சென்னையை அடுத்த வண்டலூரில் சனிக்கிழமை நடைபெறும் பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். இதையொட்டி பொதுக் கூட்டம் நடைபெறும் வண்டலூர் விஜிபி மைதானத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விமானம் நிலையம் உள்பட சென்னை முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனி விமானம் மூலம் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நரேந்திர மோடி சென்னை வருகிறார். அவரை, மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்தில் பாஜக தேசியப் பொதுச்செயலாளர் முரளிதரராவ், மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல. கணேசன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். விமான நிலையத்திலிருந்து நேராக வண்டலூர் விஜிபி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத் திடலுக்குச் செல்கிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஹோட்டலுக்குச் செல்லும் மோடி, சனிக்கிழமை இரவு அங்கு தங்குகிறார். பட்டமளிப்பு விழா: ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். விழா முடிந்தவுடன் அங்கிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லும் அவர், தனி விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சிக்குப் புறப்பட்டுச் செல்கிறார் என பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர். சனிக்கிழமை (பிப்ரவரி 8) இரவு சென்னையில் தங்கும் மோடி, தமிழகத்தில் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது. கூட்டணி கட்சித் தலைவர்களும் மோடியைச் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் பாஜக தலைவர்கள் தெரிவிக்கின்றனர். பிரமாண்ட மேடை: வண்டலூர் வி.ஜி.பி. திடலில் மோடி பேசுவதற்காக நாடாளுமன்ற கட்டட வடிவில் 160 அடி நீளம் 40 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
மேடை நடுவே 30 அடி அகலம் 12 அடி உயரம் கொண்ட பிரமாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்படுகிறது. மைதானம் முழுவதும் 10 எல்.இ.டி. திரைகள் அமைக்கப்படுகின்றன. பொதுக்கூட்ட மைதான முகப்பு செங்கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தலைவர்கள் படங்களுடன் அலங்கார நுழைவாயிலும் உள்ளது. திடலில் குடிநீர், கழிப்பிட வசதி, மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினருடன் 10 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தப்படுகின்றன. பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமர சுமார் 5 லட்சம் பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. 40 ஆயிரம் வாகனங்களை நிறுத்த 13 இடங்களில் வசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து வண்டலூர் வரை வழிநெடுக கொடி தோரணம், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பல கோணங்களில் மோடி படங்கள் இடம் பெற்றுள்ளன. தீவிர பாதுகாப்பு: நரேந்திரமோடியின் வருகையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவரது பொதுக் கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என காவல்துறை கருதுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை பெருநகர காவல்துறையும், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையும் செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சிறப்புப் பிரிவு போலீஸாரும் செவ்வாய்க்கிழமை சென்னை வந்தனர். தமிழக போலீஸாருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பழைய விமான நிலையத்தில் இருந்து நரேந்திரமோடி கார் மூலம் வண்டலூர் செல்கின்றார். இதனால் பாதை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த சில நாள்களாக இரவு ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். சென்னை எல்லைப்புறங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீஸார் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்துக்கிடமான நபர்களைப் பிடித்து விசாரிக்கின்றனர். இந்தப் பாதுகாப்புப் பணியில் சுமார் 3 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர். 2 கூடுதல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள், 12 துணை ஆணையர்கள் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுக் கூட்டம் நடைபெறும் இடம் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை எல்லைக்குள் இருப்பதால், அங்கு மாவட்ட காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. |
No comments:
Post a Comment