Sunday, 9 February 2014

வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி?

வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பது எப்படி?

வாய் துர் நாற்றம் , வாயில் குடியிருக்கும் (Anaerobic gram negative bacteria) நுண் கிருமிகள் பிராணவாயு இல்லாத சூழ் நிலையிலும் பெருகும். நுண்கிருமிகள் வெளியேற்றும் கழிவுகளால் துர் நாற்றம் உண்டாகிறது.

சாதாரணமாக வாயிலுள்ள நுண்கிருமிகளால் வெளியேறும் கழிவுகளில் ஆவியாகக் கூடிய கந்தக (Sulfur) கூட்டுப் பொருட்கள் உள்ளன. அழுகிய முட்டையிலிருந்து வெளியேறும் Hydrogen sulfide, குப்பைக் கிடன்கிலிருந்து வரும் Methyl mercaptan, கடல் புறங்களிலிருந்து வெளியாகும் Dimethyl sulfide ஆகிய கழிவுகள் வாயிலுள்ள நுண் கிருமிகளிலிருந்து வெளியேறுகின்றன. இவைகள் Volatile Sulfur Compound (VSC) என்றழைக்கபடுகின்றன.

வாயிலிருக்கும் நுண்கிருமிகளால் வெளியேறும் இன்னும் வேறு பல கழிவுகளும் துர் நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

Cadaverine – இறந்த உடலிலிருந்து வெளியேறும் நாற்றம்,
Putrescine – அழுகும் இறைச்சியிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Skatole – மனிதக் கழிவிலிருந்து ஏற்படும் நாற்றம்.
Isovaleric acid – வியர்க்கும் பாதத்திலிருந்து ஏற்படும் நாற்றம்.

கிருமிகள் பெருகுவதற்கு தேவையான உணவு நாம் உண்ணும் மீன், இறைச்சி, முட்டை, பால் போன்ற புரத உணவிலிருந்தும், உமிழ் நீர், வாயின் உட்புறத்தில் கழியும் திசுக்களிலிருந்தும் கிடைக்கிறது. வாயை, சாப்பிட்ட ஒவ்வொரு முறையும் நன்றாக கொப்பளிக்காததால் உணவுப் பொருட்கள் வெண்மையான காரையாக பற்களின் இடுக்குகளில், பற்களின் மேல், ஈறுகளுக்கு உட்புறம் மற்றும் நாக்கின் பிற்பகுதியில் மாவு போன்ற வெண் படலமாக படிந்து விடுகிறது. வெண்படிமம் 0.1 – 0.2 மி.மீ அளவில் இருந்தாலும் கிருமிகளுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல் பெருகி கழிவுகளை வெளியேற்றுகின்றன.

பற்கள் கட்டியிருந்தால், அதற்கும், வாய்க்கு இடையிலும் உணவுப் பொருட்கள் தங்கி கிருமிகள் வளர ஏதுவாகிறது. வாயிலும், நாக்கிலும், பற்களின் இடுக்குகளிலும் உள்ள இடத்தில் குடியேறி கழிவுகளை வெளியேற்றும் கிருமிகளுக்கும், பிற கிருமிகளுக்கும் நிரந்தர போட்டி நடந்து கொண்டேயிருக்கிறது. இக்கிருமிகளும், அதன் கழிவுகளும் எல்லோரின் வாயிலும் இருக்கின்றன. வாயையும், பற்களையும் சுத்தமாக வைத்திருப்பவர்கள் பலருக்கு நாற்றம் இல்லாமல் இருக்கிறது. வாயையும், பற்களையும் சரியாக பராமரிக்காதவர்களுக்கு நாற்றம் மிகுந்து இருக்கிறது.

அடுத்து, வாயின் உட்பகுதியில் ஈறு நோய் (Gum disease – Chronic Periodontitis) பாதிப்புள்ளவர்களுக்கும் வாயில் துர் நாற்றம் ஏற்படலாம். குறிப்பாக நாக்கின் பின் புறத்திற்கு அருகிலுள்ள பற்கள் மற்றும் ஈற்றின் இடைவெளிகளில் உணவுப் பொருட்களின் படிமம் தேங்குகிறது. இந்த இடங்களிலும் நுண் கிருமிகள் தங்கி பற்களைச் சுற்றியுள்ள எலும்புப் பகுதியை அரித்து, பற்களில் குழியை (Periodontal pockets) ஏற்படுத்துகிறது. இந்த குழிகளிலும் மேலும் உணவுப் பொருட்களும், கிருமிகளும் தங்கி, கழிவுப் பொருட்களை உற்பத்தி செய்து வாய் துர் நாற்றத்தை அதிகரிக்கிறது.

வாய் துர் நாற்றத்திற்கு எவ்வாறு சிகிச்சை அளிப்பது?

1. நாக்கை சுத்தம் செய்வது மிகவும் முதன்மையானதும் அவசியமானதுமாகும். நாக்கின் முன் பாதி சாப்பிடும் போதும், பேசும் போதும் அடிக்கடி வாயின் மேல்புறத்தில் (Hard palate) உராய்வதால் இயற்கையாகவே சுத்தமாகிறது. ஆனால் நாக்கின் பின் பகுதி மிருதுவான Soft palate ல் உராய்வதால் போதுமான அளவில் சுத்தமாவதில்லை. வாயில் உற்பத்தியாகும் கிருமிகளையும், கந்தக காம்பௌன்ட் கழிவுகளையும் நீக்கக் கூடிய குளோரின் டை ஆக்ஸைடு அல்லது Cetylpyridinium குளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்த வேண்டும். Tooth brush மற்றும் பிளாஸ்டிக் ஸ்பூன் அல்லது Tooth scaraper உபயோகித்து நாக்கின் பின்பகுதியையும், பற்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

2. முறையான இடைவெளியில் பல் மருத்துவரிடம் ஈறு பரிசோதனையும், பற்களை சுத்தம் செய்வதும் மிக அவசியம். பற்களின் நிலைமையும், ஈறு நன்றாக வீக்கமின்றி இருக்கிறதா என்பதையும் பல் மருத்துவரிடம் முறையாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். பற்களில் காரை படிந்தும், எலும்பு தேய்ந்து பற்குழிகள் ஏற்பட்டிருந்தாலும் தகுந்த சிகிட்சை அளித்து பற்களைக் காப்பாற்றி, துர் நாற்றத்தையும் தவிர்க்க உதவுவார்.

3. புரதச்சத்துள்ள ஆகாரத்தை குறைத்தும், அதே நேரத்தில் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துள்ள உணவைச் சாப்பிட்டு வந்தால், வாயில் நுண் கிருமிகள் வளர வாய்ப்பிருக்காது. இத்துடன் புரதச் சத்துள்ள உணவைச் சாப்பிட்ட போது முறையாக நாக்கின் பின் பகுதியை சுரண்டி வழித்தும், பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள புரத உணவுத் துகள்களை Floss உபயோகித்து நீக்கியும், வாய் கொப்பளிக்கும் கிருமி நாசினி மருந்து (Chlorhexidine, Povidone 2% Gargle) திரவத்தால் வாய் கொப்பளித்தும் வாய் துர் நாற்றத்தைப் போக்கலாம்

4. வாயில் எப்பொழுதும் ஈரப்பதம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக இரவில் தூங்கும் போது உமிழ் நீர் சுரப்பது குறைந்து, தூங்கி எழும் போது காலையிலும், நீண்ட நேரம் பேசினாலும், பேசிய பின்னும் ஈரப்பதமின்றி வாய் உலர்ந்து விடும். வாயில் ஈரப்பதம் இல்லையென்றால் துர் நாற்றம் வீசும். இதை தவிர்க்க தினமும் நிறைய நீர் குடிக்க வேண்டும். இது உமிழ் நீர் சுரக்க உதவி, வாய் ஈரப்பதத்துடன் இருக்கும். அடிக்கடி நல்ல நீர் கொண்டு வாய் கொப்பளிப்பதால் ஈரப்பதத்துடன், வாயிலுள்ள கிருமிகளையும் அதன் கழிவுகளையும் அகற்றலாம். சர்க்கரையில்லாத மிட்டாய்கள் சுவைப்பதாலும் வாயிலுள்ள ஈரப்பதத்தை அதிகமாக்கி துர் நாற்றத்தை போக்கலாம்.

5. கிருமி நாசினியாக வாய் கொப்பளிக்கும் மருந்தையும் (Mouth wash) பயன்படுத்த வேண்டும். வாய் கொப்பளிக்கும் மருந்து 1. நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையது, 2. வாய் நாற்றம் தரும் கந்தக கூட்டுப் பொருட்களை சமன் செய்வது என இரண்டு வகைப்படும். Listerine, Cetylpyridinium Chloride mouth wash ஆகிய இரண்டும் நுண் கிருமிகளை அழிக்கும் தன்மையுடையது. Zinc ions உள்ள Mouth wash வாயில் நுண் கிருமிகளால் உற்பத்தியாகும் கந்தகம் கலந்த கழிவுப் பொருட்களை சமன் படுத்தும் தன்மையுடையது. இரண்டு தன்மையும் உடைய Chlorine dioxide அல்லது Sodium chlorite கலந்த Mouth wash ம் உபயோகிக்கலாம்.

சில பற்கள் அல்லது முழுவதும் (Full denture) பல் கட்டியிருந்தால், சாப்பிட்ட பின் ஒவ்வொரு முறையும் அவைகளையும் கழற்றி நன்றாக கழுவிய பின் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இரவில் தூங்கும் போது பல் செட்டை கழற்றி, பற்பசை கொண்டு பிரஷ்சால் செட்டின் உட்புறமும் வெளியிலும் தேய்த்து தனியாக ஒரு கப்பில் வைத்து விட வேண்டும். பல் செட்டில் இயற்கையாகவே நுண் துளைகள் இருக்கும். எனவே துளைகளுக்குள் சென்று சுத்தம் செய்யக் கூடிய கிருமி நாசினி யை உபயோகித்து இரண்டு வேளையும் பல் செட்டை சுத்தம் செய்ய வேண்டும். மேற் கூறிய எல்லா முறைகளையும் பின் பற்றினால்தான் வாய் துர் நாற்றத்தை முழுமையாக நீக்கலாம்.


                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator