Monday, 13 January 2014

இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்!

Ananthanarayanan Ramaswamy
Ananthanarayanan Ramaswamy 13 January 17:35
இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்!

இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. 

நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.

ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோ பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம்.

அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினைச் செய்வதற்குச் சமம்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் இரத்ததானம் செய்வதின் பயன்களையோ ,சிறப்பினையோ விளக்குவதற்கு அல்ல; 

இன்று நம்மில் 20-30 சதவிகிதம் மட்டுமே இரத்த தானத்தினைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு தொடர்ச்சியாக தகுந்த இடைவெளியில் இரத்த தானம் செய்து உயிர் காக்கும் மகத்தான சேவையினைச் செய்து வருகின்றனர். 

இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்கு காரணம். 

இந்தக் கட்டுரையின் மூலம் இந்த எண்ணிக்கை சிறிதளவாவது கூடுமாயின் இது மேலும் பல உயிர்களைக் காப்பதற்கு உதவும். 

அதுவே இக்கட்டுரையின் குறிக்கோள் ஆகும்.

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது இரத்தத்தைப் பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். 

ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. 

இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். 

அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.

இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. 

இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. 

எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்குப் பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

இரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள்:

* இரத்த தானம் செய்பவரின் வயது 18 லிருந்து 60 வயதிற்குள் இருத்தல் அவசியம்.

* இரத்த ஹிமோகுளோபின் அளவு 12 – 16 கிராமிற்குள் இருக்க வேண்டும்.

* இரத்த தானம் செய்வபரின் எடை 50 கிலோவிற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.

இரத்ததானம் செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான தகுதிகள்:

எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது. 

கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது. 

கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

1. எய்ட்ஸ் 2. மேக நோய் 3. நீரழிவு நோய் 4. இரத்த அழுத்தம் 5. வலிப்பு நோய்

முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

இரத்த தானம் செய்பவர் பெண் எனில் தேவையான தகுதிகள்:

மாதவிடாய் காலங்களில் இரத்ததானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். 

தாய்மையடைந்த காலம் முதல் மகப்பேறு காலம் வரை இரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். 

வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெருபவர்களும் இரத்த தானம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

இரத்த தானம் செய்பவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்:

இரத்த தானம் செய்ய விரும்புபவர் மது அருந்தும் பழக்கமுடையவர் எனில், மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் அவசியம். 

புகைப்பிடிக்கும் பழக்கமுடையவராக இருப்பின், புகை பிடித்த பின்னர் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது நல்லது. 

அதே போன்று இரத்த தானம் செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைப்பிடிப்பது நல்லது. 

அதற்கு முன்பே புகைப்பிடிப்பது மயக்கம் ஏற்படுதல் போன்ற பாதிப்புகளை உருவாக்கும். 

சில வங்கிகள் புகை, மது போன்ற பழக்கமுடையவர்களிடமிருந்து இரத்தம் பெற தயக்கம் காட்டும். 

புகையும் மதுவும் உடலுக்குக் கேடு செய்யக்கூடியவையாக இருப்பதே அவர்களின் தயக்கத்துக்கு காரணம். 

ஆகவே புகையும் மதுவையும் முடிந்த அளவிற்குத் தவிர்ப்பது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்.

இரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். 

இரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம். இரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புபவர் குறைந்தது மூன்று மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம் செய்ய வேண்டும். 

இரத்த தானம் செய்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். 

குறைந்தது ஒரு மணி நேரத்திற்குப் பளுவுள்ள பொருட்களைத் தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.

இரத்த வங்கியும் அதன் செயல்பாடுகளும்:

தானம் பெறப்பட்ட இரத்தத்தைச் சேமித்து வைப்பதற்காக அரசு மருத்துவ மனைகள், அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் மூலம் இரத்த வங்கிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சராசரியாக 4.5 (நான்கரை) முதல் 5.5 (ஐந்தரை) லிட்டர் இரத்தம் உள்ளது. 

இரத்த தானம் செய்ய வருபவரிடமிருந்து தேவைக்கேற்ப 350மிலி முதல் 450 மிலி வரை மட்டும் சேகரிக்கப்படுகிறது. 

சேகரிக்கப்பட்ட இரத்தம் இரத்த வங்கிகளில் குளிரூட்டப் பட்டுபாதுகாக்கப்படுகின்றது. 

சேகரிக்கப்பட்ட முழு இரத்தத்திலிருந்து தேவைக்கேற்ப இரத்தப் பகுதிப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றது. 

இரத்தப் பகுதிப் பொருட்கள் (இரத்தச் சிகப்பணு, இரத்த தட்டுக்கள், பிளாஸ்மா) அனைத்தும் தகுந்த வெப்பநிலையில் குறிப்பிட்ட காலம் வரையிலும் பாதுகாக்கப்படுகிறது. 

ஒவ்வொரு இரத்தப் பகுதிப் பொருட்களும் கீழ்க் கண்ட நாட்கள் வரையிலும் பதப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.

தூய இரத்தம் – 35 நாட்கள்

இரத்தச் சிகப்பணு – 42 நாட்கள்

இரத்தத் தட்டுக்கள் – 5 நாட்கள்

பிளாஸ்மா – 1 வருடம்

இரத்ததானம் செய்தவர்களின் இரத்தம் பரிசோதனை செய்தபிறகே நோயாளிக்குச் செலுத்தப் படுகின்றது. 

இரத்தம் செலுத்தப்படுவதற்கு முன் அந்த இரத்தம் நோயாளிக்குப் பொருந்துமா என்று சோதனை செய்தபிறகே வழங்கப்படுகின்றது.

தன்னார்வமாக இரத்த தானம் செய்யும் நிறுவனங்களுக்கும், சமூக இயக்கங்களுக்கும் வருடா வருடம் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும், அரசு பொது மருத்துவமனையும் இணைந்து ஊக்குவிப்புப் பாராட்டு விருதுகளை வழங்கி வருகின்றனர். 

தமிழ் நாட்டில் நிறைய தன்னார்வ அமைப்புகள் உள்ளன.

அவற்றில் சத்யா சாய்(www.sathyasai.org) என்ற தன்னார்வ அமைப்பு தொடர்ந்து தமிழ் நாட்டில் இரத்த தானத்தில் முதலிடம் வகித்தது ,ஆனால் தற்போது தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத்(TNTJ -www.tntj.net) என்ற முஸ்லிம் அமைப்பு கடந்த ஏழு வருடங்காளாக முதலிடம் வகிக்கிறது , 

இந்த அமைப்பின் சாராம்சம் என்னவென்றால் நீங்கள் தமிழ் நாட்டில் எந்த பகுதியிலும் இருந்தாலும் சரி , இவர்களுடைய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டால் போதும் இந்த அமைப்பை சார்ந்தவர்கள் களத்தில் இறங்கி எந்த சாதி மதம் இனம் பாராமல் எந்த பொருள் செலவையும் எதிர் பாராமல் ரத்த தானம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரத்த தானம் செய்பவர்கள் பெறும் நன்மைகள்:

இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல; கொடுப்பவரின் தன் நலன் காப்பதற்கு உதவுவதோடு அவர்களின் உடல்நலன் மேம்படுவதற்கும் அது உதவுகிறது. 

இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம். 

தற்போதைய ஆய்வுகளில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.

ஹிமோகுளோபின் அளவினைக் கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது. 

இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப் படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது. 

தொடர்ச்சியாக இரத்த தானம் செய்வதன்மூலம் உடலில் புது இரத்தம் உற்பத்தியாவதால், இரத்தத்தில் தேங்கும் அசுத்தங்கள், இறந்த செல்கள் போன்றவை நீக்கப்பட்டு உடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உதவுகிறது.

இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. 

சிலருக்கு ஏற்படும் மயக்கம் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பதுதான் உண்மை. 

மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். 

இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்குத் திரும்பி விடுவர்.

இரத்த தானம் செய்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இரத்த தானம் செய்வது பலவிதமான நன்மைகளை நமக்கும் பிறருக்கும் அளிக்கின்றது. 

இரத்ததானம் செய்வதினைப் பற்றிய அறியாமையை உடைத்து அனைவரும் இரத்த தானம் செய்க!

பிறரைக் கெடுத்து வாழ்வது வாழ்க்கையல்ல; கொடுத்து வாழ்வதே வாழ்க்கை.

ஆகவே தங்களால் இயன்ற அளவு பிறர்க்குத் தானம் செய்து வாழ்க!

இரத்த தானம் செய்வீர்! மனிதாபிமானத்தை வளர்ப்பீர்! விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பீர்!

....

                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''

follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator