இடம் திருப்பூர் ரயில்வே மேம்பாலம், இருட்டு விழுந்து விட்ட மாலை நேரம். மேம்பாலத்தின் ஏற்றம் துவங்கி சற்று ஏறியும் விட்ட மேட்டில் இந்த சகோதரர் கொஞ்சம் கலங்கிய முகத்துடன் தன்னுடைய மூன்று சக்கர வண்டியை மேட்டில் தாங்கிப் பிடித்துக் கொண்டு நிற்பதாய்த் தோன்றியது. என்னுடைய வண்டியை ஓரம் கட்டி விட்டு என்ன பிரச்சினை என்று விசாரித்தேன்.
"வண்டியின் சங்கிலி கழன்று விட்டது வண்டி ஓட்ட முடியாமல் சரிவில் இழுக்கிறது, கால் மணி நேரமாக சிரமப்பட்டு நிற்கிறேன், நீங்களாவது வந்தீங்களே கொஞ்சம் சங்கிலியை மாட்டித் தந்தா நல்லா இருக்கும்" என்றார்.
சங்கிலியை மாட்டிக் கொடுத்து விட்டு நிமிர்ந்து பார்த்தால் அது ஒரு பழைய டிவிஎஸ் 50 மூன்று சக்கர வண்டியாக மாற்றி ஓட்டிக்கொண்டிருக்கிறார், இருக்கைக்கு நுரைபஞ்சும், உறையும் கூட மாற்ற முடியாமல் ஒட்டப் பயன்படும் செல்லொ டேப்புகள் கொண்டு ஒட்டியிருக்கிறார். பின்னால் வைத்துக் கட்டப்பட்ட பிளாஸ்டிக் கூடையில் சாப்பாட்டுப் பொட்டலங்கள். சரி வறுமையிலுள்ள உணவு விற்கும் சிறு வியாபாரி என்று நினைத்துக் கொண்டு இந்த மாதிரியான இரண்டும் கெட்டான் நேரத்தில் வியாபரத்திற்கு கிளம்பினால் உங்களுக்கு எப்படி வருமானம் கிடைக்கும் என்று நான் கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் சவுக்கால் அடித்தது.
தம்பி நான் இதை விக்கிறதுக்காகக் கொண்டு வரல. எனக்கு கைல தொழிலும், குடும்பமும் இருக்கு. ஆனா குடும்பமும் இல்லாம, இருக்க வீடும் இல்லாம அதனாலயே வருமானமும் தேடிக்க முடியாம ரோட்டில கிடந்து சிரமப்படற பல பேர் நிறைய நாள் சோத்துக்கு என்ன பண்ணுவாங்கன்னு யோசிச்சுப் பாத்து அவங்களுக்கு என்னால முடிஞ்சது இந்தக் கூடை நிரம்பற அளவுக்கு சோறாக்கி அவங்க இருக்கிற இடம் தேடிப் போய் அவங்க பசியாத்திக்கிட்டு இருக்கேன்.
இதைக் கேட்ட பிறகு அவரோடு என்னை ஒப்பிட்டுப் பார்க்கக் கூட என் மனசாட்சி ஒத்துக் கொள்ளவில்லை.
அவரோடு பேசிய அந்த நிமிடம் மண்ணையும் நீரையும் கொன்று அதில் காசு வளர்க்கும் இந்தத் திருப்பூரில் கூட மனிதம் வளர்க்கும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்களா என்ற கேள்வியையும், நான் இருக்கும் போது கூட என் ஊரில் ஏன் மழை பெய்கிறது என்ற கேள்விக்கான விடையையும் அது தந்தது.
அவரைப் படம் எடுத்துக் கொள்ள விரும்பி பல முறை முயன்ற பிறகு இந்தப் படம் கிடைத்தது. வழக்கம் போல எங்களைக் கடந்து விரைந்து, விரைந்து சென்று கொண்டிருந்த வாகனங்களின் ஒளிச்சிதறலால் இவரை இந்த அளவிற்கு மட்டுமே என் செல்பேசியால் படம் எடுக்க முடிந்தது……
எதுவுமே பேசத் தோன்றாமல் கொஞ்ச நேரம் அவருடன் நின்று கொண்டிருக்க மட்டுமே முடிந்தது கண்ணில் கொஞ்சம் நீருடன்…….
) hari krishnamurthy K. HARIHARAN)"

No comments:
Post a Comment