சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை
திருப்பாசுரம் - 27.
புகழ் தஞ்சை யாளியைப் பொன் பெயரோன் தன் நெஞ்சம் அன்றிடந்தவனை -
- என திருமங்கை ஆழ்வார் புகழ்ந்துரைப்பது - இந்தத் திருக்கோலத்தையே!.
அழகான திருக்கோலம்..
இன்று பாவை நோன்பின் மிக முக்கியமான, உயர்ந்த நாளான - கூடார வல்லி.
பாவை நோன்பு நோற்கும் போது - துறந்த பொன் அணிகளை மீண்டும் சூடிக்கொண்டு புத்தாடை அணிந்து புத்தரிசியில் பாற்சோறு பொங்கலிட்டு நிறைந்த நெய்யுடன் அனைவருடனும் கூடி இருந்து, கோவிந்தனைக் கும்பிட்டு குதுகலமுடன் உண்டு மகிழ்வதாக - கோதை நாச்சியார் குறிப்பிடுகின்றாள்.
அந்த வைபவத்தினை அனைவருக்கும் பிரசாதிக்கும்படி பெருமானை வேண்டிக் கொள்வோம்.
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!..
இன்று வைகுந்த ஏகாதசி
வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுதென்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!..
நம்மாழ்வார்
ஆலயதரிசனம்
தஞ்சை
1. தஞ்சை மாமணிக் கோயில்
மூலவர் - நீலமேகப்பெருமாள்
தாயார் - செங்கமலவல்லி
விமானம் - செளந்தர்ய விமானம்
2. மணிக்குன்றம்
மூலவர் - மணிக்குன்றப்பெருமாள்
தாயார் - அம்புஜவல்லி
விமானம் - மணிக்கூட விமானம்
3. தஞ்சை யாளி நகர்
மூலவர் - வீர நரஸிம்மன்
தாயார் - தஞ்சை நாயகி
விமானம் - வேதசுந்தர விமானம்
மூன்று திருக்கோயில்களிலும் எம்பெருமான் வீற்றிருந்த திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம். ஸ்ரீபராசர மகரிஷி ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷி ஆகியோருக்குப் பிரத்யக்ஷம்.
தலவிருட்சம் - மகிழமரம். தீர்த்தம் - வெண்ணாறு. ப்ரத்யேகமாக அம்ருத தீர்த்தம், கன்னிகா புஷ்கரிணி, சூர்ய புஷ்கரிணி, ஸ்ரீ ராமதீர்த்தம் ஆகியனவும் விளங்குகின்றன.
திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகிய புண்ணியர் தம் திருவாக்கினால் மூன்று திருமேனிகளுடன் கூடிய சாந்நித்யங்களை ஏக திவ்ய தேசமாக மங்களாசாசனம் செய்விக்கப்பட்டதிருத்தலம்.
நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் பெரும்பதி - தஞ்சையம்பதி.
பிரம்மாண்ட புராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம், சோழ மண்டல சதகம், பிரகதீசுவர மகாத்மியம் முதலிய நூல்கள் இத்தலத்தின் மகத்துவத்தைப் பற்றி சிறப்பித்துப் புகழ்கின்றன.
வானளாவ உயர்ந்த - அடர்ந்த சோலைகள் சூழ்ந்த விசாலமாக விளங்கிய தஞ்சபுரி. இதன் பேரழகும் வளமும் பராசர மகரிஷியை மிகவும் கவர்ந்தது. தம் சீடர்களுடன் இத்தலத்தில் ஆஸ்ரமம் அமைத்து தவம் மேற்கொண்டார்.
பராசர மகரிஷி தேவலோகத்தில் தான் பெற்ற அமுதத்தைத் தன் குடிலுக்கு அருகில் இருந்த புஷ்கரணியில் கலந்து விட - இந்த அமிர்த புஷ்கரணியால் அந்த இடம் மேலும் செழித்து விளங்கியது. அங்கிருந்த சகல உயிர்களும் நோய் நொடியின்றி மகிழ்ந்து வாழ்ந்தன.
இந்நிலையில் வடக்கே இருந்த தண்டகாரண்யம் மழையின்றி வறண்டு போனது. அங்கிருந்து வளமையான பகுதியினைத் தேடி தென்திசை நோக்கி வந்தவர்கள் - தஞ்சன், தாரகன், தண்டகன் ஆகியோர்.
வானளாவிய மரங்களுடன் சோலைகளுடன் செழித்து விளங்கிய பகுதியில் குடியேறினர். வாழ்வும் வளமும் பெருகியதால் அவர்களுடைய நற்குணங்கள் உருமாறின. அரக்க குணங்களுக்கு ஆட்பட்ட அவர்களால் - முனிவர்களுக்கு தீராத இடையூறு ஏற்பட்டது.
பராசர மகரிஷி இதனை முறையிட்டு ஸ்ரீமந் நாராயணனைக் குறித்துத் தவம் செய்தார்.
மகரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கிய பெருமாள், முதலில் நீலமேகமாகத் தோன்றி அமிர்த புஷ்கரணி நீரைப் பருகினார்.
பின்னர் - ஸ்ரீநீலமேகப் பெருமாளாய் அவதாரம் செய்தார்.
தண்டகன் - பூமியை பிளந்து கொண்டு தப்பித்துச் சென்றான். பெருமாள் ஸ்ரீவராஹ மூர்த்தி எனத் தோன்றி பூமிக்குள் சென்று அவனை அழித்தார். பெருமாள் வராஹ மூர்த்தியாக எழுந்ததால் -
இந்த தலத்துக்கு வராஹ க்ஷேத்ரம் எனும் பெயரும் உண்டு.
தாரகனை - பெருமானுடன் தோன்றிய ஸ்ரீகாளி வதைத்தருளினாள்.
தஞ்சகன் கோரமான யானை வடிவத்துடன் எதிர்க்க - மகாவிஷ்ணு ஸ்ரீநரசிம்ம மூர்த்தி என எதிர்நின்றார்.
புகழ் தஞ்சை யாளியைப் பொன் பெயரோன் தன் நெஞ்சம் அன்றிடந்தவனை -
- என திருமங்கை ஆழ்வார் புகழ்ந்துரைப்பது - இந்தத் திருக்கோலத்தையே!.
பெருமானின் திருக்கரங்களுக்குள் சிக்கினான் தஞ்சகன். ஸ்பரிச தீட்சை ஆனதால் - அந்த அளவில் தஞ்சகனுக்கு ஞானம் பிறந்தது. அசுர குணங்கள் நீங்கப் பெற்ற அவன் பெருமானைப் பணிந்து -
என் பொருட்டு நரசிம்மமூர்த்தியாக வந்த தாங்கள் இங்கேயே தங்கி சகல மக்களுக்கும் அருள வேண்டும். எனது பெயராலேயே இத்தலமும் அழைக்கப்பட வேண்டும்!.. - என வரங்கேட்டான்.
பெருமாளும் அவ்வாறே அருள் புரிந்தார்.
அரக்கர்களை அழித்து அனைவரையும் காப்பாற்றினார். அதன்பின், ஸ்ரீபராசர மகரிஷியின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீமந் நாராயணன், இத்தலத்திலேயே ஸ்ரீ வீரநரசிங்கப் பெருமாளாய் எழுந்தருளி, இன்றளவும் சேவை சாதிக்கிறார்.
அசுரர்களை அழித்து கருட வாகனத்தில் தேவியுடன் பெருமாள் காட்சி கொடுத்த நாள் - வைகாசி திருஓணம்.
அந்நாளை அக்காலத்திலேயே சிறப்புற பெருவிழாவாகக் கொண்டாடினார்கள். இருப்பினும், தஞ்சையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களினால் இடையில் சிலகாலம் தடைப்பட்டிருந்தது.
தற்போது - வருடந்தோறும் வைகாசித் திங்கள் திருஓண நட்சத்திரத்தன்று கருட மகோத்சவம், ஸ்ரீ நீலமேகப் பெருமாளின் பேரருளால் சிறப்புற கொண்டாடப்பட்டு வருகின்றது.
கருட மகோத்சவத்தில் ஆரம்ப தினம் முற்பகல் திருமங்கை மன்னன் எழுந்தருளி திவ்ய தேசப் பெருமாள்களை மங்களாசாசனம் செய்விப்பார்.
அன்றிரவு திவ்ய தரிசன சேவை.
மறுநாள் காலை - திவ்ய தேச பெருமாள் கருட வாகனத்திலும், ஆழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருள்வர்.
நகரிலுள்ள ஏனைய சந்நிதிகளிலிருந்தும், பெருமாள் கருட வாகனத்தில் ஆரோகணித்து உடன் வர - தஞ்சாவூர் கோட்டை நான்கு ராஜ வீதிகளிலும் கண்கொள்ளாக் காட்சியாக கருட சேவை நிகழும்.
இந்த ஆண்டு நிகழ்ந்த 23 கருட சேவை பற்றி மேலும் அறிய --- 23 கருட சேவை
மூன்றாம் நாள் வெண்ணெய்த் தாழி. நவநீத கிருஷ்ண அலங்காரத்தில் சேவை. நான்கு ராஜவீதிகளிலும் கோலாகலமாக திருவீதியுலாக் காட்சி.
நிறைவாக விடையாற்றி நடத்துவதும், எல்லா நாள்களிலும் பாமரர் முதல் பக்தர்கள் வரை அனைவருக்கும் அன்னதானம் செய்வதும் சிறப்பாக நிகழ்கின்றது.
தஞ்சை மாமணிக் கோயில்கள் - தஞ்சை மாநகரின் வடக்கே - வெண்ணாற்றின் தென்கரையில் அருகருகே அமைந்துள்ளன.
தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து - திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், திருக்கருகாவூர் - செல்லும் நகரப் பேருந்துகள் -
ஸ்ரீ வீரநரசிங்கப்பெருமாள் திருக்கோயில் வாசல் வழியே செல்கின்றன.
நல்லனவெல்லாம் அருளும் நாயகன் - ஸ்ரீமந் நாராயணன் - ஸ்ரீவீரநரசிங்கப் பெருமாளாக, ஸ்ரீமணிக்குன்றப் பெருமாளாக, ஸ்ரீநீலமேகப் பெருமாளாக - சேவை சாதிக்க -
சனிக்கிழமைகளிலும், பிரதோஷ வேளைகளிலும் தஞ்சையம்பதியின் மிகப் பழமையான - திவ்ய தேசத்தை மக்கள் தரிசித்து இன்புறுகின்றனர்.
எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள
நெருக்கி அவருயிர் செகுத்த எம்அண்ணல்
வம்புலாஞ்சோலை மாமதில்
தஞ்சை மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.
திருமங்கை ஆழ்வார்.
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
visit my blog http://harikrishnamurthy.wordpress.com
follow me @twitter lokakshema_hari
VISIT MY PAGE https://www.facebook.com/K.Hariharan60 AND LIKE





No comments:
Post a Comment