Tuesday 26 August 2014

பிள்ளையார் கண் திறந்தாரா, இல்லையா?

பிள்ளையார் கண் திறந்தாரா,
இல்லையா?

(29-08-2014 பிள்ளையார் சதுர்த்தி)

[எஸ்.ரமணி அண்ணா எழுதிய புத்தகத்தில் இருந்து
வரகூரான் நாராயணனால் தமிழில் டைப் செய்யப்பட்டது]
2012 பதிவு

பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகா பெரியவர் தமிழகத்தின்
தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்.....
தஞ்சாவூர்,திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம்,திண்டுக்கல்,
சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு,
மதுரையை நோக்கித் தன் பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தார்.
ஸ்வாமிகள். வழி நெடுகிலும் உள்ள கிராம மக்கள் தங்கள்
குழந்தை குட்டிகளுடன் திரளாக வந்து ஸ்வாமிகளை தரிசித்து
ஆசிபெற்றுச் சென்றனர். அவர்களுக்கெல்லாம் இன்முகத்தோடு
அருளாசி வழங்கினார். பழம்,கல்கண்டு ஆகியவற்றைப்
பிரசாதமாக கொடுத்துக்கொண்டே நடந்தார் ஸ்வாமிகள்.

மதுரை மாநகரை நெருங்கும் நேரம். அங்கிருந்த ஒரு கிராமத்து
ஜனங்கள் அனைவரும் ஒன்றுகூடி "பூர்ணகும்ப" மரியாதையுடன்
ஸ்வாமிகளை வரவேற்றார்கள்.அந்த ஜனங்களின் பக்தியையும்
ஆர்வத்தையும் பார்த்த ஸ்வாமிகளுக்கு ஏக சந்தோஷம்.
சாலையோரம் இருந்த ஓர் அரசுமரத்து வேரில் வந்து அவராகவே
அமர்ந்துகொண்டார். அனைவரும் கீழே விழுந்து நமஸ்கரித்தனர்.

அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் மிகுந்த பக்தியுடன் ஸ்வாமிகளை
நமஸ்கரித்தார். பிறகு, "பெரியவங்ககிட்ட ஒண்ணு 
பிரார்த்திக்கிறோம். நாங்க ஏழை சனங்கல்லாம் ஒண்ணா சேந்து,
பக்கத்துல ஒரு புள்ளயார் கோயிலை புதுசா கட்டி முடிச்சிருக்கோம்.
சாமி பாதம் அங்க படணும்னு வேண்டிக்கிறோம்....கருண பண்ணணும்!"
என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்

குதூகலத்தோடு எழுந்த ஆச்சார்யாள், "கோயில் எங்கே இருக்கு?"
என வினவினார்.

பஞ்சாயத்துத் தலைவர், "இதோ கூப்பிடு தூரத்திலதான் சாமி இருக்கு.
வந்து அருள் பண்ணணும்!" என்றார்.

ஸ்வாமிகள் மிக வேகமாக பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தார்.
மேளதாள-பூரணகும்ப மரியாதையுடன் ஆச்சார்யாள் கோயிலுக்குள்
பிரவேசித்தார். கர்ப்பக்கிருகத்துள் ஆறடி உயர சிலா ரூபமாக
விநாயகர் வீற்றிருந்தார். விக்கிரகம் கம்பீரமாக பளிச்சென்று
இருந்தது. வைத்த கண் வாங்காமல் சற்று நேரம் விநாயகரையே
பார்த்த பெரியவா,பஞ்சாயத்துத் தலைவரிடம், 

"கோயிலுக்கு கும்பாபிஷேகம் ஆயிடுத்தோ?" என்று கேட்டார்.

"இன்னும் ஆகலீங்க சாமி" என்றார் தலைவர்.

"அதான் எல்லாமே பூர்த்தியாகி இருக்கே...ஏன் இன்னும்
கும்பாபிஷேகம் நடத்தலே?" என்று கேட்டார் ஸ்வாமிகள்.

பஞ்சாயத்துத் தலைவர் பவ்வியமாக பதில் சொன்னார்.;
"எல்லாமே பூர்த்தி ஆயிடுச்சு சாமி. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளாற
மகாத்மா காந்தி இந்த வழியா மதுரைக்கு வாராறாம்.அவுரு
வர்றன்னிக்கு, 'அவருக்கு முன்னால வெச்சே கும்பாபிஷேகத்த
நடத்த ஏற்பாடு பண்ணித் தர்றோம்'னு மதுரையைச் சேர்ந்த சில
பெரிய மனுஷங்க உறுதி கொடுத்திருக்காங்க! அதனாலதான்
காந்தீஜீக்காகக் காத்துக்கிட்ருக்கோம்!"

ஆச்சார்யாள் தனக்குள் சிரித்துக்கொண்டார். இரண்டு நிமிஷம்
கண்ணிமைக்காமல் விநாயகரையே பார்த்துவிட்டுச் சொன்னார்.

"அதுக்கு அவசியம் இருக்காது போலத் தோண்றதே!
கணபதி கண்ணத் திறந்து நன்னா பாத்துண்ருக்காரே...இனிமே
கும்பாபிஷேகத்த தாமசப்படுத்தப்படாது. ஒடனேயே நல்ல நாள்
பார்த்து பண்ணிடுங்கோ."

உடனே பஞ்சாயத்துத் தலைவர், "இல்லீங்க சாமி! கண் தொறக்கிற
சடங்கு விநாயகருக்கு இன்னும் நடக்கலீங்க சாமி! நீங்க இப்படி
சொல்றத பாத்தா ஒண்ணும் புரியலீங்களே.." என்று குழம்பினார்.

ஸ்வாமிகள் மீண்டும் சிரித்துக்கொண்டே, "இது நானா சொல்லலே!
கணபதி கண்ணைத் திறந்து நன்னா "ஸ்பஷ்டமா" பார்த்துண்ருக்கார்.
சீக்கிரமே கும்பாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் பண்ணுங்கோ!
காந்தி வந்தா நன்னா தரிசனம் பண்ணிட்டுப் போகட்டுமே" என்று
கூறினார். குழுமியிருந்த ஜனங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
அமைதியோடு காத்திருந்தனர்.

பஞ்சாயத்துத் தலைவருக்கும் குழப்பம் தீரவில்லை. உடனே
ஆளனுப்பி விநாயகர் சிலையை வடிவமைத்த ஸ்தபதியை
வரவழைத்தனர்.அவரிடம் ஆச்சார்யாள் சொன்ன விஷயம்
தெரிவிக்கப்பட்டது.

சிற்பியும் அடித்துச் சொன்னார்; "இல்லீங்க ஸ்வாமி..இன்னும்
விநாயகருக்கு கண் தொறக்கலீங்க. தொறந்தா விக்கிரகத்தச்
செதுக்கின நான்தானே தொறக்கணும்..இன்னும் அது ஆவுலீங்க.."

மூன்று தடவை ஆச்சார்யாள் காலில் விழுந்து 
கை கட்டி நின்றார் சிற்பி.

மீண்டும் ஒருமுறை விக்கிரகத்தையே உற்று நோக்கிய ஸ்வாமிகள்
"மகா கணபதிக்கு நன்னா கண் தெறந்தாச்சு! அவர் சந்தோஷமா
பாத்துண்டிருக்கார். இனிமேலும் தாமதிக்கிறது நல்லதில்லே.
சீக்கிரமா ஒரு நல்ல நாள் பாத்து கும்பாபிஷேகத்த நடத்துங்கோ..
க்ஷேமம் உண்டாகும்" என்று சொல்லிவிட்டு வேகவேகமாகப்
புறப்பட்டுவிட்டார் ஆச்சார்யாள். பரிவாரம் பின்தொடர்ந்தது.
ஆச்சார்யாளை அந்த ஊர் எல்லை வரை சென்று வழி அனுப்பி
வைத்துவிட்டுத் திரும்பினர்,அத்தனை பேரும்.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்த ஊர் கிராமப் பஞ்சாயத்து சபை'
கூடியது. ஆச்சார்யாள் கூறிவிட்டுப் போன விஷயம் குறித்து
அலசி ஆராயப்பட்டது. விநாயகர் விக்கிரகத்தைச் செதுக்கிய
சற்று வயதான ஸ்தபதி அடித்துச் சொன்னார்.
"ஆச்சார்ய ஸ்வாமிங்களுக்கு ஞான திருஷ்டில எல்லா
விஷயங்களும் தெரிஞ்சுடும்.இருந்தாலும் எங்கையால் நான்
இன்னும் கண்ண தொறக்கலே.சாமி எப்டி சொல்றாங்கனு
தெரியலே.நானும்கூட விக்கிரகத்துகிட்ட போயி உன்னிப்பா
கவனிச்சுப் பாத்துட்டேன்.அப்டி ஆனதா தெரியலீங்க....
இப்ப என்ன பண்றது?"

அங்கே மௌனம் நிலவியது. ஒருவரும் வாய் திறக்கவில்லை.
திடீரென்று பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க உள்ளூர்ப் பையன்
ஒருவன் அந்த இடத்துக்கு ஓடி வந்தான்.கை கட்டி நின்றான்.

அவனைப் பார்த்த தலைவர், "தம்பி! ஏன் இப்படி ஓடி வர்றே?
என்ன விஷயம்?" என்று கேட்டார்.

உடனே அந்தப் பையன் "தலைவரே! கோயில் விநாயகர் சிலை
பத்தி எனக்கு ஒரு விஷயம் தெரியும்..சொல்லலாங்களா?"
என்று கேட்டான் பவ்யமாக.

"ஒனக்கு என்ன தெரியும்..சொல்லு தம்பி!" என்று மிக ஆர்வம்
காட்டினார் தலைவர். கூட்டமும் அந்தப் பையனையே
பார்த்துக் கொண்டிருந்தது.

பையன் பேச ஆரம்பித்தான்; "ஐயா தலைவரே! எனக்கு தெரிஞ்ச
உண்மையை சத்தியமா சொல்றேங்க. அந்த சாமியார் சாமி
[ஆச்சார்யாள்] 'புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு'னு
சொல்லிட்டுப் போனது மெய்தாங்க! எப்படீன்னா ஒரு பத்து
நாளுக்கு முந்தி ஒரு நாள் உச்சி வெயில் நேரமுங்க.இதோ
ஒக்காந்துருக்காரே..புள்ளையார் விக்கிரகத்தைச் செஞ்ச தாத்தா..
இவரோட பேரப் பையன்..என் சிநேகிதன். என்ன வேலை
பண்ணான் தெரியுமா? இவங்க தாத்தா சிலைகளின் கண்ண
தொறக்கறத்துக்கு வெச்சிருக்கிற சின்ன உளியையும்,சுத்தியையும்
எடுத்துக்கிட்டு,எங்களையும் கூட்டிக்கிட்டு கோயிலுக்குப் போனான்.

"இதோ பாருங்கடா! எங்க தாத்தா இப்புடித்தான் சிலைங்க கண்ணைத்
தொறப்பாருன்'ன்னு சொல்லிகிட்டே,'புள்ளையாரே,கண்ணத்தொற...
புள்ளையாரே,கண்ணத் தொற!'னு அவனும் சொல்லி, எங்களையும்
ஒரக்க சொல்லச் சொல்லி, "டொக்கு..டொக்குனு" உளிய புள்ளயாரின்
ரண்டு கண்ணுலயும் வச்சு தட்டினான்.."புள்ளையாருக்கு கண்
தொறந்தாச்சு"னு எல்லாப் பசங்களும் குதிச்சு ஆடினோம்.இந்த
விஷயம் ஊர்ல ஒருத்தவங்களுக்கும் தெரியாது. நாங்களும் வெளியிலே
மூச்சு வுடலே! இது தாங்க நடந்துச்சு....எங்களை மன்னிச்சுருங்க."

பிரமிப்போடு அமர்ந்திருந்தது கூட்டம். பஞ்சாயத்துத் தலைவர்கண்களில்
நீர் சுரந்தது.ஆச்சார்யாளின் மகிமையைப் பார்த்து அந்த ஊரே வியப்பில்
ஆழ்ந்தது. சிற்பியின் பேரனுக்கு எட்டு வயதிருக்கும். பஞ்சாயத்து அந்தச்
அழைத்து விசாரித்தது. விநாயகருக்கு, தான் கண்களைத் திறந்துவிட்டதை
ஒப்புக் கொண்டான். எல்லோரும் கோயிலுக்கு ஓடிச் சென்று விநாயகரை
விழுந்து வணங்கினர். சிற்பி, ஒரு பூதக் கண்ணாடியின் உதவியோடு
கணபதியின் கண்களை நன்கு பரிசீலித்தார்.

மிக அழகாக "நேத்ரோன் மீலனம்" [கண் திறப்பு] செய்யப்பட்டிருந்ததைப்
பார்த்து ஆச்சர்யப்பட்டார்.

ஊரே திரண்டு ஆச்சார்யாள் சென்ற திசையை நோக்கி ஓடியது. அடுத்த
கிராமத்தில் சாலை ஓரமிருந்த ஒரு பெரிய ஆலமர நிழலில்
பரிவாரங்களுடன் இளைப்பாறிக்கொண்டு இருந்தார் ஸ்வாமிகள்.

அனைவரும் ஓடிப் போய் ஸ்வாமிகள் காலில் விழுந்து எழுந்தனர்.
அந்தப் பஞ்சாயத்துத் தலைவரும்,சிற்பியும் கேவிக்கேவி
அழ ஆரம்பித்துவிட்டனர்.

இவர்களைப் பார்த்த அந்த பரப்பிரம்மம் சிரித்துக்கொண்டே கேட்டது;
"புள்ளையாருக்குக் கண் தெறந்தாச்சுங்கறத பிரத்தியட்சமா
தெரிஞ்சுண்டுட்டேளோல்லியோ? போங்கோ....போய் சீக்கிரமா
கும்பாபிஷேகத்த நடத்தி முடியுங்கோ. அந்த பிராந்தியத்துக்கே
க்ஷேமம் உண்டாகும்."

சிரித்தபடியே கை தூக்கி ஆசிர்வதித்தது அந்த நடமாடும் தெய்வம்


 परोपकाराय फलन्ति वृक्षा: परोपकाराय वहन्ति नद्यः।
 परोपकाराय दुहन्ति गावः परोपकाराय इदं शरीरम्।।
            
 
 
                                          ( hari krishnamurthy K. HARIHARAN)"
'' When people hurt you Over and Over
think of them as Sand paper.
They Scratch & hurt you,
but in the end you are polished and they are finished. ''
யாம் பெற்ற இன்பம் பெருக  வையகம் 
follow me @twitter lokakshema_hari

No comments:

Post a Comment

My Headlines

IF YOU FEEL IT IS NICE AND GOOD SHARE IT WITH OTHERS, IF NOT WRITE COMMENTS AND SUGGESTIONS SO THAT I CAN FULFILL YOUR EXPECTATIONS.

my recent posts

PAY COMMISSION Headline Animator