திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது நினைவில் கொள்ளவேண்டியவை..
1. மாப்பிள்ளை பார்க்கும் போது, இன்னதை எல்லாம் தாருங்கள் என பட்டியல் இடுவோரை துளியும் யோசிக்காமல் ஒதுக்கிடுங்கள். என்ன கேட்டாலும், நிலம் விற்று, கடன் வாங்கி பாடாய் பட்டேனும் கேட்டதைக் கொடுத்து திருமணம் செய்து வைப்பேன் என்ற நினைப்பை தவிர்த்திடுங்கள். அப்படி கடினப்பட்டு செய்வதெல்லாம் ஓர் நாள் நிகழ்வுக்கு தான். பெண்ணுக்குத் தானே தருகிறோம் மகிழ்ச்சியாய் இருப்பாள் என்ற கனவு பொய்த்த பின் அழது பிரோஜனம் இல்லை. மனம் பணத்தை விரும்பும் இடத்தில் மகிழ்ச்சி நிரந்தரமாய் இருக்காது. 2. சில நல்ல எண்ணம் கொண்டவர்கள், எந்த எதிர்பார்ப்பும் இல்லை, நீங்கள் முடிந்ததைச் செய்யுங்கள் இல்லையெனினும் குறையில்லை என்றால், உடனே " இந்த மாப்பிள்ளைக்கு ஏதோ குறை, அது தான் எதுவுமே வேண்டாம் என்கிறார்" என தப்புக் கணக்கு போடாதீர்கள். எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது நலமே. அதற்காக, இந்த ஒரே காரணத்திற்காக சந்தேகம் கொள்வது தவறு. மாப்பிள்ளையை நன்றாக விசாரியுங்கள். அதில் தவறில்லை. எதற்காக இவர் ஒன்றும் வேண்டாம் என்கிறார் என்று விசாரிக்காதீர்கள். அந்த ஒரு கண் கொண்டு மட்டுமே விசாரித்தால் நீங்கள் நல்ல வரனை இழக்க கூடும். 3. வாழ்க்கைத் துணைவி இந்த நடிகையைப் போல் அழகாய் இருக்க வேண்டும் என்பதை விட அவள் என்னுடன் வாழப்போகும் காலத்தில் ஓர்நாள் கூட என்னிடம் நடிக்காதவளாய் இருக்க வேண்டும் என்று ஆண்கள் எண்ணுவதே நலம்.
4. பெண்களும் வாழ்க்கை துணை இந்த நடிகனைப் போல் இருக்க வேண்டும் என ஒரு போதும் எண்ணாமல் இருத்தல் நலம். அப்புறம் உங்களுக்கு ஆபத்து என்றால் சண்டை போட டூப் தேட வேண்டியிருக்கும். எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் துணையாய் இருப்பவரே வாழ்க்கை துணை என்பதை நம்புங்கள். 5. படித்தவர் துணையாக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தவறில்லை. ஆனால் பொறியியல் மட்டுமே படித்திருக்க வேண்டும் கணியில் செய்யும் மென்பொருள் வேலை மட்டுமே நல்ல தொழில் என்று எதிர்பார்ப்பது தவறே. எவ்வளவு பணம் கட்டியாவது பொறியியல் படிக்கவேண்டும் என்ற நிலைமை ஒரு புறம் இருக்க, எவ்வளவு கொடுத்தேனும் பொறியியல் துறை மாப்பிள்ளையை பிடிக்க வேண்டும் என்பது இன்னொரு பக்கம் வளர்ந்துக் கொண்டே இருக்கிறது. 6. ஆண் வீட்டாரோ, பெண் வீட்டாரோ பார்த்த வரன் பிடித்திருக்கா இல்லையா என்பதை நேரமாய் நேர்மையாய் சொல்லி விடுங்கள். அதில் யாருக்கும் எந்த மனக்கசப்பும் இல்லை. இன்று சொல்கிறேன், நாளை சொல்கிறேன். இப்ப பிடிச்சிருக்கு ஆனா மேற்கொண்டு அப்புறம் பேசலாம் என்று ஜவ்வு மாறி இழுத்து அடுத்தவர் மனதில் தேவையற்ற எதிர்பார்ப்புகளை விதைத்து அவர்களை துன்புறுத்தாதீர்கள். எந்த அளவுக்கு இன்று மணமுறிவுகள் அதிகம் இருக்கோ அதே அளவிற்கு மனங்கள் இணையும் திருமணமும் கடினமாகத் தான் இருக்கிறது. இந்த ஆண்டு கணக்குப்படி தமிழ்நாட்டின் 7.4 கோடி மக்கள் தொகையில் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற நல்ல நிலையில் தான் இருக்கிறது. இருந்தும் இங்கு பலருக்கு பல வருடங்கள் தேடினாலும் நல்ல வரன் அமைவதில்லை. எல்லாவற்றிற்கும் காரணம் தேவையற்ற எதிர்பார்ப்புகளே. உங்களின் அதிக பட்ச எதிர்ப்பார்ப்பாக நல்ல மனதையும், குணத்தையும் கொள்ளுங்கள்.
எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொண்டால், இனிதாய் ஓர் இல்லறம் அமைந்துவிடும்.
இரு மனங்கள் இணைந்தால் மட்டுமே அது திருமணம். மான்யங்கள் கொண்டு விலைபேசப்பட்டால் அது வெறும் மணமே! |
No comments:
Post a Comment