Tuesday, 18 February 2014

தர்ப்பணம், சிரார்த்தம் தகவல்கள்

தர்ப்பணம், சிரார்த்தம் தகவல்கள் 

1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.

2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.

3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.

5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.

6. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

7. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.

8. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

9. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. அகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.

10. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிரார்த்தம் செய்ய வேண்டும்.

11. மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

12. மன்வாதி யுகாதி நாட்களில் செய்யப்படும் புண்ணிய நதி நீராடல், ஜெபம், ஹோமம் ஆகியவை கூடுதல் பித்ரு புண்ணியத்தைத் தரும்.

13. தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும் ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.

14. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மஹாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

15. இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டி நாள்தான்.

16. துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத் தரும். ஆகவே அதிக புண்ணி யங்களைத் தரும் தந்தையரின் சிரார்த் தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.

17. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த் தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.

18. இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன் காற்று வடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிராத்தத்தில் தரும் உணவை சாப்பிடுவதற்காக காத்துக் கொண்டிருக்குமாம்.

19. முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் சிரார்த்தத்துக்கு பார்வணசிரார்த்தம் என்று பெயர்.

20. ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிரார்த்தம் சங்கல்ப சிரார்த்தம் எனப்படும்.

21. ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும், சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிரார்த்தம் ஆம சிரார்த்தம் எனப்படும்.

22. சிரார்த்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வது ஹிரண்ய சிராத்தம் எனப்படும்.

23. சிரார்த்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.

24. சிரார்த்தம் நடத்தப்படும் இடம், சிராத்தம் செய்யும் நேரம், சிரார்த்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிரார்த்தத்தில் உபயோகிக்கும் பொருட்கள், சிராத்தம் செய்யும் நபர் ஆகியவை சிரார்த்தத்துக்கு முக்கியமானவை. இவைகள் தூய்மையானவைகளாக இருந்தால் சிரார்த்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும்.

25. பித்ருக்களை சிரார்த்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு சிரார்த்தம் செய்து அவர்களுக்கு உணவளித்து, அவர்களை திருப்தி செய்தால் அவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள், அழியாப்புகழ், உடல் வலிமை, செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை தருகிறார்கள்.

26. நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கி த்தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.

27. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.

28. பெற்றோர்களின் வருஷ சிரார்த்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த் தத்தைச் செய்ய வேண்டும்.

29. அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்தை செய்ய வேண்டும்.

30. பெற்றோர்களின் வருஷாந்தர சிரார்த்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதி தர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.

31. தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிரார்த்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில் வருஷசிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தை செய்ய வேண்டும்.

32. தாய் தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிரார்த்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய வேண்டும். பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.

33. பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர்களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டு விட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.

34. இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர் வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள்.

35. சிரார்த்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாள னாகப் பிறப்பான் என்று புரா ணங்களில் கூறப்பட்டுள்ளது.
36. உடல் நிலை சரியில்லா தவர்கள் அருகில் யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு சிரார்த்தம் செய்ய வேண்டும்.

37. நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும், செல்வமும் நமக்கு கிடைக்கும்.

38. மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட் டாயமாகச் செய்ய வேண்டும்.

39. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம் பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத் தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

40. "மக்களுக்கு தொண்டாற்றி, சுயநலமின்றி அரிய இறைப்பணிகளைப் புரிந்தோர் மட்டுமே பித்ருலோகம் அடைகின்றனர் என்பதை கருடபுராணம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.

41. "நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மஹாளபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம்."

42. கார்த்திகை மாதம் உத்திராயண புண்ணியகாலம் சுக்ல பட்சம், பவுர்ணமி திதியில் தானம் செய்ய வேண்டும். கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவாதசி திதியில் தானங்கள் அளிக்கலாம்.

43. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.

44. பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி, தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள்அளவும் சந்தேகம் கிடையாது.

45. ஒருவர் மரண படுக்கையில் அவதிப்படும்போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரையை எருமை மாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி நீங்கும்.

46. வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மை அளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.

47. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக் கூடாது.

48. சிரார்த்தம் செய்யக்கூடியவர் முதல் நாள் முகச்சவரம் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது, மனைவியுடன் சேர்ந்து உறங்கக் கூடாது, பிரஷ் கொண்டு பல் தேய்ப்பதும், வெற்றிலை தாம்பூலம் போடுவதும் கூடாது.

49. மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக, மிக முக்கியம்.

50. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.

51. திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம், சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும் தவறாமல் கிடைக்கும்.

52. சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.

53. மஹாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை நினைத்து மனதார வணங்கினால் சகல சவுபாக்கியங்களும் தேடி வரும்.

54. மாகளாய பட்சத்தின் 16 நாட்களும் சிரார்த்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும்.

55. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அற்றை நன்கு தெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

56. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

57. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மஹாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.

58. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

59. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.

60. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator