Tuesday, 17 December 2013

இந்திய அரசு கடைபிடிக்கும் புதிய காலனிய தாராளமயக் கொள்கைகளே ஊழலுக்கு அடிப்படை

இந்திய அரசு கடைபிடிக்கும் புதிய காலனிய தாராளமயக் கொள்கைகளே ஊழலுக்கு அடிப்படை

1947-ல் அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாடாக மாற்றியமைக்கப்பட்ட காலந்தொட்டே இந்தியாவில் ஊழல் நடந்துக்கொண்டுதான் வருகிறது. அப்போதிருந்தே ஏகாதிபத்திய பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளும் அரசு இயந்திரத்தை தம் வசப்படுத்திஆதிக்கம் செலுத்துவதற்காக நேரடி ஊழலில் ஈடுப்பட்டே வந்துள்ளனர். எனினும் கடந்த 20 ஆண்டுகளாக இந்திய அரசு கடைபிடித்து வரும் புதிய காலனிய உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகள்தான் நாட்டில் இன்று வரலாறு காணாத ஊழல் நடைபெறுவதற்குக் காரணமாக உள்ளது. அத்துடன் அமெரிக்க - இந்திய இருதரப்பு ஒப்பந்தங்கள் இந்திய நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புதிய காலனியாக மாற்றியமைத்து வருகிறது. இவ்வாறு இரண்டு வழிகளிலும் அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

94-ஆம் ஆண்டுமுதல் ஐ.எம்.எப், உலகவங்கி, உலக வர்த்தக கழகம் போன்ற ஏகாதிபத்தியவாதிகளின் புதிய காலனியாதிக்க அமைப்புகளின் ஆணைகளுக்கு அடிப்பணிந்து இந்திய அரசு உலகமய, தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்திவருகிறது. பல்வேறு ஏகாதிபத்திய பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டுத் தரகுமுதலாளிகளும் இந்திய அரசின் மீது ஆதிக்கம் செலுத்தவும், இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும், மலிவான மனித உழைப்பையும், கொள்ளையிட இக்கொள்கைகளை பயன்படுத்திக் கொண்டு போட்டிப் போடுகின்றனர். தங்களுக்கு சாதகமாக முடிவெடுக்க அவர்கள் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பெருமளவில் இலஞ்சம் கொடுக்கின்றனர். 

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுகளில் ரூ.1,76,000 கோடி; காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் ரூ.70,000 கோடி; நிலக்கரி பேர ஊழலில் மட்டுமே ரூ.26 லட்சம் கோடி (இன்னமும் விசாரிக்கவில்லை); கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப்படுகை இயற்கை எரிவாயு ஊழல் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல்; சுரங்கத் தொழில்களில் குறிப்பாக இரும்பு, எஃகு வெட்டி எடுப்பதில் பல லட்சம் கோடிகள் என ஊழலின் அளவும், எல்லையும் விரிவடைந்து கொண்டே செல்கின்றன.

2ஜி அலைக்கற்றை விநியோகத்தில் டாட்டா, அம்பானி, பிர்லா போன்ற உள்நாட்டுத் தரகு முதலாளிகளும், ஸ்வான் – டெலினார், டொக்கோம்மோ போன்ற நிறுவனங்களைச் சார்ந்த வெளிநாட்டு முதலாளிகளும் ராசா கனிமொழி, கருணாநிதி மற்றும் சிதம்பரம் போன்ற அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இலஞ்சம் கொடுத்து லாபம் அடைந்தது போல; கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் கிடைக்கும் எண்ணெய் எரிவாயுவை கொள்ளையடிப்பதற்கு முகேஷ் அம்பானி, சோனியா-மன்மோகன் கும்பலுக்கு இலஞ்சம் கொடுத்ததுபோல; கர்நாடகாவில் ரெட்டி சகோதர்கள், ஒடிசாவில் போஸ்கோ, வேதாந்தா போன்ற பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகள் பா.ஜ.க மந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இலஞ்சம் கொடுத்து பல இலட்சம் கோடிகள் மதிப்புள்ள இரும்புத் தாதுவை சூறையாடுவதுபோல இலஞ்ச ஊழல்கள் மூலம் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் இந்திய நாட்டின் இயற்கைவளங்கள், கனிம வளங்கள் போன்றவைகளை மலிவான விலையில் கொள்ளையடிக்கும், மனித உழைப்பை குறைந்த கூலியில் கொள்ளையடிக்கும் முதலாளித்துவ ஊழல்களே இந்த ஊழல்கள் அனைத்தும்.

மேற்கண்ட 2ஜி அலைக்கற்றை ஊழல் உட்பட பல்வேறு வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு ராசா, கனிமொழி, கல்மாடி போன்ற அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், தனியார் நிறுவனங்களின் மேலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் மேற்கண்ட மாபெரும் ஊழல்களுக்கு ஊற்றுக்கண்ணாக திகழுகின்ற டாட்டா, பிர்லா, அம்பானி, வேதாந்தா போன்ற உள்நாட்டுத் தரகுப் பெருமுதலாளிகளும், டொகோமோ, டெலினார் மற்றும் போஸ்கோ போன்ற பன்னாட்டு முதலாளிகளும் கைது செய்யப்படவில்லை. அவர்களைக் குற்றவாளிகளாகக் கூட அன்னா அசாரே கும்பலோ, அரசாங்கமோ கருதவில்லை. இவர்கள் பார்வையில் இலஞ்சம் வாங்கிய அரசியல்வாதிகளும் அமைச்சர்களும் மட்டுமே குற்றவாளிகள். இலஞ்சம் கொடுக்கின்ற முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இலஞ்சம் வாங்கிய அமைச்சர்கள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதால், அவர்களை மாற்றுவதால் ஊழலை ஒழிக்கவே முடியாது. மாறாக, இத்தகைய சட்டங்கள் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கு அடிப்பணிய மறுக்கும் அதிகாரிகளையும், அமைச்சர்களையும் மிரட்டி பணிய வைக்கவே பயன்படும். இவ்வாறு அன்னா அசாரே கும்பலின் வலிமையான ஜன்லோக்பால் சட்டம் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகள் ஆதிக்கம் செய்வதற்கான ஒரு கருவியாகவே பயன்படும்.


                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator