Friday, 13 December 2013

ஏற்றத் தாழ்வு

Ramanathan Panchapakesan
Ramanathan Panchapakesan 13 December 15:00
காலையில் தாமதமா வந்ததும் மெயின் கதவை மூடிருவிங்க. பிரேயர் முடிஞ்சு எல்லோரும் போனதும் கையில் இரண்டு அடி அடித்து, "இனிமே நான் தாமதமா வரமாட்டேன்" ன்னு டைரி ல எழுதி நீங்க கையெழுத்து போட்ட உடனே வகுப்புக்கு போக சொன்னிங்களே. எதுக்கு சிஸ்டர் அப்படி சொன்னிங்க? கடைசி வரை நான் ஏன் தாமதமாய் வந்தேன்னு கேட்கவே இல்லை. கேட்டாலும் காரணத்தை ஏற்றுக் கொண்டதில்லை.

எங்க அப்பா ஸ்கூல் பீஸ் கட்ட வந்த போதெல்லாம் ஒரு நாள் கூட நீங்க அவங்கள உட்காருங்க ன்னு சொன்னதில்லையாமே? ஏன் அப்படி?

பள்ளிக்கூடத்தில் பாட்டு , நடனம் , ஓவியம் என அத்தனைக்கும் நீங்களாகவே ஒரு கூட்டத்தை ஏற்படுத்தி அதில் இருப்பவர்களை மட்டுமே தொடர்ந்து கலந்துக் கொள்ளச் செய்தீர்கள். ஏன் எல்லா மாணவிகளுக்கும் சமமாக வாய்ப்பளிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லை? படிக்காத பிள்ளை என்றால் எந்த போட்டியிலும் கலந்துக் கொள்ளக்கூடாதா?

தலையில் கட்டியிருக்கும் ரிப்பனின் நிறம் மங்கியிருந்தாலும் பிரேயரில் அத்தனை பேர் முன்னாலும் இது என்ன நீல கலர் ரிப்பன் கட்டச் சொன்னால் வெள்ளை நிற ரிப்பன் கட்டி வந்திருக்க என்று கேலி செய்து அவமான படுத்திய ஆசிரியரின் மினுக்கலான சிகை அலங்காரத்தை பற்றியெல்லாம் நீங்கள் எந்த கேள்வியும் கேட்டதே இல்லையே? புது ரிப்பன் வாங்க வசதி இருந்திருந்தால் நான் ஏன் பழசையே கட்டியிருக்கப் போறேன்?

தமிழ் வழி, ஆங்கில வழி என்று இரண்டுமே இருந்தப் பள்ளியில் ஏன் எப்போதும் ஆங்கில வழியில் பயிலும் பிள்ளைகளுக்கே முன்னுரிமையும் நல்ல வகுப்பறைகளும் தந்தீர்கள். நாங்கள் மட்டும் எப்போதும் தீண்டத் தகாதவர் போல் ஏதோ ஒரு பழைய கட்டிடத்தின் முடுக்கில் மாட்டிக் கொண்டிருந்தோம்.

அரசு பள்ளியை விட உங்கள் பள்ளிச் சிறந்தது ஊரில் பெயர் போனது என்ற நம்பிக்கையில் தான் தங்கள் தேவைகளை எல்லாம் குறைத்துக் கொண்டு பள்ளிக் கட்டணம் செலுத்தி எங்களை உங்கள் பள்ளியில் படிக்க வைத்தனர். நாங்களும் நன்றாகத் தான் படித்தோம். என்ன எங்களிடம் பணம் இல்லை என்பதால் எங்களைக் கண்டாலே உங்களுக்கு பிடிப்பதில்லை. எங்கள் பெற்றோரை நீங்கள் மதித்ததும் இல்லை. இவ்வளவு பேசுவதற்கு அரசு பள்ளிக்கு போக வேண்டி தானே ன்னு நீங்க கேட்கலாம். உங்கள் பள்ளியில் தான் தரமான கல்வி இருக்கிறது என்ற எங்கள் பெற்றோரின் அறியாமையே உங்களின் ஆயுதம். 

பெரிய இடத்து மாணவிகள் என்றால் அடடா!! தனியொரு கவனிப்பு, தனியொரு அக்கறை. செய்யும் தவறுகள் கூட மறைக்கப் படும். ஒடுக்கப்பட்ட எங்களுக்கு மிஞ்சியதெல்லாம் அவமானமும் செய்யாத தவறுக்கு தண்டனையுமே. 

இப்படியெல்லாம் அன்று என் தலைமை ஆசிரியர் முன் நின்று குமுறுவதற்கு எனக்கு தைரியமில்லை. வயதுமில்லை. பள்ளிகூடத்தில் சீருடை என்ற ஒன்று இருப்பதின் அடிப்படையே மாணவ மாணவிகளுக்கிடையே ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாதென்று தான். ஆனால் நாங்கள் ஏற்றத் தாழ்வை முதன் முதலில் பார்த்ததே பள்ளியில் தான். 

வாழ்க்கையின் மிக அழகிய பருவம் பள்ளிப் பருவமே. அங்கேனும் பிள்ளைகள் மனதில் மகிழ்ச்சியை மட்டுமே விதையுங்கள். வெளிவந்ததும் இவ்வுலகத்தோடு அவர்கள் நிறைய போராட வேண்டும்.

Fun & Info @ Keralites.net

    
hari krishnamurthy K. HARIHARAN)"

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator