள். இந்து மதம் கேவலப்படுத்தப்பட்டது. 
நமது கலாசாரமும், மத நம்பிக்கையும், தரம்தாழ்த்தப்பட்டன. ஆன்மிக 
வழிகாட்டிகள் ஆஷாடபூதிகளாக சித்திரிக்கப்பட்டனர். காரணமில்லாமல் 
அவர்கள் மீது சேற்றை வாரி இறைத்தனர். இதன் பின்னணியில் அரசியல் 
மட்டுமல்ல, நமது பண்பாட்டையும், வாழ்க்கை முறையையும், ஆன்மிக 
சிந்தனையையும் சிதைக்கும் சதியும் இருந்தது.
 
சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி 
உள்ளிட்ட 23 குற்றவாளிகளும், போதிய ஆதாரமோ சாட்சியங்களோ இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார்கள் என்கிறது தீர்ப்பு. குற்றவாளி யார், அவர் ஏன் தண்டிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பப்படும்.
 
நீதிமன்றத்தின் முன்னால் இன்னார் குற்றவாளி என்று காவல்துறை சிலரை 
குற்றம்சாட்டி நிறுத்துகிறது. அவர்களைக் குற்றவாளிகளாக்கவோ தண்டிக்கவோ 
போதிய சாட்சியங்கள் இல்லை. உண்மையான குற்றவாளி கிடைக்கவில்லை, 
அதனால் உங்களை தண்டிக்கிறேன் என்று நீதிமன்றம் இவர்களை தண்டிக்க 
முடியாது. விடுதலைதான் செய்ய முடியும்.
 
அப்படியானால் உண்மையான குற்றவாளி யார்? விசாரணை அதிகாரியிடம் 
2004 ஆம் ஆண்டு நான் எழுப்பிய அதே கேள்வியை காவல்துறை எழுப்பினால் 
ஒருவேளை அதற்கு விடை கிடைக்கக் கூடும். ஆனால், காலம் கடந்துவிட்ட 
பிறகு ஆதாரங்களையும், சாட்சிகளையும் தேடிக் கண்டுபிடிப்பது அவ்வளவு 
எளிதல்ல. அப்போதே செய்திருக்க வேண்டும். ஏன் செய்யவில்லை?
 
ஆரம்பத்திலிருந்தே, காவல்துறைக்கு சங்கரராமனைக் கொலை செய்த உண்மைக் குற்றவாளியைக் கைது செய்வதில் இருந்த அக்கறையைவிட, காஞ்சி 
சங்கராச்சாரியார் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதியின் மீது பழி சுமத்தி, அவரைக் 
குற்றவாளியாக்கி, காஞ்சி சங்கரமடத்தின் மரியாதையையும், இந்து மதத்தின் 
மீதான நம்பிக்கையையும் குலைப்பதில்தான் ஆர்வம் இருந்தது என்பதுதான் 
உண்மை. அதைத்தான் புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு 
உறுதிப்படுத்தி இருக்கிறது.
 
சங்கரராமன் கொலை வழக்குத் தீர்ப்பின் பின்னணியில் காவல்துறையினர், 
அரசு, ஊடகங்கள், சமுதாய சிந்தனையாளர்கள் என்று ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சியைத் தொட்டு பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள். சங்கராச்சாரியாருக்கு 
எதிராக, காவல் துறையினருக்கு ஆதரவாக, சங்கர மடத்திற்கு எதிராக புழுதிவாரி இறைத்துக் கேவலப்படுத்தும் இயக்கமே நடத்தினார்களே, அவர்கள் தங்களது 
செயல்களை, இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் சற்று மீள்பார்வை செய்வார்களா?







                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator