Saturday 16 August 2014

ஒரு உயர்ந்த ஸ்தானம் நம்முடைய சாஸ்திரங்களில் ஸ்திரீகளுக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது.

ஹிந்து மதத்தில், சாஸ்த்திரங்களில் பெண்களுக்கு மிக உயர்ந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.- மஹா பெரியவா
ஒரு உயர்ந்த ஸ்தானம் நம்முடைய சாஸ்திரங்களில் ஸ்திரீகளுக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது. அப்படியானால், சாஸ்த்திரங்களில், ஸ்திரீகளுக்கு ஏன் அநுஷ்டானங்களும், ஸம்ஸ்காரங்களும் இல்லாமல் வைத்திருக்கிறது?
குழந்தை பிறந்தவுடன் புண்யாஹவாசனம், நாமகரணம், பிறகு ஆண்டு நிறைவில் அப்தபூர்த்தி, அன்னப் பிராசனம் முதலானதுகளை நாம் பெண் குழந்தைகளுக்கும் பண்ணினாலும், சௌளம் (குடுமி வைத்தல்) , உபநயனம், பிறகு பிரம்மசரிய ஆச்ரமத்தில் உள்ள விரதங்கள் முதலிய எதுவும் பெண்களுக்கு இல்லை. அப்புறம் கல்யாணம் என்கிற விவாஹ ஸம்ஸ்காரம் மட்டும் அவளுக்கும் இருக்கிறது. அதற்கப்புறம் உள்ள ஸம்ஸ்காரங்கள், யக்ஞம் முதலானவற்றில் கர்த்தாவாக முக்கியமாய் காரியம் பண்ணுவது புருஷன்தான். இவள் பத்தினி ஸ்தானத்தில் கூட நிற்கிறாள். ஒளபாஸனத்தில் மாத்திரம் இவளும் ஹோமம் பண்ணுகிறாள்.
பிறப்பதற்கு முன்பே செய்யப்படும் நிஷேகம், பும்ஸுவனம், ஸீமந்தம் முதலியவைகூட புருஷப் பிரஜையை உத்தேசித்தேதான் செய்யப்படுகின்றன. அப்படியானால் இக்காலச் சீர்திருத்தக்காரர்கள், 'பெண் விடுதலைக்காரர்கள்' சொல்வது போல் ஹிந்து மதத்தில் பெண்களை இழிவு படுத்தி இருட்டில் அடைத்துத்தான் வைத்திருக்கிறதா?
நாலாம் வர்ணத்தாருக்கு ஸம்ஸ்காரங்களில் பல இல்லாததற்கு என்ன காரணம் சொன்னேன்? அவர்களால் நடக்க வேண்டிய லௌகிக காரியங்களுக்கு இவை அவசியமில்லை என்றேன். இந்த ஸம்ஸ்காரங்களால் எப்படிப்பட்ட தேஹ, மன ஸ்திதிகள் ஏற்படுமோ அவை இல்லாமலே அவர்கள் லோக உபகாரமாக ஆற்றப்பட வேண்டிய தங்களது தொழில்களைச் செய்துவிட முடியும். அத்யயனம், யக்ஞம் என்பவற்றில் மற்ற ஜாதியாரும் பொழுதைச் செலவிட்டால் அவர்களால் நடத்தியாக வேண்டிய காரியங்கள் என்ன ஆவது? இதனால்தான் அவர்களுக்கு இவை வேண்டாமென்று வைத்தது? இவை இல்லாமலே, தங்கள் கடமையைச் செய்வதனால் அவர்கள் ஸித்தி பெறுகிறார்கள். "ஸ்வகர்மணா தம் அப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ:" என்று பகவான் (கீதையில்) சொல்லியிருக்கிறார். இந்த விஷயங்களை முன்பே சொன்னேன்.
பொதுவான சமூகத்தில் இப்படிக் காரியங்கள் பிரித்திருப்பதை முன்னிட்டே ஸம்ஸ்கார வித்யாஸம் ஏற்பட்டிருக்கிற மாதிரித்தான், ஒவ்வொரு வீட்டிலும் புருஷர்களுக்கும் பெண்களுக்கும் இடையே வித்யாஸம் வைத்திருக்கிறது. ஒரு வீடு என்றிருந்தால் சமையல், வீட்டைச் சுத்தம் பண்ணுவது, குழந்தைகளை வளர்ப்பது என்றிப்படி பல காரியங்கள் இருக்கின்றன. ஸ்வாபாவிகமான (இயற்கையான) குணங்களால் பெண்களே இவற்றுக்கு ஏற்றவர்களாக இருக்கின்றனர். இவர்களும் புருஷர்களின் அநுஷ்டானங்களில் இறங்கிவிட்டால் இவர்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன ஆவது? இவர்களுடைய சித்தசுத்திக்குப் பதி சுசுரூஷை, கிருஹ ரக்ஷணை இதுகளே போதும் என்னும் போது புருஷனின் அநுஷ்டானங்களை இவர்களுக்கும் வைத்து வீட்டுக் காரியங்களை ஏன் கெடுக்க வேண்டும்.
ஆகவே disparity, discrimination (ஏற்றத்தாழ்வு, வித்யாஸப் படுத்துதல்) என்று இக்காலத்துச் சீர்த்திருத்தக்காரர்கள் வைகிறதெல்லாம் வாஸ்தவத்தில் ஒருத்தர் செய்கிறதையே இன்னொருத்தரும் அநாவசியமாக duplicate பண்ணாமல், ஒழுங்காக வீட்டுக் காரியமும், நாட்டுக் காரியமும் நடக்கும்படி division of labour (தொழிற் பங்கீடு) பண்ணிக் கொண்டது தான்; எவரையும் மட்டம்தட்ட அல்ல.
மந்திரங்களை ரக்ஷிக்க வேண்டிய சரீரங்களை அதற்குரிய யோக்கியதை பெறும்படியாகப் பண்ணுவதற்காகவே ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள் பல இருக்கின்றன. இவற்றை இந்த மந்திர ரக்ஷணை என்ற காரியமில்லாத மற்ற சரீரிகளுக்கு எதற்கு வைக்கவேண்டும்? உடைந்து போகிற க்ளாஸ் ஸாமான்களைப் பார்ஸலில் அனுப்ப வேண்டுமானால் அதற்கு சில விசேஷ பாதுகாப்புப் பண்ணுகிறார்கள். கூட்ஸில் மண்ணெண்ணைய், பெட்ரோல் முதலியவற்றை அனுப்பும்போது அதற்குத் தனி ஜாக்கிரதைகள் பண்ணுகிறார்கள். மற்ற ஸாமான்களுக்கு இப்படிப் பண்ணவில்லை என்பதால் அவற்றை மட்டம் தட்டுகிறார்கள் என்று ஆகுமா? இந்நாளில் ரேடியேஷனை (கதிரியகத்தை) உத்தேசித்து, ஸ்பேஸுக்கு (வானவெளிக்கு) ப் போகிறவனை முன்னும் பின்னும் ஐஸொலேட் செய்து (பிரித்து வைத்து) ரொம்பவும் ஜாக்கிரதை பண்ணவில்லையா? இதே மாதிரி, இதைவிடவும் மந்திரங்களுக்கு ரேடியேஷன் உண்டு என்று புரிந்து கொண்டால் பிராம்மணனைப் பிரித்து ஸம்ஸ்காரங்களை வைத்ததன் நியாயம் புரியும்.
லோக க்ஷேமார்த்தம் மந்திரத்தை ரக்ஷிக்க வேண்டிய ஒரு பிராம்மண புருஷ சரீரம் உருவாக வேண்டுமானால், அது கர்ப்பத்தில் வைக்கப் படுவதிலிருந்து, சில பரிசுத்திகளைப் பண்ண வேண்டியிருக்கிறது. பும்ஸுவனம், ஸீமந்தம் முதலியன இதற்குத்தான். பிறந்த பிறகும் இப்படியே.
அவரவரும் ரைட், ரைட் (உரிமை, உரிமை) என்று பறக்காமல், நல்ல தியாக புத்தியோடு, அடக்கத்தோடு லோக க்ஷேமத்துக்கான காரியங்களெல்லாம் வகையாக வகுத்துத் தரப்பட வேண்டும் என்பதையே கவனித்தால், சாஸ்திரங்கள் சில ஜாதியாருக்கோ, ஸ்திரீகளுக்கோ பக்ஷபாதம் பண்ணவேயில்லை என்பது புரியும்.
ஸ்திரீகளுக்குத் தாமாக யக்ஞம் பண்ண அதிகாரமில்லை என்பதை மட்டும் பார்த்து ஆக்ஷேபணை பண்ணுகிறவர்கள், பத்தினி இல்லாத புருஷனுக்கு யக்ஞம் செய்கிற அதிகாரமில்லை என்கிற விஷயத்தையும் கவனித்தால், ஹிந்து சாஸ்திரம் பெண்களை மட்டம் தட்டுகிறது என்று சொல்ல மாட்டார்கள். பத்தினி உள்ளவன்தான் யக்ஞம் செய்யவேண்டும்; அப்படிப்பட்ட யக்ஞ கர்மாநுஷ்டானத்தை இவன் லோக க்ஷேமத்துக்காகவும் தன் சித்த சுத்திக்காகவும் ஆரம்பிக்க வேண்டும் என்றேதான் பிரம்மசரிய ஆசிரமம் முடிந்து ஸமாவர்த்தனம் ஆனபின் விவாஹம் என்கிற ஸம்ஸ்காரத்தை வைத்திருக்கிறது.
விவாஹத்துக்கு "ஸஹ தர்ம சாரிணீ ஸம்ப்ரயோகம்" என்று பேர். அதாவது "தன்னோடுகூட தர்மத்தை நடத்திக் காட்டுகிறவளோடு பெறுகிற உத்தமமான சேர்க்கை" என்று அர்த்தம். அதாவது, இந்திரிய ஸுகம் இதில் முக்கிய லக்ஷ்யமல்ல. லோகத்தில் தர்மங்களை அநுஷ்டிப்பதுதான் லக்ஷ்யம். அதைத் தனியாக அநுஷ்டிக்கச் சொல்லவில்லை. அதற்குத் துணையாக ஒரு ஸ்திரீயைச் சேர்த்துக் கொள்ளும்படி சாஸ்திரம் சொல்கிறது. 'தர்ம பத்தினி', 'ஸஹ தர்ம சாரிணி' என்பதாகப் பொண்டாட்டியை தர்மத்தோடு ஸம்பந்தப் படுத்தித்தான் சொல்லியிருக்கிறதே தவிர, காமத்தோடு அல்ல. இதிலிருந்து சாஸ்திரங்களில் ஸ்திரீகளுக்குக் கொடுத்துள்ள உயர்ந்த மதிப்பைப் புரிந்து கொள்ளலாம்.
பிரம்மசாரி, தான் மட்டில் தன் ஆசிரம தர்மத்தைப் பண்ணுகிறான்; ஸந்நியாஸியும் அப்படியே. இல்லறம் நடத்துகிற கிருஹஸ்தாச்ரமி மட்டும் தனியாக இல்லாமல் பத்தினியுடன் சேர்ந்தே தன் தர்மத்தை, கர்மங்களைப் பண்ண வேண்டும் என்று சாஸ்திரம் வைத்திருக்கிறது. புருஷன்-மனைவி இருவருக்கும் இது பொது சொத்து. பத்தினி இருக்கிற கிருஹஸ்தனுக்கு மட்டுமே யாக யக்ஞாதிகளை சாஸ்திரத்தில் வைத்திருக்கிறதே தவிர, பிரம்மசாரிக்கும் ஸந்நியாஸிக்கும் இவை இல்லை. இந்திரிய ஸெளக்யத்துக்காக மட்டுமே பத்தினி என்றால், பத்தினி இல்லாவிட்டால் ஒருவன் யக்ஞம் பண்ணக்கூடாது என்று வைத்திருக்குமா? அவள் பக்கத்தில் நின்றால்தான் இவன் யக்ஞம் பண்ணலாம். கர்த்தாவாக அவளே நேரே யக்ஞம் பண்ண 'ரைட்' இல்லை என்பதை மட்டும் கவனிக்கும் பெண் விடுதலைக்காரர்கள், அவள் இல்லாவிட்டால் இவனுக்கும் 'ரைட்' போய் விடுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். வேதத்திலேயே இப்படி விதித்திருக்கிறது: 'பத்நீவதஸ்ய அக்னி ஹோத்ரம் பவதி". ஒரு பெரியவர் தன் பத்தினி செத்துப் போன போது, 'என் யக்ஞ கர்மாநுஷ்டானங்களையெல்லாம் கொண்டுபோய் விட்டாளே" என்று அழுதாராம்!
தர்மத்துக்கும், கர்மத்துக்கும் கைகொடுப்பவளாக அப்படிப்பட்ட ஒரு உயர்ந்த ஸ்தானம் நம்முடைய சாஸ்திரங்களில் ஸ்திரீகளுக்குக் கொடுக்கப் பட்டிருக்கிறது.

 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator