காலையில் மூன்று வகையான உணவுகள்
காலை உணவைத் தவிர்க்கக் கூடாது என்பது முதல் விதி. இரண்டாவது விதி அது சரியான உணவாக இருக்க வேண்டும் என்பதுதான். குறிப்பாக, காலையில் மூன்று வகையான உணவுகள் இடம் பெற்றால் மூளையின் ஆற்றல் அபாரமாக இருக்குமாம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சத்துணவு நிபுணர்கள் 18 வயதுக்கு உட்பட்ட 800 மாணவ, மாணவிகளின் உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தனர். மூளை சிறப்பாகச் செயல்பட வேண்டும். மாணவர்கள் உற்சாகமாகப் பாடங்களில் உள்ள பெரிய பிரச்னைகளையும் எளிதில் தீர்க்க வேண்டும். கல்வி கற்பதில் எரிச்சல் வந்துவிடக்கூடாது. இதற்கு எளிய வழி காலையில் முழுத்தானியம் + பழம் அல்லது காய்கறி + பால் சம்பந்தப்பட்ட உணவு என இந்த மூன்றும் இடம் பெற்றால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைத்து வயதினரும் மூளை ஆற்றலுடன் நாள் முழுவதும் செயல்படுவார்கள் என்பதைக் கண்டுபிடித்து, பரிசோதித்தும் வெற்றியும் பெற்றனர், ஆஸ்திரேலிய சத்துணவு நிபுணர்கள். சரி, உணவுகள்?
1. முழுத்தானிய உணவால் செய்யப்பட்ட சாண்ட்விச், பாலாடைக்கட்டி, ஆப்பிள், அல்லது
2. தக்காளித் துண்டுகள், கோதுமை சாப்பாத்தி, காய்கறி அவியல், தயிர் ஒரு கோப்பை அல்லது
3. கோதுமை ரவை, பால், பழத்துண்டுகள் என்று எளிமையாக இருந்தால் போதும். பழங்களைத் தேர்வு செய்யும்போது மட்டும் வைட்டமின் சி தாராளமாக உள்ள பழங்களையே தேர்வு செய்யவும். ஏனென்றால், வைட்டமின் சி இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் விரைவாக நடந்து மூளைக்கும் ஆக்ஸிஜன் தொடர்ந்து கிடைக்கும். ஆப்பிள் உட்பட எந்த ஒரு பழமும் காலையில் சாப்பிடவில்லை என்றால் பரவாயில்லை. தக்காளிப் பழம் ஒன்றை அவசியம் சாப்பிடவும். இதில் வைட்டமின் சி தாராளமாக இருக்கிறது. இட்லி, தோசை, சம்பா ரவை, சோளவறுவல், தவிடு நீக்காத கோதுமையில் செய்த சப்பாத்தி, கேழ்வரகு ரொட்டி, பொங்கல் போன்ற முழுத் தானிய உணவுகள் மூலம் கிடைக்கும் மாவுச்சத்தும், பால், தயிர் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்தும் முறையே மூளையையும், நரம்பு மண்டலத்தையும் அமைதிப்படுத்தி ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது. காய்கறிகளில் மிகக் குறைந்த அளவில் கிடைக்கும் வைட்டமின்களும் மூளையைத் துடிப்புடன் செயல்பட உதவுகின்றன. பழத்துண்டுகளைக் காலை உணவின் போது இறுதியில் சாப்பிடுவது என்றால் அன்னாசிப் பழத்துண்டுகள், பப்பாளித் துண்டுகள் என்று சாப்பிடலாம். இவை உடனே செரிமானம் ஆக உதவும். இல்லையேல் மிக எளிய வழி, எலுமிச்சம் பழச் சாறுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்துவது. காலை உணவில் பால் அல்லது தயிர் சேர்த்துக் கொண்டால் பழத்துண்டுகளாகச் சாப்பிடலாம்.
பழச்சாறாக அருந்தினால் பாலாடைக்கட்டி சேர்க்கலாம். அல்லது முதலில் தயிர் அல்லது பால் சாப்பிட்டுவிட்டு, இரண்டாவதாக முழுத்தானிய உணவு, மூன்றாவதாக பழம் அல்லது பழச்சாறு சாப்பிடலாம். சப்பாத்தி, ரவை முதலியவற்றில் தாராளமாக இல்லாத லைசின், இட்லியில் தாராளமாக இருக்கிறது. இதனால்தான் நீரிழிவு நோயாளியும் காலையில் இட்லி சாப்பிடுவதால் மூளை சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்.
அடுத்தடுத்து பணிகளை சுறுசுறுப்பாகச் செய்யவும், மூளையும் மனமும் துடிப்புடன் விளங்கவும் காலை உணவை சரியான உணவாகத் தேர்வு செய்து சாப்பிடுவதே நல்லது.
|
No comments:
Post a Comment