ஸ்ரீரங்கமும் ஏழும்! By Parvathi Arunkumar
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம். ஆசியாவிலேயே உயர்ந்த கோபுரம் உள்ள கோயில் 236 அடி உயரம்! ஏழு பிராகாரங்கள் உடைய ஒரே கோயில். வைணவத் திருப்பதிகள் 108-இல் முதலிடம் வகிப்பது. ஏழு பிராகாரங்கள்: 108 திருப்பதிகளில் 7 பிராகாரங்கள் உடைய ஒரே கோயில் ஸ்ரீரங்கம். பிராகாரங்களின் மொத்த நீளம் 14 கி.மீ. ஏழு பிராகாரங்களும் 7 லோகங்களைக் (உலகங்கள்) குறிக்கின்றன. ஏழு பிராகாரங்களும் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு அரசர்களால் கட்டுவிக்கப்பட்டவை. ஏழு சுற்றையும் சுற்றி வளைத்திருக்கும் திருவீதி அடையவளஞ்சான் வீதி, மேற்கு, வடக்கு, கிழக்கு அடையவளஞ்சான் வீதிகள் உள்ளன. தெற்கு அடையவளஞ்சான் பெயர் மாற்றப்பட்டு திருவள்ளுவர் வீதி, சாத்தார வீதி அல்லது பூ மார்க்கெட் வீதி என்ற பெயருடன் திகழ்கின்றன. முதல் பிராகாரம்: முதல் சுற்று தர்மவர்ம சோழனால் கட்டப்பட்டது. இது தர்மவர்ம சோழன் சுற்று - திருவுண்ணாழி (கர்ப்பக்கிரக கோடு) எனப்படுகிறது. இது சத்திய லோகத்தைக் குறிக்கிறது.
இரண்டாம் பிராகாரம்: இரண்டாம் சுற்று இராஜ மகேந்திரன் சுற்று என்படுகிறது. கர்ப்பக்கிரகம் வெளிச்சுற்று. இது இராஜமகேந்திர சோழ மன்னரால் கட்டப்பட்டது. இது தபோ லோகத்தைக் குறிக்கிறது. மூன்றாம் பிராகாரம் மூன்றாம் சுற்று குலசேகரன் சுற்று. சொர்கவாசல் மடப்பள்ளி உள்சுற்று. இது குலசேகரனால் கட்டப்பட்டது. இது ஜநோலோகத்தைக் குறிக்கிறது.
நான்காம் பிராகாரம்: நான்காம் சுற்று ஆலிநாடன் திருவீதி திருமங்கை மன்னன் சுற்று. திருமங்கை மன்னனால் கட்டப்பட்டது. இது மஹர்லோகத்தைக் குறிக்கிறது. ஐந்தாம் பிராகாரம்: ஐந்தாம் சுற்று அகலங்கன் திருவீதி கிளிச் சோழன் சுற்று. கிளிச்சோழன் என்ற மன்னரால் கட்டப்பட்டது. இது சுவர்லோகத்தைக் குறிக்கிறது.
ஆறாம் பிராகாரம்: ஆறாம் சுற்று திருவிக்கிரமன் சுற்று (உத்தர வீதிகள்) எனப்படுகிறது. திருவிக்கிரமனால் கட்டப்பட்டது. இது புவர்லோகத்தைக் குறிக்கிறது. ஏழாவது பிராகாரம்: ஏழாவது சுற்று கலியுகராமன் சுற்று (சித்திரை வீதிகள்) எனப்படுகிறது. கலியுகராமன் என்ற மன்னரால் கட்டப்பட்டது. இது பூலோகத்தைக் குறிக்கிறது. இவ்வாறு ஏழு உலகங்களையும் அதன் தத்துவங்களையும் ஏழு பிராகாரங்களின் மூலம் விளக்கும் ஒரே கோயில் ஸ்ரீரங்கம். ஸ்ரீரங்கரின் ஏழு தேவிமார்கள்: ஸ்ரீரங்கநாதருக்கு ஏழு தேவிமார்கள். ரங்கநாதர் அவர்களை மணந்து "அழகிய மணவாளன்' என்ற பெயர் பெற்றார். அந்த ஏழு தேவிமார்கள் யார் யார்?
1. ஸ்ரீதேவி, 2. பூதேவி, 3. ஸ்ரீரங்கநாச்சியார், 4. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், 5. உறையூர் சோழமன்னன் மகள் கமலவல்லி நாச்சியார், 6. சேரகுல மகள் சேரகுலவல்லி, 7. தில்லி பாதுஷா மகள் பீபி நாச்சியார் என்ற துலக்க நாச்சியார் ஆகிய எழுவர். மேலும், நீளாதேவி, மடப்பள்ளி நாச்சியார், காவிரி தாயுடன் சேர்த்து 10 பேர் என்றும் கூறுவர்.
ஏழில் முதலிடம்: வைணவத் திருத்தலங்கள் 108-இல் தானே தோன்றியவை என ஏழு திருத்தலங்களைக் குறிப்பிடுவர். அவை: 1. திருவரங்கம், 2. ஸ்ரீமுஷ்ணம், 3. திருப்பதி, 4. சாளக்கிராமம், 5. நைமிசாரண்யம், 6. புஷ்கரம், 7. பத்ரிநாத். இவற்றுள் முதன்மை பெற்று முதலில் இருப்பது ஸ்ரீரங்கம் திருக்கோயில்தான்!
- கே. சண்முகம் |
No comments:
Post a Comment